Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 005 (Why should we chose presuppositional apologetics over other systems of apologetics?)
This page in: -- Chinese -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian

Previous Chapter -- Next Chapter

11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 1 – கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான அறிமுகம்

5. மற்ற கிறிஸ்தவ கொள்கைக் காப்புவாதங்களை விடுத்து முன்ஊகக் காப்புரையைத் தேர்வு செய்வது ஏன்?


நாம் பேசிக்கொண்டிருக்கிறவர்கள் யார் என்றும் அவர்களுடன் பேசுவதற்கு எந்த முறையைப் பயன்படுத்தலாம் என்றும் வேதாகமக் கண்ணோட்டத்தில் அறிந்துகொள்வதற்கு மனிதர்களையும் பாவத்தையும் குறித்த வேதாகம சித்தாந்தங்கள் பேருதவியாக இருக்கின்றன. நம்பிக்கையற்றவர்களின் பிரச்சனை என்ன என்பதைப் பற்றி விவிலியம் மிகத் தெளிவுடன் பேசுகிறது. அவர்களுடைய பிரச்சனை ஆதாரம் இல்லாதது அல்ல, அது ஒரு ஆன்மீகப் பிரச்சனை.

ரோமர் முதலாம் அதிகாரத்தில் பவுல் இவ்வாறு கூறுகிறார்: “சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,” (ரோமர் 1: 18-22).

நம்பிக்கையற்றவர்கள் “சத்தியத்தை அநியாயத்தினால் அடக்கி வைக்கிறார்கள்” என்று பவுல் சொல்கிறார். ஆதாரம் இல்லாததால் அவர்கள் அப்படிச் செய்வதில்லை; மாறாக, கடவுள் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிற காரணத்தினால் அவர்கள் கடவுளை அறிந்திருக்கிறார்கள் (வ.19). பவுலைப் பொறுத்தவரை அவர்கள் ஒரு கடவுளை அறியவில்லை, உண்மைக் கடவுளை அறிந்திருக்கிறார்கள். அவர்கள் “போக்குச் சொல்ல இடமில்லை என்பதற்கு பயன்படுத்தும் கிரேக்கச் சொல்லை (“ἀναπολογήτους;”) எழுத்தின்படி மொழிபெயர்த்தால் “அவர்களுக்கு தங்கள் கொள்கைகளைக் காத்துக்கொள்ளும் காப்புவாதம் இல்லை” என்று பொருள் வரும்.

அவநம்பிக்கையாளர்கள் கடவுளுக்குரிய மகிமையைக் கொடாமல் அல்லது அவருக்கு நன்றி செலுத்தாமல் இருப்பதால் அவர்கள் தங்கள் சிந்தனையில் வீணராகி, அவர்களுடைய இருதயத்தில் இருளடைந்துவிட்டார்கள் என்று பவுல் குறிப்பிடுகிறார் (வ. 21). எபேசு திருச்சபையில் இருந்த நம்பிக்கையாளர்கள் நடக்கக்கூடாத வழியைக் குறித்து எச்சரிக்கும் போது பவுல் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள். அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதய கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து;…” (எபேசியர் 4:17-18). அவநம்பிக்கையாளர்களைக் குறித்த படம் வேதாகமம் முழுவதும் மாறாததாக காணப்படுகிறது: அவர்கள் மூடர்கள் (சங். 14:1), தீயவர்கள் (சங். 10:4), அவர்கள் நன்மை செய்வதில்லை (சங். 53:1), கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள் (ரோமர் 1:28), அவர்கள் உண்மையான அறிவில் மகிழ்ச்சியைக் காண்பதில்லை, மாறாக தங்களுடைய பேச்சையே அவர்கள் கேட்க விரும்புகிறார்கள் (நீதி. 18:2), அவர்களுடைய சிந்தனையின் தோற்றம் எல்லாம் நித்தம் பொல்லாததாக இருக்கிறது (ஆதி. 6:5), அவர்களுடைய இருதயம் தீமையினால் நிறைந்திருக்கிறது (பிர. 9:3), வஞ்சனையுள்ளது (எரே. 17:9), அவர்களுடைய செயல்கள் தீமையாக இருப்பதால் அவர்கள் வெளிச்சத்தைவிட இருளை விரும்புகிறார்கள் (யோவான் 3:19), ... இந்த பட்டியல் தொடருகிறது.

அவநம்பிக்கை என்பது ஆதாரத்தைக் கொடுப்பதால் நீங்கிவிடக் கூடிய காரியம் அல்ல என்று வேதாகமம் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது (ஆதாரங்கள் பயனளிக்கக்கூடிய சில தருணங்களும் இடங்களும் இருக்கத்தான் செய்கின்றன). அவநம்பிக்கை என்பது ஒழுக்கம் சார்ந்த, ஆன்மீக மற்றும் அறிவுடன் தொடர்புடைய பிரச்சனை. அவநம்பிக்கையாளர்கள் கடவுளைத் தேடாமல் அவரை விட்டு விலகி ஓடுகிறார்கள் (ரோமர் 3:11). ஆகவே, நாம் அவநம்பிக்கையாளர்களுக்கு அதிக ஆதாரங்களையும் தகவல்களையும் கொடுப்பதற்குப் பதிலாக வேறு ஒரு அணுகுமுறையைக் கையாள வேண்டும்; ஏனெனில் எந்தளவு புதிய தகவல்களைக் கொடுத்தாலும் அது அவநம்பிக்கையாளரின் மனதை மாற்றிவிடாது. சி. எஸ். லூயிஸ் என்ற அறிஞர் இதை சிறப்பான முறையில் விளக்குகிறார்: "நாம் தவறு செய்துவிடக் கூடாது. வெளிப்படுத்தல் நூலில் சொல்லப்பட்டிருக்கிற இறுதி காலம் குறித்த கூற்றுகள் நவீன மனிதனுடைய கண்களுக்கு முன்பாக அப்படியே எழுத்தின்படி நிறைவேறி, வானங்கள் பாயைப் போல சுருட்டப்பட்டாலும், வெள்ளை சிங்காசனம் காணப்பட்டாலும், தான் நெருப்புக் கடலில் தள்ளப்படுவதாக உணர்ந்தாலும், அவன் அதை நம்பாமல் தான் காணும் காட்சிகள் ஒரு மாயத்தோற்றம் என்று கருதி அதற்குரிய விளக்கத்தை மனோவியல் நிபுணரிடத்தில் அல்லது பெருமூளை குறித்த உடற்கூறியலில் தேடிக்கொண்டிருப்பான். அனுபவம் தன்னில்தான் எதையும் நிரூபித்துவிடுவதில்லை” (C.S. Lewis, God In the Dock,from thechapter on miracles -சி.எஸ். லூயிஸ் எழுதிய “கப்பல் துறையில் கடவுள்” என்ற நூலில் அற்புதங்களைக் குறித்த அத்தியாயத்தில் இருந்து இந்த மேற்கோள் கொடுக்கப்படுகிறது). வேறு வார்த்தைகளில் சொன்னால், அற்புதங்கள் நம்பிக்கையாளர்களை உருவாக்குவதில்லை. அவநம்பிக்கையாளர்கள் (சில வேளைகளில் நம்பிக்கையாளர்களும் அற்புதங்களை தங்களுடைய முன்ஊகங்களின் அடிப்படையில் விளக்கிக்கொள்வார்கள். மத்தேயு 28-ம் அதிகாரத்தில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள். அங்கே அவர்கள் அவரைக் கண்டு பணிந்துகொண்டார்கள், சிலரோ சந்தேகப்பட்டார்கள். ” (மத். 28:16-17). இங்கே கிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலருக்குக் காட்சி தருகிறார், அவர்களில் “சிலரோ சந்தேகப்பட்டார்கள்” என்று வாசிக்கிறோம். அவர்கள் எதைச் சந்தேகப்பட்டார்கள்? அவர்கள் தங்கள் சொந்த புலன் உணர்வுகளைச் சந்தேகித்தார்கள், காரணம் அவர்கள் கண்ட காட்சி அவர்களுடைய முன்ஊகங்களோடு முரண்படுவதாக இருந்தது.

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையும் நாம் சிந்தித்துப் பார்ப்போம். இயேசு உயிரோடு எழுந்த நேரத்தில் கல்லறையைக் காவல் காத்துக்கொண்டிருந்த ரோமப் போர்ச்சேவகர்கள் இயேசு உயிரோடு எழும்பவில்லை என்று பொய் சொல்ல வேண்டும் என்று யூத தலைவர்கள் அவர்களுக்கு காசு கொடுத்தார்கள். யூதத் தலைவர்கள் உயிர்த்தெழுதலை நேரில் பார்க்காத காரணத்தினால்தான் அவர்கள் உயிர்த்தெழுதலைக் குறித்த சீடர்களின் சாட்சியை நம்பவில்லை என்று நீங்கள் ஒருவேளை வாதிடலாம். அப்படியானால், சூம்பின கையுடைய மனிதனை இயேசு குணமாக்கினாரே அப்போது என்ன நடந்தது? பரிசேயர்கள் அங்கே இருந்தார்கள்; அற்புதத்தை அவர்கள் நேரடியாக தங்கள் கண்களினால் கண்டார்கள். அவர்கள் நம்பிக்கையாளர்களாக மாறினார்களா? இல்லை. அவர்கள் மூர்க்கங்கொண்டு இயேசுவைக் கொல்வதற்குச் சதித்திட்டம் தீட்டினார்கள் (லூக். 6:11; மாற்கு 3:1-6). லாசருவை இயேசு உயிரோடு எழுப்பியபோது என்ன நடந்தது? இங்கே பரிசோதித்து நிரூபிக்கப்படக் கூடிய ஒரு அற்புதத்தை இயேசு செய்தார் (யோவான் 11:39). நான்கு நாட்களுக்கு முன்பு மரணமடைந்த மனிதன் இப்போது உயிரோடு நலமாக இருக்கிறார். ஆனால் இந்த அற்புதம் அவர்களுடைய இருதயத்தை மாற்றவில்லை என்பதோடு அவர்கள் இருதயத்தை அது உண்மையில் கடினப்படுத்தியது, அந்த அற்புதத்திற்கு சாட்சியாக இருந்த காரியத்தையே அழித்தொழிக்க அவர்கள் திட்டமிட்டார்கள். முதலில் அவர்கள் இயேசுவைக் கொல்ல சதி செய்தார்கள் (யோவான் 11:53); அதன் பிறகு அவர்கள் லாசருவையே கொல்ல திட்டமிட்டார்கள் (யோவான் 12:11). இன்னும் அதிக உதாரணங்கள் உங்களுக்குத் தேவையா? யாத்திராகமத்தில் கடவுளுடைய விரலைத் தெளிவாகக் கண்ட எகிப்தியர்கள் என்ன செய்தார்கள் என்பதை வாசித்துப் பாருங்கள். அந்த அற்புதங்கள் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தின (யாத். 8:19). அவநம்பிக்கையாளர்கள் தங்களது புரிதல்கள் (முன்ஊகங்கள்) சவாலுக்கு உட்படுத்தப்பட்டால் ஒழிய, அவர்கள் தங்கள் சுயசார்பை புறக்கணித்து மனந்திரும்பி, தங்கள் மனங்களில் புதிதாக்கப்பட்டால் ஒழிய (ரோமர் 12:2), அற்புதங்களோ ஆதாரங்களோ மிகவும் அரிதான மாற்றத்தையே அவர்களில் ஏற்படுத்தும்.

டச்சு இறையியலாளராகிய கொர்னேலியஸ் வான் டில் (Cornelius Van Til) என்பவர் சத்தியத்தை ஒரு அவநம்பிக்கையாளர் எவ்வாறு அணுகுகிறார் என்பதை விளக்குகிறார்: “நாம் முன்வைக்கும் ஆதாரங்களை அவர் விளக்குவதற்கு வழிகாட்டுதலாக இருக்கும் அவருடைய முன்ஊகங்களை நாம் சவாலுக்கு உட்படுத்தவில்லை என்பதால், அவருக்கு முன் வைக்கப்படும் அனைத்து ஆதாரங்களையும் அவருடைய நம்பிக்கைக்கு புறம்பான குழியில் போட்டு புதைத்துவிடுகிறார். அந்த ஆராதங்கள் அவருக்கு குழப்பத்தைக் கொடுப்பதில்லை, ஏனெனில் அவர் தன்னுடைய கடவுளுக்கு எதிரான கலக நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட முன்ஊகங்களின்படியே அந்த ஆதாரங்களை விளக்கப்படுத்துகிறார். “வெறும்” உண்மைகள் என்று எதுவும் கிடையாது. அதாவது, விளக்கப்படுத்தாமல் முற்றிலும் புறவயப்பட்ட தகவல்கள் என்பது உண்மையில் கிடையாது. சரியா பிழையா என்ற கூற்றைச் சுமந்துவராத எந்த ஆதாரமும் கிடையாது. நாம் அனைவருமே நம்முடைய உலகத்தை விளக்கப்படுத்திப் புரிந்துகொள்கிறவர்களாகத்தான் இருக்கிறோம். நம்முடைய இந்த விளக்கத்தை வழிநடத்துவது நம்முடைய முன்ஊகங்களே. அப்படியிருக்க, ஆதாரங்களைக் கொண்டு வாதிடும் ஒரு காப்புரையாளர் அவநம்பிக்கையாளருக்கு எதை நிரூபித்துவிட முடியும்? கடந்த கால வரலாற்றில் வித்தியாசமான, புலனுணர்வு கடந்த நிகழ்ச்சிகள் கடந்த காலத்தில் நிகழ்ந்துள்ளது. வேதாகமம் நமக்கு கொடுக்கும் விளக்கத்திற்கான வழிகாட்டுதல்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் ஆதாரங்களை முன்வைப்பதால் கிறிஸ்தவ நிலைப்பாட்டை வலுப்படுத்தவோ, அவநம்பிக்கையாளர்களின் நிலைப்பாட்டைத் தகர்க்கவோ முடியாது.” (Bryan Neal Baird, Theology and Presuppositional Apologetics)

புரிந்துகொள்ள விரும்பாதவர்களிடத்தில் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் (நீதி. 18:2), அவர்கள் அறிவுறுத்தல்களைப் புறக்கணிப்பவர்கள் (நீதி. 1:7), அவர்களுடைய வழிகள் அவர்களுடைய கண்களுக்குச் சரியாகவே தோன்றுகிறது (நீதி. 12:15). ஆகவே, வேதாகமத்தின் போதனைகளின் படி பார்க்கும்போது தொட்டுணரக்கூடிய ஆதாரங்கள், வரலாற்று ஆதாரங்கள் ஆகியவற்றைக் கொண்டு ஆரம்பிப்பதில் எந்தப் பயனுமில்லை. ஏனெனில் இவை மனிதர்களுடைய ஒழுக்கம் சார்ந்த அல்லது ஆன்மீகப் பிரச்சனைகளை எதுவும் செய்துவிட முடியாது. உண்மையில் மக்கள் கடவுளைச் சாராமல் சுயசார்புள்ளவர்களாக மாறி கடவுளின் அதிகாரத்தைப் புறக்கணித்து தங்கள் சொந்த அதிகாரத்தின்படி தங்கள் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அற்புதங்களும் பார்த்து உணரக்கூடிய அல்லது அனுபவ ஆதாரங்களும் நம்ப வைக்கத் தக்கவையாகத் தோன்றும்; ஆயினும் அவை மக்களின் மனதை மாற்றுவதற்கு எவ்வாறு போதாதவையாக காணப்படுகின்றன என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இருப்பினும் வேதாகமம் அவற்றைவிட வலுவான, நிச்சயமான இறை வாக்கையே நமக்கு நல்ல ஆயுதமாகக் கொடுத்திருக்கிறது. லாசருவையும் பணக்காரனையும் குறித்த உவமையில் இயேசு ஆபிரகாமுக்கும் (இந்த இடத்தில் ஆபிரகாம் இயேசுவின் பேச்சாளராக இருக்கிறார்) லாசருவுக்கும் இடையில் நடைபெறும் உரையாடலில் இதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்: “அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்து பேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு, நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான். அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான். அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்று சொன்னான் என்றார்.” (லூக்கா 16:27-31).

மோசேயையும் தீர்க்கதரிசிகளையும் ஒருவர் நம்பவில்லை என்றால் ஒருவன் மரணத்திலிருந்து எழுந்து வந்தாலும் அவர் நம்ப மாட்டார் என்று இயேசு இங்கு தெளிவாகச் சொல்கிறார். இது எப்படி உண்மையானது என்பதை நாம் பிறகு நடைபெற்ற நிகழ்வின் மூலமாக அறிந்துகொள்கிறோம். இயேசு உயிரோடு எழுந்து வந்த பிறகும் மூப்பர்கள் அவரை நம்பவில்லை. இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்புவது அவர்களுக்கு அவ்வளவு இயலாத காரியமாக இருந்த காரணத்தினால் போர்ச் சேவகர்களுக்கு பொய் சொல்லும்படி யூதத் தலைவர்கள் இலஞ்சம் கொடுத்தார்கள்.

பேதுருவும் இதே உண்மையை எடுத்துரைப்பதைப் பார்க்கிறோம்: “நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம். அதிக உறுதியான தீர்க்கதரிசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.” (2 பேதுரு 1:16-19). பேதுருவைப் பொறுத்தவரை ஒரு கண்கண்ட சாட்சியைவிட தீர்க்கதரிசன வார்த்தை அதிகம் நம்பத் தகுந்த ஒன்றாகும். அந்த மறுரூப நிகழ்ச்சியின் போது பேதுரு அங்கு இருந்து, அதை தன்னுடைய கண்களினால் பார்த்து, காதுகளினால் கேட்ட போதிலும், அவருடைய அந்த அனுபவத்தைவிட தீர்க்கதரிசன வாக்கு அதிக நிச்சயமானது என்கிறார்.

அவநம்பிக்கையாளர்கள் அறிய விருப்பமில்லாமல் இருக்கிறார்கள் என்றும் (1 கொரிந்தியர் 2:14) கடவுளின் வழி மூடத்தனமானது என்று சிந்திக்கிறார்கள் என்றும் (1 கொரிந்தியர் 1:18) வேதாகமம் சொல்வதால், அவர்களுக்கும் நமக்கும் நடுவில் பொதுவான தளம் இல்லாத காரணத்தினால் அவர்களோடு பேசுவதில்கூட எந்த பயனும் இல்லை என்று சிலர் சிந்திக்கலாம். ஆனால், பல பொதுவான காரியங்கள் நமக்கிருக்கின்றன; நம்பிக்கையாளர்கள், அவநம்பிக்கையாளர்கள் ஆகிய இருவரும் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டவர்கள் என்றும் (ஆதி. 1:27), கடவுளை இருவரும் அறிந்துகொள்ளலாம் என்றும் (சங். 19:1-6), கடவுள் அனைவரும் தெளிவாகக் காணும்படி தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் (ரோமர் 1:18; சங். 19), வேதாகமம் தன்னில்தானே ஆதாரத்தைக் கொண்டிருக்கிறது என்றும் வேதாகமம் நமக்குச் சொல்கிறது. அவநம்பிக்கையாளர்கள் தங்களைப் பற்றி என்ன நினைத்தாலும் அவர்களும் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருக்கிற காரணத்தினால் அவர்கள் கடவுளை விட்டு தப்பி ஓடிவிட முடியாது (சங். 139:7-9) என்பது நாம் அவர்களோடு பேச்சை ஆரம்பிப்பதற்கு மிகச் சிறந்த ஆரம்பப் புள்ளியாகத் தோன்றுகிறது.

நாம் கீழே பார்க்கப் போகிறபடி பொதுதளம் என்பது நம்முடைய கலந்துரையாடலுக்கு மிகவும் முக்கியமானது. பொதுத்தளம் என்பது நடுநிலையான தளம் அல்ல. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கின்றது. நாம் அவநம்பிக்கையாளர்களோடு உறவுகொண்டு, அவர்களோடு சிறப்பான முறையில் பேசுவதற்கு நாமும் அவர்களும் நம்புகிற பொது உண்மைகளை மட்டும் வலியுறுத்தும்படியான ஒரு சோதனை நமக்கு ஏற்படலாம். அந்த கண்ணியில் விழுந்துவிடாதீர்கள்! இரண்டு தரப்புக்கும் சார்பற்ற நடுநிலை என்பது சாத்தியமாகக் கூடிய ஒன்றல்ல. எல்லாவற்றிற்கும் அடித்தளமாக இருக்கிற கடவுளை கணக்கில் கொள்ளாமல் விட்டுவிட முடியாது. கடவுள் நம்முடைய சிந்தனையில் முடிவாக அல்ல ஆரம்பமாக இருக்கிறார் என்று வேதாகமம் சொல்கிறது (நீதி. 9:10; சங். 111:10; நீதி. 1:7; 2:5; 15:31). அத்துடன் அனைத்து அறிவும் கிறிஸ்துவில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கிறது என்றும் வேதாகமத்தில் இருந்து அறிகிறோம் (கொலோசெயர் 2:3). நாம் கிறிஸ்துவில் நடக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம் (கொலோசெயர் 2:6), மனிதப் பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்ட தத்துவங்களைப் பின்பற்றி நடக்கும்படி அழைக்கப்படவில்லை (கொலோசெயர் 2:8), மாறாக கிறிஸ்துவின் தத்துவங்களைப் பின்பற்றும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம் (கொலோசெயர் 2:8). சீர்கேடான வீண் பேச்சுகளுக்கும் ஞானமென்று பொய்யாய்ப் பெயர் பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகியிருக்க வேண்டும் என்றும் பவுல் எச்சரிக்கிறார் (1 தீமோத்தேயு 6:20).

நாம் பவுலின் ஆலோசனையைக் கேட்க வேண்டும்: “அவர்களுக்குப் பங்காளிகளாகாதிருங்கள். முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள்வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.”(எபேசியர் 5:7-11).

நாம் அவநம்பிக்கையாளர்களின் பங்காளிகளாகக் கூடாது என்று நமக்கு அறிவுறுத்தப்படுகிறது! இதன் பொருள் என்ன? அறிவுபூர்வமாக அல்லது நாம் பயன்படுத்தும் முறைகளில் நாம் அவர்களோடு பங்காளிகளாகக் கூடாது என்றுதான் பவுல் குறிப்பிடுகிறார்; நாம் அவர்களோடு “பிணக்கப்பட” அல்லது அவர்களுடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்படியக் கூடாது (2 கொரிந்தியர் 6:17). அடிப்படையில் வேறொரு உலக நோக்குக்கு தங்களை ஒப்புக்கொடுத்த அவநம்பிக்கையாளர்களுடன் கலந்துரையாடும் போது இது எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் கவனிப்போம்.

கிறிஸ்தவம் அல்லாத நம்பிக்கை அமைப்பில் கீழ்க்காணும் இரண்டு காரியங்களைக் காணலாம்:

1 - அவர்கள் நம்புவதாக உரிமைகோருபவை – அதாவது அவர்களுடைய உலக நோக்கு.
2 - அவர்களுடைய செயல்கள் வெளிப்படுத்தும் உலகத்தைக் குறித்த அவர்களுடைய அனுமானம். அதாவது அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது.

அவர்கள் எப்படிப்பட்ட நம்பிக்கை அமைப்புக்கு உட்பட்டவர்களாக இருந்தாலும் இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டாகவே இருக்கும். கிறிஸ்தவ உலக நோக்கு ஒன்று மட்டுமே மெய்மையைச் சரியாகப் புரிந்துகொள்கிறது.

சிலர் இவ்வுலகில் இருக்கின்ற அனைத்தும் பருப்பொருட்களால் (material) ஆனது என்று நம்புகிறார்கள். இதற்கு உதாரணமாக பொருள் முதல் வாத இறை மறுப்புக் கோட்பாடு மற்றும் பரிணாம இறைமறுப்புக் கோட்பாடு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். வேறு சிலர் அனைத்துமே மாயை என்று கூறுவார்கள் (இந்து மதம் மற்றும் அனைத்தும் கடவுள் என்றும் கோட்பாடு- Pantheism). இன்னும் சிலர் தாங்கள் வேதாகமத்திலுள்ள பிழைகளைத் திருத்துவதற்காக வந்திருப்பதாகக் கூறுவார்கள் (முஸ்லிம்கள், மோர்மன்கள் அல்லது யெகோவாவின் சாட்சிகள் போன்றவர்கள்). கடவுளைப் பற்றி நாம் எதையுமே அறிந்துகொள்ள முடியாது என்று கூறுகிறவர்களும் இருக்கிறார்கள் (இவர்களை அஞ்ஞான மார்க்கத்தார் அல்லது நம்பிக்கையற்றவர்கள் என்று அழைப்பதுண்டு). ஒரு கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையாளரின் பணி இந்த அனைத்து நம்பிக்கை அமைப்புகளிலும் இருக்கின்றன முரண்பாடுகளையும் நிச்சயமின்மையையும் வெளிப்படுத்திக் காண்பித்து, பவுலின் வார்த்தைகளில் “இந்த உலகத்தின் ஞானத்தைப் பயித்தியமாக்கி” காண்பிப்பது (1கொரிந்தியர் 1:18). அல்லது அதை ஏசாயாவின் வார்த்தைகளில் கீழ்வருமாறு சொல்லலாம்: "நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப் பண்ணுகிறவர்.” (ஏசாயா 44:25). உலகம் ஞானம் என்று கூறிக்கொண்டிருக்கும் காரியங்கள் எல்லாமே மூடத்தனமானவை. கடவுளுடைய அதிகாரத்திற்கு அவர்கள் திரும்பாவிடில் அவர்கள் மூடர்களாக மட்டுமல்ல, மீட்கப்படாதவர்களாகவுமே இருப்பர்.

www.Grace-and-Truth.net

Page last modified on April 11, 2023, at 07:30 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)