Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 023 (The outcome of those things is death (Romans 6:21) -- Or: The irreconcilable antithesis between the unbeliever and the believer)
This page in: -- Chinese? -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian

Previous Chapter -- Next Chapter

11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 3 – ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையின் செயல்முறைகள்

17. இவற்றின் விளைவு மரணம் (ரோமர் 6:21) = நம்பிக்கையாளருக்கும் நம்பிக்கையற்றவருக்கும் இடையில் நிலவும் ஒப்புரவாக்க முடியாத முரண்பட்ட கருத்துநிலை


நம்பிக்கையாளர்களுக்கும் அவநம்பிக்கையாளர்களுக்கும் இடையில் இருக்கின்றன எதிர்ப்பு நிலையை ஒரு கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையாளர் குறைத்து மதிப்பிட முடியாது. இந்த எதிர்ப்பு நிலை என்பது வெறும் ஆன்மீக நிலையில் மட்டுமல்ல, மனநிலையிலும், சமூக நிலையிலும், அரசியல் நிலையிலும், அழகியல் நிலையிலும் இன்னும் பல்வேறு துறைகளிலும் நிலவும் ஒன்றாகும். பவுலின் வார்த்தைகளைக் கவனியுங்கள்: ரோமர் 8:5-8: “அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.” ஆகவே, மறுபிறப்படைந்த சிந்தைக்கும் மறுபிறப்படையாத சிந்தைக்கும் இடையில் ஒரு நடுநிலைப்பாடு என்று ஒன்று கிடையாது. நம்முடைய மனநிலை வித்தியாசமானது; ஒன்று வாழ்வு, மற்றது மரணம். ஒன்று கடவுளுக்கு எதிரானது, மற்றது கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பது. ஆகவே, கிறிஸ்தவ காப்புரையாளர் இதைப் புரிந்துகொண்டு, அவநம்பிக்கையாளர்களின் உலக நோக்கும், அவர்களுடைய சிந்தனையின் வடிவம் அதன் அடிப்படையில் கடவுளைச் சாராமல் சுயாதீனமாக சிந்திப்பது. அது பகுத்தறிவு வாதமாக இருக்கலாம், மதச்சார்பின்மையாக இருக்கலாம், மனிதவியலாக இருக்கலாம், போலிமதங்களாக அல்லது ஆன்மீகமாக எதுவாகவும் இருக்கலாம். கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையாளர் ஒருபோதும் ஆதாரங்களை மட்டும் வைத்து கிறிஸ்தவ உலக நோக்கை ஏற்புடைதாகச் செய்யலாம் என்ற நம்பிக்கையில் எந்த வாதத்தையும் அணுகக் கூடாது. அப்படிப்பட்ட அணுகுமுறை அவநம்பிக்கையாளர்கள் தங்களையே சுய அதிகாரமுள்ளவர்களாகக் கருதுகிறார்கள் என்ற உண்மையை கவனிக்காமல் விட்டு அந்த நிலைப்பாட்டை இன்னும் உறுதிப்படுத்துகிறது. நாம் இந்த சுயாதீனத்தை சவாலுக்கு உட்படுத்த வேண்டும். நாம் கிறிஸ்தவ நம்பிக்கையை, “மற்ற நம்பிக்கைகளைவிட அறிவுபூர்வமாக பொருள்ள நம்பிக்கையாகக் காண்பிக்கவோ, மற்ற நம்பிக்கைகளைவிட கொஞ்சம் அல்லது மிக அதிகமாக உண்மையான நம்பிக்கை என்று காண்பிக்கவோ முயற்சிக்கவில்லை. அதற்கு மாறாக, நாம் சொல்வது அவர்கள் கடவுளை நம்ப வேண்டும். அல்லது தர்க்கரீதியான நியாயத்தின்படி அவர்கள் வேறு எதையும் நம்ப முடியாது”(Cornelius Van Til, Why I believe in God). நாம் அவநம்பிக்கையாளர்கள் மனந்திரும்ப வேண்டும் என்பதையே நாம் நாடுகிறோம் – இதை வேதாகமம் “μετανοώ” என்று அழைக்கிறது. இதற்கு “பிறகு வேறுபட்டுச் சிந்திப்பது” என்று எழுத்தின்படி பொருளாகும். அதாவது, அவநம்பிக்கையாளருடன் நாம் பேசும்போது ஒரு பொதுவான நடுநிலையை நாடுவது:

அ) சாத்தியமற்றது, ஆ) வேதாமத்திற்கு எதிரானது, இ) ஒழுக்கக்கேடானது. இந்த கண்ணியில் விழுந்துவிடாதீர்கள்!

நம்பிக்கையாளர்கள் இவ்வுலகத்துக்கு ஒத்துப் போகக் கூடாது என்பது மிகவும் தெளிவாக இருக்கிறது. மாறாக, நம்முடைய மனம் புதுப்பிக்கப்படுவதால் நாம் மாற்றம் அடைய வேண்டும் (ரோமர் 12:2). நாம் கடவுளுடைய வார்த்தையாகிய சத்தியத்தினால் வேறுபிரிக்கப்பட்டிருக்கிறோம் (யோவான் 17:17), இந்த வார்த்தை நம்மைத் தூய்மைப்படுத்துகின்றது (யோவான் 15:3), நாம் உண்மையில் கனி கொடுக்க விரும்பினால் கிறிஸ்துவில் நிலைத்திருக்க வேண்டும் (யோவான் 15:4).

நாம் கிறிஸ்தவ தனித் தன்மையை விட்டுக் கொடுத்து, தற்காலிகமாக கடவுள் இல்லை என்றும் அவரைப் பற்றி யாருக்கும் இதுவரை தெரியாது என்ற நிலைப்பாட்டை நாம் அனுமானிக்கும்படி உலகம் நம்மை அழைக்கும்போது, நாம் ஏற்கனவே தோல்வியடைந்து விட்டோம். ஒரு அவநம்பிக்கையாளர் கடவுளைத் தேடுவதில்லை (ரோமர் 3:10-12). மூடனுடைய வழி அவனுக்கு சரியாகத்தான் தோன்றும் (நீதி. 12:15), அந்த வழியில் நாம் நம்பிச் செல்வோமானால் நம்முடைய முடிவும் அவர்களுடைய முடிவைப் போலவே இருக்கும். ஆன்மீக நிலையில் மரணமடைந்திருக்கும் ஒருவனுடைய வழிமுறையைப் பயன்படுத்தி ஆன்மீக உண்மையை அடைய நினைப்பது இயலாத காரியம்.

அது இறைவார்த்தைக்கு முரணானது, ஏனெனில் வேதாகமம் ஒரு நம்பிக்கையாளரிடம் முழுமையாக ஒப்படைப்பை எதிர்பார்க்கிறது: முழு ஆத்துமா, முழு இருதயம் மற்றும் முழு மனம் (மத். 22:37). பொதுவான நிலைப்பாடு நம்மிடம் கோருவதற்கு மாறுபட்ட நிலையில், கடவுள் நாம் நம்முடைய அனைத்து சிந்தனைகளிலும் எந்த ஒளிவு மறைவின்றி தமக்கு நம்மை ஒப்படைக்க வேண்டும் என்று கோருகிறார். பவுலின் அறிக்கையைப் பாருங்கள்: “ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது.” (கொலோ. 2:3-8). இங்கு பவுல் “எல்லாம்” என்று சொல்கிறார் - சில என்று சொல்லவில்லை. நாம் இசையைப் பற்றியோ, சட்டத்தைப் பற்றியோ அல்லது தர்க்கவியலைப் பற்றியோ எதைப் பற்றி பேசினாலும் அனைத்தும் கிறிஸ்துவுக்குள் இருக்கிறது என்றார் பவுல்! நாம் எதை நாடிப் போனாலும் நம்முடைய ஒவ்வொரு சிந்தனையும் கிறிஸ்துவோடு தொடர்புபடுத்தப்பட்டு அவரில் நங்கூரமிடப்பட வேண்டும். இங்கே பவுல் விடாப்பிடியான கொள்கைவாதியாகவோ நியாயமற்ற பேச்சாகவோ இதைக் கூறவில்லை. நாம் “சிறைப்பட்டு” போய்விடக் கூடாது என்பதற்காக (வ.8) நம்முடைய பாதுகாப்புக்கான சத்தியத்தை அவர் அறிவிக்கிறார். அவநம்பிக்கையாளர்கள் நடக்கிற வழிகளில் நம்பிக்கையாளர்கள் நடக்கக்கூடாது; அவர்கள் தங்களுடைய சிந்தனையில் வீணர்களாகவும், புரிதலில் இருளடைந்தவர்களாகவும், அவர்களுடைய இருதயக் கடினத்தினால் அறியாமையில் உழல்கிறவர்களாகவும் இருக்கிறார்கள் (எபே. 4:17-18). நாம் அனைத்து சிந்தனைகளையும் கிறிஸ்துவுக்கென்று சிறைப்பிடிக்க வேண்டும் (2 கொரி. 10:5), நம்முடைய சிந்தனைகளை கிறிஸ்துவுக்குள் சிறைப்பிடிப்பதைப் போலவே அவநம்பிக்கையாளர்களுடைய சிந்தனைகளையும் நாம் கிறிஸ்துவுக்குள் சிறைப்பிடிக்க வேண்டும். நம்முடைய சிந்தனைகளில் நாம் கடவுளின் எதிரிகளைப் போல மீண்டும் மாறிப் போக முடியாது (கொலோ. 1:21).

நாம் ஒரு நடுநிலையை அனுமானித்து, கடவுளுடைய அதிகாரத்திற்கும் ஆளுகைக்கும் உட்படாத ஒரு பகுதி இருக்கிறது என்று எண்ணி அதைப் பற்றி பேச ஆரம்பித்தால் நீங்கள் எங்கே போய் முடிப்பீர்கள் என்று கருதுகிறீர்கள்? அவநம்பிக்கையுள்ள ஒரு வழிமுறை கிறிஸ்துவை ஆண்டவராக நம்பும்படி மக்களை வழிநடத்தும் என்று நீங்கள் உண்மையில் நினைக்கிறீர்களா? ஆகிலும் சில நவீன இறையியலாளர்கள் கடவுளால் சொல்லப்பட்டபடி கிறிஸ்தவ சத்தியத்தைப் பற்றி சிந்திக்க முடியாதவர்களாகவும் விருப்பமில்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். “எந்த ஒரு நடுநிலையாளரும் மற்றவர்களைவிட உயர்ந்தவர் அல்ல என்பதைக் காண்பிக்கும் முயற்சி எதுவும் இருக்காது… இதுவரை சொல்லப்பட்ட காரியங்கள்… அப்படிப்பட்ட தீர்ப்பு சாத்தியமில்லை என்பதைக் காண்பித்திருக்கிறது. எந்த ஒரு மனிதனுக்கும் - நிச்சயமாக இந்த எழுத்தாளருக்கு – அனைத்து நடுநிலையாளர்களைக் குறித்த அறிவோ அல்லது அப்படிப்பட்ட தீர்ப்பை வழங்குவதற்குரிய தகுதியோ நிச்சயமாக இல்லை. அப்படிப்பட்ட ஒருவர் இந்த கேள்வியை முற்றிலும் புறவயப்பட்ட நிலையில் ஆய்வதற்கு எந்த சூழ்நிலையையும் சாராதவராகவும் இருக்க முடியாது. கடவுள் மட்டுமே அப்படிப்பட்ட தீர்ப்பை முன்வைக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்” (John Macquarrie, Mediators between human and divine: From Moses to Muhammad, 1996, p. 12). இந்த இறையியலாளர் இவ்வுலகத்தின் முன்ஊகத்திற்கு தம்மை ஒப்புக்கொடுத்த நிலையில், மோசே, சொராஸ்டர், லா ட்சு, புத்தர், கன்பூசியஸ், சாக்கிரட்டீஸ், கிருஷ்னன், இயேசு மற்றும் முகம்மது ஆகிய அனைவரும் ஒன்றுதானா, அவர்களில் யாராவது ஒருவர் பெரியவரா என்ற கேள்வியைக் கேட்க முடியாதவராகவும் விரும்பாதவராகவும் இருக்கிறார். இதே சிந்தனைப் போக்கு இன்று பலரிடத்திலும் எதிரொலிப்பதைப் பார்க்க முடிகிறது.

இவ்வாறுதான் நீங்களும் சிந்திப்பீர்களானால், கீழ்க் காணும் வசனங்கள் உங்களுக்கு மாறுபட்ட பார்வையைக் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

1 கொரிந்தியர் 2:14 -- “ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.”
1 கொரிந்தியர் 3:19 -- “இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்,”
யோவான் 8:44 -- “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.”
அப்போஸ்தலர் 13:10 -- “எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ?”
2 கொரிந்தியர் 4:3-4 -- “எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.”

கடவுளின் ஞானத்தை ஒருவர் மூடத்தனம் என்றார், அவர் உண்மையின் மீது நிற்பதில்லை, கடவுளின் நேரான வழியை முரண்பட்டதாக ஆக்குகிறார், அவருடைய சிந்தை குருடாக இருக்கிறது. இப்படிப்பட்ட மனிதரோடு நடுநிலையான தளத்தில் பேசி கடவுளின் உண்மையை அடைந்துவிட முடியும் என்று நினைக்கிறீர்களா?

www.Grace-and-Truth.net

Page last modified on April 12, 2023, at 09:00 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)