Home -- Tamil -- 08. Good News -- 10 Why does the Koran deny the cross?
Previous lesson -- Next lesson
08. இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்
10 - குரான் சிலுவையை ஏன் நிராகரிக்கிறது?
சவால்: இஸ்லாத்தை விட்டு இயேசு கிறிஸ்துவை பின்பற்றும் முஸ்லிம்களின் எண்ணிக்கை இன்று கொஞசமல்ல. ஆனாலும் சில வேளைகளில் அவர்கள் மறுபடியும் இஸ்லாத்திற்குத் திரும்பும்படியாக சோதிக்கப்படுகிறார்கள். இஸ்லாமிலிருந்து மனம்மாறிய இவர்களை அப்படிப்பட்ட சூழ்நிலைக்காக ஆயத்தப்படுத்துவது சாத்தியமா? குரான் சிலுவையை மறுதலிப்பதை மீண்டும் இந்த முஸ்லிம்கள் விசுவாசிக்காதபடிக்கு அவர்களுக்கு உதவிசெய்யும் வாதங்கள் ஏதேனும் உண்டா?
பதில்: ஆம். அப்படிப்பட்ட வாதங்கள் இருக்கிறது. கிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை என்றும் அதற்கு மாறாக உண்மையான கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதுபோல யூதர்களுக்குக் காண்பிக்கப்பட்டது என்றும் குரான் கூறுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
“இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய- மர்யமின் குமாரர் ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டவர்கள்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை. அவர்கள் அவரைச் சிலுவையில் அறையவுமில்லை; ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவர் ஒப்பாக்கப்பட்டார்; மேலும், இ(வ்விஷயத்)தில் அபிப்பிராயபேதம் கொண்டவர்கள் அதில் சந்தேகத்திலேயே இருக்கிறார்கள்; வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; மேலும் அவர்கள் உறுதியாக அவரைக் கொல்லவே இல்லை. ஆனால், அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக்கொண்டான்; இன்னும் அல்லாஹ் வல்லமை மிககோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.” (சுரா அன்னிஸாவு 4:157-158).
இந்தக் கருத்துக்கள் இஸ்லாமுடைய தோற்றத்திற்கு முன்பாக ஞானமார்க்கக் கிறிஸ்தவர்களுடைய கருத்துக்கள் ஆகும். அவர்கள் கிறிஸ்தவ விசுவாசத்தை ஞானமார்க்கப் போதனைகளுடன் கலந்து போதித்தார்கள். அவர்கள் அவ்வாறு செய்த காரணத்தினால் திருச்சபைப் பிதாக்களினால் கண்டிக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, துர்ப்போதகர்கள் என்று அறிவிக்கப்பட்டார்கள். அவர்கள் எழுதிய புத்தகங்கள் இன்று நம்மிடம் இல்லை. ஆனால் அதில் அவர்கள் துர்ப்போதனைகளைப் போதித்த சபைப்பிதாக்களின் எழுத்துக்களை மேற்கோள் காட்டியிருந்தார்கள். சிரிய கிறிஸ்தவரும் ஞானமார்க்கப் போதனைகளைப் பின்பற்றியவருமாகிய கி. பி. 125 முதல் 160 காலப்பகுதியில் வாழ்ந்தவர் பேசிலிடஸ் என்பவர் ஆவர். அவர் அலெக்சாண்டிரியாவில் ஒரு தலைவராயிருந்தார். இரேனியஸ் என்ற சபைப் பிதா (லியோன் நகரத்தைச் சேர்ந்தவர்), “துர்ப்போதனைகளுக்கு எதிரானவைகள்” என்ற தன்னுடைய நூலில் (புத்தகம் 1, 24, 4-ல்) பேசிலியஸ் இவ்விதமாக போதித்ததாக எழுதுகிறார்:
சிலுவையைச் சுமக்கும்படி வற்புறுத்தப்பட்ட சிரேனே ஊரானாகிய சீமோன் என்பவர்தான் பாடுபட்டார் (மத்தேயு 27:32). சிரேனே ஊரானாகிய சீமோன் இயேசுவைப் போல தோற்றமுள்ளவனாக கிறிஸ்துவினால் மாற்றப்பட்டார். அதனால் யூதர்கள் அறியாமையுடன் தவறுதலாக அவரை இயேசுவுக்குப் பதிலாக சிலுவையில் அறைந்தார்கள். ஆனால் சீமோனுடைய உருவத்தில் காட்சியளித்த இயேசு அவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார். ஏனெனில் அவர் எல்லாவற்றிலும் இருக்கும் வல்லமையாகவும், பிறக்காத பிதாவின் சிந்தையாகவும் இருந்த காரணத்தினால் தம்முடைய விருப்பம்போல தம்முடைய உருவத்தை மாற்றிக்கொள்ளக் கூடியவராயிருந்தார். இவ்விதமாக அவர் அவர்களுடைய கரத்திலிருந்து தப்பி, அவர்களுக்குக் காணப்படாதவராக, அவர்களைப் பரிகசித்துக்கொண்டே அவரை அனுப்பியவரிடத்தில் ஏறிச்சென்றார்…” (Translated from German in: Norbert Brox, "Irenäus von Lyon. Epideixis, Adversus Haereses, volume 1. Fontes Christiani, volume 8/1", 1993 (Herder, Freiburg) page 201.)
இந்த மேற்கோளிலிருந்து கிறிஸ்துவின் சிலுவையை மறுதலிக்கும் காரியம் முகமதுவின் கண்டுபிடிப்போ அல்லது அல்லாஹ் அவருக்கு வெளிப்படுத்தியதோ அல்ல என்பதை வெளிப்படுத்துகிறது. மாறாக முகமது ஞானவாதக் கிறிஸ்தவர்களிடமிருந்து கேட்டதையே கூறியிருக்கிறார். இவ்விதமாக இஸ்லாத்திற்கு முந்தைய காலத்திலிருந்த கிறிஸ்தவ துர்ப்போதனைகளை குரான் தன்னில் கொண்டிருக்கிறது. குரானில் இருக்கிற இவ்விதமான துர்உபதேசங்களுக்கு நிகரானவற்றை இன்று எகிப்திய மொழிபெயர்ப்புகளில் காணமுடிகிறது. கி. பி. 200-ம் ஆண்டுப் பகுதியில் ஞானவாதக் கிறிஸ்தவர்களினால் எழுதப்பட்ட “பேதுருவின் வெளிப்படுத்தல்” என்ற நூலில் கீழ்க்காண்பவற்றை ஒருவர் வாசிக்கலாம்:
“(கிறிஸ்து பேதுருவிடம் பேசுகிறார்): “எனவே, குற்றமற்ற பிதாவின் ஆலோசனையின் முடிவைக் குறித்த தரிசனத்திற்குப் போவோம்: இதோ, என் மீது சொல்லப்பட்ட தண்டனையைத் தங்கள் மீது பெற்றுக்கொண்டவர்கள் வருவார்கள். அவர்கள் அவர்களை வெட்கப்படுத்துவார்கள். ஆனால் அவர்கள் என்னைத் தொட முடியாது. ஆனால் பேதுருவே, நீ அவர்கள் நடுவில் நிற்பாய். நீ பயப்படாதே! உன்னுடைய கோழைத்தனத்தின் காரணமாக நான் இதைச் சொல்கிறேன். (பக்கம் 81). காணப்படாத ஒருவர் அவர்களிடம் வந்திருப்பதால், அவர்களுடைய மனங்கள் மூடப்படும். இவற்றை அவர் சொன்னபோது அவர்கள் அவரைப் பிடிப்பதைப் போல கண்டேன். அப்போது நான், “கர்த்தாவே நான் பார்ப்பது என்ன? உம்மைத்தான் அவர்கள் பிடிக்கிறார்களா? அல்லது, அந்த மரங்களின் அருகில் நின்றுகொண்டு அவர்களைப் பார்த்துச் சிரிப்பவர் யார்? அவர்கள் வேறொருவருடைய கால்களையும் கைகளையும்தான் அவர்கள் அறைகிறார்களா?” இரட்சகர் என்னிடம், “மரங்களுக்கு அருகில் நின்று, மகிழ்வுடன் சிரித்துக்கொண்டிருப்பவர்தான் உயிரோடிருக்கும் இயேசு. ஆனால் அவர்கள் கைகளிலும் கால்களிலும் ஆணியடிக்கிறார்களே அவர் இயேசுவைப் போன்ற தோற்றம் மட்டுமே. அதுதான் "மீட்கும் பொருள்'. அவரை மட்டுமே அவர்கள் வெட்கப்படுத்த முடியும். அது அவருடைய தோற்றமாக மாறியிருக்கிறது. அவனையும் என்னையும் நன்றாகக் கவனித்துப்பார். ” ஆனால் நான் போதிய அளவு அதைப் பார்த்த பிறகு அவரிடம் சொன்னேன்: “ஆண்டவரே யாரும் உம்மைப் பார்க்கவில்லை. நாம் இவ்விடத்தைவிட்டு ஓடிப்போவோம்.” ஆனால் அவர், “அவர்கள் குருடர்கள் என்று நான் ஏற்கனவே உனக்குச் சொல்லியிருக்கிறேன். அவர்களை விட்டுவிடு! அவர்கள் பேசும் காரியங்களைப் பற்றி அவர்கள் எவ்வளவு அறிவற்றிருக்கிறார்கள் என்பதை நீ பார். (பக்கம் 82). என்னுடைய தாசனுக்குப் பதிலாக தங்கள் வீண் மகிமையின் மகனை அவர்கள் வெட்கப்படுத்தினார்கள்” என்றார். அப்போது நான் பார்த்தேன். அவரைப் போல ஒருவர் என்னை நோக்கி வந்தார். அவர் மரங்களின் அருகில் நின்று சிரித்துக்கொண்டிருந்தவர் போல் இருந்தது. அவர் பரிசுத்த ஆவியானவரினால் பின்னப்பட்டவராயிருந்தார். அவர்தான் இரட்சகர். அவர்களைச் சுற்றிலும் வார்த்தைகளால் வருணிக்க இயலாத மாபெரும் வெளிச்சம் சூழ்ந்திருந்தது. பெருந்திரளான, கண்ணுக்குப் புலப்படாத தூதர்கள் அவர்களைப் புகழ்ந்துகொண்டிருந்தார்கள். ஆனால் அவர் மகிமையடைந்தவராக தன்னை வெளிப்படுத்தும்போது, அவரைக் கண்டவன் நானே. அவர் என்னை நோக்கி, “பெலன்கொள்! ஏனெனில் இந்த மறைவான இரகசியங்களை அறியும்படி உனக்குத்தான் அருளப்பட்டிருக்கிறது. அவர்களால் சிலுவையில் அறையப்பட்டவன் முதல் பேறானவன், பிசாசுகளின் இருப்பிடம், கற்சாடி (சாலமோன் பிசாசுகளைக் கற்சாடிகளில் போட்டு அடைத்து வைத்தான் என்று ஒரு புனைக்கதை இருக்கிறது). அந்த கற்சாடியில் அவை வாழ்கின்றன. அவன் ஏலோஹிமின் மனிதனாகவும், சிலுவையின் மனிதனாகவும், நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவனாகவும் இருக்கின்றான். ஆனால் அவருக்கு அருகில் நிற்பவர் உயிருள்ள இரட்சகர். முன்பு அவரில் இருந்தவர். அவர் பிடிக்கப்பட்டு (மீண்டும்) விடுவிக்கப்பட்டவர். தனக்குத் தீமைசெய்ய முனைந்தவர்கள் இப்போது தங்களுக்குள்ளேயே பிரிந்திருப்பதை (இப்போது) அவர் பார்ப்பதால் இப்போது அவர் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டிருக்கிறார். (பக்கம் 83). அவர்கள் குருடர்களாகப் பிறந்தவர்கள் என்பதை அவர் அறிந்திருக்கிற காரணத்தினால் அவர்களுடைய குருட்டுத் தனத்தைப் பார்த்து அவர் நகைக்கிறார். ஆகவே, சரீரம் "மீட்கும்பொருளாக' இருப்பதால், பாடுபடக்கூடியது மட்டுமே பாடுபடும். ஆனால் விடுதலை செய்யப்பட வேண்டியவர் சரீரமற்ற சரீரமுடையவர். இருப்பினும் நானோ ஆவியாயிருக்கிறேன். என்னை நீங்கள் மனக்கண்களால் மட்டுமே தரிசிக்க இயலும், நான் பிரகாசமான ஒளியினால் நிறைந்திருக்கிறேன். இவர்தான் உன்னிடத்தில் வருகிறதை நீ கண்டாய்... ” (Translated from German in: Wilhelm Schneemelcher (ed.), "Neutestamentliche Apokryphen. Volume II. Apostolisches, Apokalypsen und Verwandtes", 5th edition, 1989 (Mohr-Siebeck, Tübingen) page 642f).
இந்த தேவதூஷணமாக எழுத்துக்கள் மிகவும் ஆபத்தானதும் பொய்யானதுமான கொள்கைகளை முன்வைக்கும் ஞானமார்க்கமாயிருக்கிறது: இன்று நாம் காண்கின்ற உலகம் (பருப்பொருட்களால் ஆனது) இறைவனால் படைக்கப்படவில்லை, ஒரு பிசாசினால் படைக்கப்பட்டது (டிமர்ஜி). ஆவியின் உலகம் மட்டுமே உண்மையும் நன்மையுமான இறைவனுக்குரியதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தீய சரீரத்தில் மாட்டியிருக்கும் தனது சொந்த தெய்வீக ஆவியை விடுவிக்க வேண்டியவனாக இருக்கிறான். அவ்விதமாக மனிதன் தன்னை விடுவித்து இறைவனுடன் சேர்ந்துகொள்ளும் திறமை மனிதனிடத்தில் இருக்கிறது.
இப்படிப்பட்ட போதனைகளிலிருந்துதான் குரான் கிறிஸ்துவின் சிலுவையை மறுதலிக்கும் ஞானமார்க்கப் போதனையை விவரமாக எடுத்து முன்வைக்கிறது. ஒரு இஸ்லாமியனுக்கு இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகள் குரானுடைய அதிகாரத்தை பலவீனப்படுத்துகிறது. அவர் திரும்பவும் இஸ்லாத்திற்குத் திரும்பும்படி சோதிக்கப்படும்போது அவர் இவற்றைக் கேட்டுக்கொள்ள வேண்டும்: இறைவனால் வெளிப்படுத்தப்படவில்லை என்று வெளிப்படையாகவே தெரியும் ஒரு காரியத்தை நான் நம்ப முடியுமா? இஸ்லாம் தோன்றுவதற்கு முந்தைய காலத்திலிருந்த சமயங்களின் போதனைகள் ஒன்று சேர்க்கப்பட்டு எழுதப்பட்ட குரான் நம்பிக்கைக்கு உகந்ததா?
துக்க செய்தி: கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை முதலில் மறுதலித்தவர் முகமது அல்ல. அவர் ஞானமார்க்கப் போதகர்களுடைய திரிபுப் போதனைகளினால் இழுப்புண்டு போயிருக்க வேண்டும். அவ்விதம் அவர் செய்தபோது அவர் சிலுவை மரணத்தை மட்டும் மறுதலிக்கவில்லை. மாறாக ஒரு ஆவி மனிதனுடைய வெளித்தோற்றத்தை மாற்றி வேறு மனிதனைப் போல காட்சிதர முடியும் என்ற பிசாசின் போதனையையும் மறைமுகமாக ஏற்றுக்கொண்டார். இவ்விதமாகச் செயல்பட்டபோது அவர் தனக்குக் கிடைத்தது தெய்வீக வெளிப்பாடா அல்லது சாத்தானுடைய வெளிப்பாடுகளா என்பதை அறியாதிருந்தார் என்பது மீண்டும் தெரிகிறது.
நல்ல செய்தி: கிறிஸ்து உண்மையிலேயே சிலுவையில் அறையப்பட்டார். அவர் நம்முடைய பாவங்களுக்காக மரித்தார். ஞானமார்க்கத்தாரின் பிசாசுத்தனமான குழப்ப உபதேசங்கள் உண்மையும் நேர்மையுமுள்ள இறைவனிடத்திலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது. அவர் தம்முடைய குமாரனுடைய பரிகார பலி மரணத்தை நாம் விசுவாசிப்பதன் மூலமாக நம்மை அவருடைய பிள்ளைகளாக்கி, அவரோடு இணைத்திருக்கிறார்.
சாட்சி: என்னுடைய பெயர் ஹசன். நான் மத்திய ஆசியாவிலிருக்கும் கிர்ஜிஸ் இனத்தைச் சேர்ந்தவன். நான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். ஆனால் எங்களது இஸ்லாம் மோல்டோக்களுடைய மாந்த்ரீகங்களை தன்னுள் கொண்டது. சோவியத்தின் காலங்களிலிருந்தே நான் மலைக்கிராமத்திலிருந்து தலைநகரத்திற்கு வந்திருந்தேன். அங்கு நான் என்னுடைய பல்கலைக்கழகப் படிப்பை மேற்கொண்டேன். ஆனால் என்னுடைய இறுதிப் பரீட்சைகளில் தேறவில்லை. ஆகவே, நான் ஒரு கட்டடம் கட்டும் இடத்தில் பளுதூக்கும் இயந்திரத்தை இயக்குபவனாக வேலைக்குச் சேர்ந்தேன். ஒரு நாள் என்னுடைய வேலையில் நான் செய்த ஒரு பிழையின் காரணமாக ஒரு தொழிலாளி இறந்துபோனான். அதன் காரணமாக நான் சிறையில் அடைக்கப்பட்டேன். ஆனால் நான் பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதுண்டு. இந்த சம்பவங்களின் காரணமாக நான் இறைவனைப் பற்றி அதிகம் சிந்தித்தேன். ஆரம்பத்தில் நான் குரானை வாசிக்க ஆசைப்பட்டேன். ஆயினும் ஒரு ரஷ்யனும் கிறிஸ்தவனுமான ஒரு சக கைதியின் மூலமாக வேதாகமத்தை வாசிக்கத் தொடங்கினேன். அந்தப் புத்தகம் என்னுடைய பாவங்களைக் காட்டும் கண்ணாடியாக இருந்தது. நான் இழந்து போனவன் என்பதை நான் நன்கு புரிந்துகொண்டேன். என்னுடைய ரஷ்ய நண்பன் மூலமாக நான் கிர்ஜிஸ் கிறிஸ்தவர்களைச் சந்தித்தேன். கிறிஸ்துவின் பரிகார பலிமரணம் என்னுடைய பாவங்களைவிடப் பெரியது என்றும் அவர் என்னை விடுவிக்க முடியும் என்றும் அவர்கள் எனக்கு விளக்கிச் சொன்னார்கள். அதை நான் விசுவாசிக்க முயற்சித்தபோதிலும், என்னுடைய மாந்திரீக, பிசாசுகளுடன் தொடர்புடைய விசுவாசத்திலிருந்து என்னால் வெளியில் வர முடியவில்லை. ஒரு நாள் நான் பகல்பொழுதில் நடைபெற்ற தீய ஆவிகளைக் குறித்த ஒரு கிறிஸ்தவ கருத்தரங்கத்தில் கலந்துகொண்டேன். தீய ஆவிகளுடன் தொடர்புடைய இஸ்லாமிய விசுவாசம் எவ்வளவு மோசமானது என்பதை நான் உணர்ந்துகொண்டபோது, அந்த மாந்த்ரீக நடவடிக்கைகள் யாவையும் விட்டுவிட்டு என்னை முழுவதுமாக கிறிஸ்துவிடம் ஒப்படைத்தேன். அன்றிலிருந்து பிசாசின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டேன். இன்று கிறிஸ்து என்னுடைய வாழ்வை எவ்வாறு விடுவித்தார் என்று கிர்ஜிஸ் இன மக்களுக்கு சாட்சியாக நான் அறிவித்து வருகிறேன்.
விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே நீர் பிசாசுகளைவிடவும் வல்லமையுள்ளவராக இருப்பதற்காக உமக்கு நன்றி. பிசாசுகளிடம் என்னுடைய கவனத்தைச் செலுத்தாமல் நான் உம்மையே பின்பற்ற எனக்கு உதவிசெய்தருளும். அப்போது ஞானமார்க்கக் கிறிஸ்தவர்களைப் போல என்னிடத்திலிருந்து எந்த துர்ப்போதனையும் உருவாகாமல் இருக்கும். நீர் எங்களுக்காகச் சிலுவையில் மரித்ததற்காக உமக்கு நன்றி.
கேள்விகள்: குரான் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை மறுதலிப்பதற்குப் பின்னால் இருக்கும் இஸ்லாத்திற்கு முந்தைய தவறான உபதேசம் என்ன? அது குரானைப் பற்றிய உங்கள் புரிதலை எப்படிப் பாதிக்கிறது?
மனப்பாடம்: மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். (ரோமர் 8:38-39 – அப்போஸ்தலனாகிய பவுலுடைய வார்த்தைகள்)