Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":

Home -- Tamil -- 08. Good News -- 4 Why can you trust the Bible?

This page in: -- Chinese -- English -- French -- German? -- Indonesian -- TAMIL -- Turkish

Previous lesson -- Next lesson

08. இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்

4 - நீங்கள் எப்படி வேதாகமத்தை நம்ப முடியும்?



சவால்: பல முஸ்லிம்கள் குரானை ஒருபோதும் தங்கள் கரங்களினால் தொட்டதில்லை. காரணம் அவர்கள் மேலோட்டமாக இஸ்லாத்தைத் தழுவிய நாட்டில் வாழ்பவர்களாகவோ அல்லது வளர்ச்சியடையாத பகுதியில் வாழ்பவராகவோ இருப்பார்கள். மேலும் சில முஸ்லிம்கள் இஸ்லாமையும் குரானையும் விட்டுவிட்டு சத்தியத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மேலும் சில முஸ்லிம்கள் வேதாகமம் ஒருபோதும் திருத்தப்படவில்லை என்பதை குரான் மூலமாக அறிந்துகொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட முஸ்லிம்களும் இன்னும் சிலரும், “நான் ஏன் வேதாகமத்தை நம்ப வேண்டும்? நான் வேதாகமத்தை நம்ப முடியுமா? வேதாகமம் தன்னைப் பற்றி என்ன கூறுகிறது? வேதாகமத்தை நம்புவதற்குரிய ஆதாரங்கள் அதில் ஏதேனும் உண்டா?” போன்ற கேள்விகளைக் கேட்கின்றனர்.

பதில்: வேதாகமத்தின் இறைவன் பேசாதவர் அல்ல. அவர் குருட்டுத் தனமான விதியைப் போல செயல்படுபவருமல்ல. அவர் உயிருள்ளவராகவும் பேசுகிறவராகவும் இருக்கிறார். அவர் பேசுகிறார், பதிலுரைக்கிறார், பதிற்செயல்புரிகிறார், தீர்ப்புச் செய்கிறார், கட்டளையிடுகிறார், வாக்களிக்கிறார், உற்சாகப்படுத்துகிறார், ஆறுதல் அளிக்கிறார். வேதாகமம் இறைவனால் எழுதப்படாமல் அவருடன் வாழ்ந்த மக்களால் எழுதப்பட்டது. இறைவனுடைய பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின் கீழாக இறைவன் அவர்களிடத்தில் பேசியவற்றை அவர்கள் பதிவுசெய்தார்கள்; இறைவன் அவர்கள் நடுவில் செய்த காரியங்களை அவர்கள் தங்கள் சொந்த வார்த்தைகளில் விளக்கியிருக்கிறார்கள். நீங்கள் வேதாகமத்தை வாசித்து, அது உங்களுக்கு என்ன சொல்லுகிறது என்பதை நீங்கள் நம்புவீர்களாயின் நீங்களும் இறைவன் சொன்ன, செய்த காரியங்களுக்குச் சாட்சிகளாகலாம். இவ்விதமாக இறைவனுடைய முந்தைய செயல்கள் உங்கள் வாழ்க்கையிலும் உண்மையாகும். இவ்விதமாக வேதாகமம் ஒரு வரலாற்றுப் புத்தகமாக இல்லாமல் உங்கள் வாழ்க்கையை மாற்றும் பரிசுத்த எழுத்துக்களாயிருக்கிறது. ஆனால் அது நடைபெறுவதற்கு வேதாகமத்தில் இறைவனுடைய மனிதர்களால் எழுதப்பட்டவற்றை நீங்கள் வாசிப்பதன் மூலமாக அவர்களுக்குச் செவிகொடுக்க வேண்டும். வேதாகமத்தை வாசியுங்கள் அல்லது அதற்குச் செவிகொடுங்கள்; அப்போது நீங்களே வேதாகமம் நம்பத் தகுந்ததா என்பதை கண்டறிவீர்கள்.

அதை நான் செய்தேன். அதனால்தான் நான் வேதாகமத்தை நம்புகிறேன். இறைவனுடைய செயல்களையும் அவற்றைக் குறித்த மற்றவர்களுடைய சாட்சிகளையும் பற்றிய முக்கிய போதனைகளையும் ஆழமான கருத்துக்களையும் இறைவனுடைய சாட்சிகள் வேதாகமத்தில் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதை நான் கண்டுகொண்டேன். நீங்களும் வேதாகமத்தை அறிந்து அதை நம்ப வேண்டும் என்பதற்காக நான் அவற்றில் சிலதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

-- இறைவனுடைய கட்டளைகளைப் பற்றி மோசே எழுதகிறார்: நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி. நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம் (உபாகமம் 4:2). வேதாகமத்தை நம்பும் எவரும் அதைத் திருத்தும்படியாக அதிலிருந்து எதையும் கூட்டவோ குறைக்கவோ ஒருபோதும் முன்வர மாட்டார்கள். அவ்வாறு செய்யக்கூடாது என்று இறைவனே நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அவர் சொல்வதைத்தான் நாம் செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார்!

-- இறைவனுடைய செயல்களையும் வார்த்தைகளையும் பற்றி அரசனும் தீர்க்கதரிசியுமான தாவீது எழுதுகிறார்: கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது. (சங்கீதம் 33:4). வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள இறைவனுக்கு அவர் மோசேக்கு வெளிப்படுத்திய ஒரு பெயர் இருக்கிறது. எபிரெய மொழியில் அது “யாவே” என்பதாகும். அவருக்கு உரிய கனத்தைச் செலுத்தும்படியாக அது ஆங்கிலத்தில் ஆண்டவர் என்று பொருள் வரும் வார்த்தை பெரிய எழுத்துக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது (கஞதஈ). வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இறைவனுடைய பெயராகிய “யாவே” என்பது இறைவன் உண்மையானவர், நேர்மையானவர் என்பதை எடுத்துக்கூறுகிறது. அவர் சொல்லுகிற காரியம், நண்பர்களிடத்தில் சொல்லப்பட்டாலும் சரி, எதிரிகளிடத்தில் சொல்லப்பட்டாலும் சரி, அவர் யாரையும் ஏமாற்றுவதில்லை. அவர் எப்போதும் முழுமையான உண்மையையே பேசுகிறார். அவரில் பொய்யிற்குரிய எந்த அடையாளமும் இருப்பதில்லை. அவர் ஒரு வாக்குறுதியைக் கொடுத்தால் அதை நிச்சயமாக நிறைவேற்றுவார். அதைத்தான் தாவீது தன்னுடைய வாழ்க்கையில் அனுபவித்தார். அதனால்தான் அவர் வேதாகமத்தில் உள்ள இறைவனுடைய செயல்களையும் வார்த்தைகளையும் நம்பினார்.

-- இறைவன் தீர்க்கதரிசியாகிய எரேமியாவுடன் தம்முடைய வார்த்தையைப் பற்றிய ஒரு தனிச்சிறப்பான கலந்துரையாடலை மேற்கொள்கிறார்: பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்; வாதுமை மரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது கர்த்தர்: நீ கண்டது சரியே; என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார். (எரேமியா 1:11-12). இந்த கலந்துரையாடலில் இருந்து நாம் இரண்டு உண்மைகளைக் கற்றுக்கொள்கிறோம்: இறைவனுடைய வாக்குறுதிகள் தவறாமல் நிறைவேறும். அவர் தம்முடைய சர்வ வல்லமையினாலும் மகத்துவத்தினாலும் அவருடைய வார்த்தை நிறைவேறுகிறதா என்பதைக் கவனிக்கிறார். வேதாகமத்தில் நாம் இறைவனுடைய வார்த்தைகளை மட்டும் காண்பதில்லை. தம்முடைய வார்த்தைகளைச் சொல்லி அவற்றை நிறைவேற்றுகிற இறைவனையே காண்கிறோம். என்னுடைய பாவத்தின் நிமித்தமாக என்னை அவர் தண்டிப்பாரானால் நான் நிச்சயமாக அழிந்துபோவேன். அவர் தம்முடைய மீட்பின் பலியினால் என்னுடைய பாவங்களை மன்னிப்பாரானால் நான் நிச்சயமான என்னுடைய தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவேன். இந்த மறைவான வல்லமைதான் வேதாகமத்தில் காணப்படுகிறது.

-- கிறிஸ்து வனாந்தரத்தில் நோன்பிருந்தபோது, பிசாசினால் சோதிக்கப்பட்டார். பிசாசைத் துரத்துவதற்கு கிறிஸ்து தவ்ராத்தின் வசனங்களை நம்பி, அதை எதிர்கொண்டார். மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். (மத்தேயு 4:4). இதன் மூலம் பிசாசின் சோதனையை கிறிஸ்து வெற்றிகரமாக மேற்கொண்டார். நீங்கள் வேதாகமத்திலுள்ள இறைவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டால் நீங்களும் வாழ்வைப் பெற்று சாத்தானை மேற்கொள்ள முடியும்.

-- இறைவனுடைய தூதுவராகிய கிறிஸ்துவே, மாம்சத்தில் வந்த இறைவனுடைய வார்த்தையாக இருக்கிறார். ஆகவே அவர் சொன்னார்: வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. (மத்தேயு 24:35). இறைவனுடைய வார்த்தை ஒழிந்து போகாததைப் போல கிறிஸ்துவின் வார்த்தையும் ஒழிந்து போவதில்லை. ஏனெனில் கிறிஸ்துவே இறைவனுடைய வார்த்தையாக இருக்கிறார். கிறிஸ்துவின் வார்த்தைகள் இன்ஜீலில் எழுதிவைக்கப்பட்டுள்ளது.

-- அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதுகிறார்: கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது. (ரோமர் 1:16). கிறிஸ்துவின் நற்செய்தியை விசுவாசியுங்கள். அப்போது நீங்கள் பாவம், பிசாசு, மரணம், இறைவனுடைய கோபம் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டு, இறைவனுடைய நற்செய்தியின் இந்த வல்லமையை நீங்கள் அனுபவிப்பீர்கள்!

-- தீர்க்கதரிசியும் அப்போஸ்தலருமாகிய யோவான் இறைவனிடத்தில் பெற்றுக்கொண்ட வெளிப்பாட்டை எழுதிவைத்துள்ளார்: இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். (வெளிப்படுத்தின விசேஷம் 22:18-19). யோவானுடைய இந்த எச்சரிப்பின் காரணமாகவே கிறிஸ்தவர்கள் தங்கள் வேதாகமத்தை ஒருபோதும் திருத்துவதில்லை. யார் வேதாகமத்தை மாற்றுகிறார்களோ அவர்கள் பரலோகத்தை இழந்து, நரகத்தைப் பெற்றுக்கொள்வார்கள். யார் இதைச் செய்வார்கள்?

நல்ல செய்தி: நீங்கள் வேதாகமத்தை நம்ப முடியும்! ஏன்? ஏனெனில் இறைவனுடைய வார்த்தை உண்மையும் நேர்மையுமானது. வேதாகமத்திலுள்ள இறைவனுடைய வார்த்தை அவருடைய சத்தியத்தினால் நிறைந்தது. வேதாகமத்திலுள்ள அவருடைய செயல்களைக் குறித்த சாட்சிகள் அவருடைய மாறாத உண்மைத் தன்மையை வெளிப்படுத்துகிறது. நீங்கள் வேதாகமத்திலுள்ள இறைவனுடைய வார்த்தையை விசுவாசித்தால், இறைவனுடைய வல்லமையினால் விடுதலையையும், சுகமாக்குதலையும், பாதுகாப்பையும் அனுபவிப்பீர்கள்.

சாட்சி: என்னுடைய பெயர் இம்மானுவேல். நான் வடமேற்கு சீனாவிலிருந்து வரும் யூகுர் (Uyghur) இனத்தைச் சேர்ந்தவன். நான் சிறுவனாயிருக்கும்போது, இஸ்லாமியராகிய எனது தந்தை என்னை குரான் பள்ளிக்கு அனுப்பினார். நான் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பாகவே குரானின் 70 சதவீதமான பகுதிகளை அரபியில் மனப்பாடம் செய்துவிட்டேன். என்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த பிறகு எங்கள் மாகாணத் தலைநகரத்திலுள்ள பல்கலைக் கழகத்திற்குப் படிக்கச் சென்றேன். அங்கு நான் என்னுடைய மக்களின் மொழியையும் வரலாற்றையும் படித்தேன். மத்திய காலத்தில் என்னுடைய மக்கள் பெரும்பான்மையும் கிறிஸ்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன். அதன் பிறகு அவர்கள் சூபி இஸ்லாத்தினால் பாதிக்கப்பட்டார்கள். பிறகு குரானுடைய பாதிப்பிற்கு உட்பட்டார்கள். நான் என்னுடைய மக்களின் கிறிஸ்தவ ஆரம்பங்களின் மீது ஆர்வம் கொண்டேன். பல்கலைக்கழகத்தில் நான் ஒரு வெளிநாட்டுக் கிறிஸ்தவரைச் சந்தித்தேன். வேதாகமத்தைப் பற்றியும் கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதைப் பற்றியும் பல காரியங்களை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். இன்றுள்ள வேதாகமத்தையும் மத்தியகாலத்தில் சகத்தாய் (Chaghatai) என்ற எங்களுடைய மொழியில் எழுதப்பட்டிருந்த பழைய வேதாகமத்தையும் நான் ஒப்பிட்டுப் படித்தேன். பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக முதல்முறையாக என்னுடைய மக்களுக்காக எங்கள் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட காலத்திலிருந்து வேதாகமம் மாற்றமடையவில்லை என்றும் எங்களுடைய மொழிதான் மாற்றமடைந்துள்ளது என்றும் நான் கண்டுகொண்டேன். இன்றைய யூகுர் இன மக்கள் தங்கள் மொழியிலுள்ள வேதாகமத்தை இப்போது புரிந்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. வேதாகமத்தைப் படித்தபோது அதிலிருந்து புறப்பட்ட வல்லமையை நான் கவனித்தேன். நான் இறைவனுடைய இந்த வல்லமைக்குத் திறந்துகொடுத்து, இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை விசுவாசித்தேன். இன்று நான் வேதாகமத்தை தற்கால யூகுர் மொழியில் பெயர்த்தெழுதுவதற்கு உதவி வருகிறேன். நான் அவ்வாறு வேதாகமத்தை மொழிபெயர்க்கும்போது அதிலிருந்து எந்த வார்த்தையையும் எடுத்துவிடாதபடியும் எந்த வார்த்தையையும் சேர்த்துவிடாதபடியும் கவனமாகப் பார்த்துக்கொள்கிறேன்.

விண்ணப்பம்: உண்மையும் நேர்மையுமுள்ள வேதாகமத்தின் இறைவன் நீர். உம்முடைய வார்த்தைகளையும் செயல்களையும் உண்மையாகவும் நேர்மையாகவும் பதிவு செய்யும்படி நீர் ஆண்களையும் பெண்களையும் அழைத்தபடியால் உமக்கு நன்றி. நான் உம்முடைய வார்த்தையின் உண்மைகளையும் உம்முடைய நேர்மையான செயல்களையும் என்னுடைய வாழ்வில் அனுபவிக்க எனக்கு உதவி செய்யும்.

கேள்விகள்: நாம் எவ்வாறு வேதாகமத்தை நம்ப முடியும்? வேதாகமத்திலுள்ள இறைவார்த்தையிலிருந்து மேற்கோள்காட்டப்பட்ட எந்த போதனை உங்களில் தாக்கத்தை உண்டுபண்ணியது? நீங்கள் வேதாகமத்தை நம்புகிறீர்களா?

மனப்பாடம்: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. (யோவான் 6:68 – அப்போஸ்தலனாகிய பேதுருவின் வார்த்தைகளை அப்போஸ்தலனாகிய யோவான் எழுதுகிறார்).

www.Grace-and-Truth.net

Page last modified on June 07, 2013, at 11:17 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)