Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 022 (The myth of neutrality and the nature of the conflict)
This page in: -- Chinese? -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian

Previous Chapter -- Next Chapter

11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 3 – ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையின் செயல்முறைகள்

16. நடுநிலை என்னும் கட்டுக்கதையும் முரண்பாட்டின் தன்மையும்


“இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.” (மத்தேயு 6:24)

நம்பிக்கையாளர்கள் கடவுளுக்கும் பணத்திற்கும் சேவை செய்ய முடியாது என்பதை உணர்வு பூர்வமாக ஏற்றுக்கொள்ளச் செய்வது அவ்வளவு கடினமானதல்ல. ஏனெனில் வேதாகமம் அதை வெளிப்படையாகச் சொல்கிறது. ஆனால், கடவுளுக்கும் சாக்கிரட்டீஸýகும், அல்லது கடவுளுக்கும் டார்வின், அரிஸ்டாட்டில், பி. எஃப். ஸ்கின்னர், பாப் கலாச்சாரம், பாரம்பரியம், உணர்வுகள், பகுத்தறிவு ஆகியவற்றுக்கும் சேவை செய்யவது என்பது முடியாத காரியம் என்பதை விசுவாசிகளை ஏற்றுக்கொள்ளச் செய்வது கடினமானதாக இருக்கலாம். ஆகவே, கிறிஸ்தவர்கள் தங்கள் மனதிலும் அறிவிலும் யாரைச் சேவிக்கிறார்கள் என்பதைக் குறித்தும் இந்த வசனம் பேசுகிறதா?

கிறிஸ்து சொன்னார்: “இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை.” (மத். 22:37-38). நாம் கடவுளை நம்முடைய முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் அன்புகூர வேண்டும் என்பதே கிறிஸ்து நமக்குக் கொடுத்த மாபெரும் கட்டளையாகும். பல கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையாளர்கள் மனம் அல்லது அறிவு என்ற பகுதியை தாண்டிச் செல்வது போல தோன்றுகிறது. நம்முடைய உணர்விலும் ஆன்மாவிலும் கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்படைத்திருக்கிறோம். ஆனால் நம்முடைய மனதை அல்லது அறிவைப் பொருத்தவரை இவ்வுலகத்தின் அறிஞர்கள் மற்றும் தத்துவஞானிகளை நோக்கி நாம் செல்கிறோம். அரிஸ்டாட்டிலின் வாதங்களை அடிப்படையாகக் கொண்டு கிறிஸ்துவின் சத்தியத்தை நிறுவ முயற்சிக்கும் பல கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையாளர்கள் நம்மிடத்தில் உண்டு. உதாரணமாக தாமஸ் ஆக்வினாஸ் மற்றும் வில்லியம் லேன் கிரைக் போன்றோரைக் குறிப்பிடலாம். இன்னும் கூடுதலாகச் சென்று சிலர் குர்ஆன் அல்லது வேறு ஒரு அவநம்பிக்கையின் சட்டகத்திற்குள் இருந்து கிறிஸ்துவை மெய்ப்பித்துக் காண்பிக்கும் கொள்கைக் காப்புரையாளர்களையும் நாம் காண்கிறோம். நம்பிக்கையாளர்கள் சிந்திக்க வேண்டிய முறையையும் அவநம்பிக்கையாளர்கள் மீட்கப்பட வேண்டிய வழியையும் கிறிஸ்து நமக்குக் கட்டளையிட்டுக் கொடுத்திருக்கிறார். “மனந்திரும்பி நற்செய்தியை நம்புங்கள்” (மாற்கு 1:15) என்பதே அந்த வழி. ஆயினும் நாம் இதைவிட்டு விட்டு கிறிஸ்து சொன்னதைப் புறக்கணிக்கிறோம்.

நம்பிக்கையாளர்கள் அந்த “கெட்ட மரங்களிடத்தில்” ஏன் செல்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. அவை ஒருபோதும் பழங்களைத் தரப் போவதில்லை என்பதை நாம் அறிவோம் (லூக்கா 6:44). கிறிஸ்துவின் இந்த கேள்விகளைக் கவனியுங்கள்: “என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன? என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குக் காண்பிப்பேன். ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின் மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக்கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்; நீரோட்டம் அதின் மேல் மோதினவுடனே அது விழுந்தது; விழுந்து, முழுவதும் அழிந்தது என்றார். ” (லூக்கா 6:46-49)

கிறிஸ்து சொல்வதைச் செய்ய நமக்கு விருப்பமில்லை என்றால் நாம் அவரை ஆண்டவர் என்று அழைக்காமல் இருப்பது நல்லது. அப்படியில்லாதபோது நாம் பழைய காலத்தில் வாழ்ந்த ஏமாற்றுப் பேர்வழிகளைப் போலவே இருக்கிறோம் என்று அவர் எச்சரிக்கிறார்: “மாயக்காரரே, உங்களைக்குறித்து: இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது. ” (ஏசாயா 29:13; மத்தேயு 15:7-8).

ஏவாள் விழுந்து போன அதே பாவத்திற்குள் நாமும் விழுந்துபோகக் கூடாது. முதல் பாவமே கடவுளுடைய உண்மைத் தன்மையைக் கேள்வி கேட்பதுதான். கடவுள்தான் நம்முடைய மனித வாழ்வின் இறுதி அதிகாரம் என்பதைக் குறித்த சோதனையை ஆதாமுக்கும் ஏவாளுக்கும் முன்பாக சாத்தான் வைத்ததை நினைத்துப் பாருங்கள்: “கடவுள் சொன்னது உண்டோ…?” (ஆதி. 3:1). நம்முடைய ஆதிப் பெற்றோர் கடவுளைச் சோதிக்க நினைத்து தாங்கள் பாவத்தில் வீழ்ந்து போனார்கள். அவர்கள் உண்மையின் இறுதி அதிகாரமாக இருக்க விரும்பினார்கள். இரண்டாவது ஆதாம் சோதிக்கப்பட்டபோது என்ன செய்தாரோ அதைத் தான் அவர்கள் அப்போது செய்திருக்க வேண்டும்: “அப்பாலே போ சாத்தானே!” (மத்தேயு 4:10), ஆனால் அவர்கள் தவறி விட்டனர். அத்தருணத்திலிருந்து மனிதன் சுய அதிகாரமுடையவனாக இருக்க விரும்புகிறான். கடவுளை நம்பாமல் தன்னையே நம்ப ஆரம்பித்தான். இப்படித்தான் பாவம் இந்த உலகத்திற்குள் வந்தது. கடவுள் பெண்ணின் வித்திற்கும் - வித்தாகிய அவரால் மீட்கப்பட்டவர்களுக்கும் – சாத்தானுடைய வித்திற்கும் – அவநம்பிக்கையாளர்களுக்கும் இடையில் பகையை வைத்திருக்கிறார் (ஆதியாகமம் 3:15). கடவுளுடைய சர்வ அதிகாரத்தினாலும் நீதியின்படியும் அளிக்கப்பட்ட இந்த சாபத்தினைப் பற்றி நாம் வேதாகமம் முழுவதும் வாசிக்கலாம். கடவுளுடைய மக்களுக்கும் அவநம்பிக்கையான கலாச்சாரத்திற்கும், மீட்கப்பட்டவர்களுக்கும் அவநம்பிக்கையாளர்களுக்கும் இடையில் காணப்படும் இந்த எதிர்மறைப் போக்கை நாம் பார்க்கிறோம். வேதாகமம் முழுவதும் கடவுளுடைய மக்கள் சமரசம் செய்துகொள்ளும்படி தூண்டப்படுகிறார்கள். கடவுளுக்கு எதிரான திருமணமாகட்டும் (ஆதியாகமம் 6:2), எதிர்கள் அல்லது கடவுளின் எதிரிகள் மீது இரக்கம் காண்பிப்பதாக இருக்கட்டும் (நியாயா.1:21, 27-36, சங்கீதம் 106:34-35), கடவுளுடைய வார்த்தையின் அதிகாரத்தைப் புறக்கணித்து தங்கள் சொந்த அதிகாரத்தை நிறுவுவதாக இருக்கட்டும் (நியாயா. 21:25), சிலைவழிபாட்டில் ஈடுபடுவதாக இருக்கட்டும் (சங். 106:36, 39, ஓசியா 2:2-13, 4:12, எசே. 16:15-25), கடவுளைத் தவிர வேறு நபரை அல்லது வேறு ஒன்றை நம்புவதாக இருக்கட்டும் (1இராஜா. 18:21, 2 நாளா. 16:7-9, ஏசாயா 31:1), மேசியாவை ஏற்றுக்கொள்ளத் தவறுவதாக இருக்கட்டும் (ஒர்ட்ய் 1:11), அல்லது சீசருக்கும் கடவுளுக்கும் ஒரே நேரத்தில் மண்டியிடுவதாக இருக்கட்டும் (அப். 17:7, வெளி. 13:8, 11-17) அது எப்போதும் நடைபெற்றுக்கொண்டிருப்பதை நாம் வேதாகமம் முழுவதும் நாம் பார்க்கிறோம். மேசியாவுக்கு இனங்களைக் கொடுத்தல் என்னும் கடவுளுடைய நோக்கத்தைக் கூட கடவுளுக்கு விருப்பமில்லாத வழியில் அடையும்படி சாத்தான் கடவுளின் மகனையே சோதித்தான் (சங். 2:8) – அவன் முன்வைத்த குறுக்க வழியின்படி சாத்தானுக்கும் பெண்ணின் வித்தாகிய “மேசியாவுக்கும்” இடையில் உள்ள பகை சமரசம் செய்யப்பட வேண்டும். நாம் சாத்தானடைய திட்டங்களை உண்மையில் அறிந்திருந்தால் (2 கொரி. 2:11), நம்மை எந்த காரியத்தில் சமரசம் செய்யச் சொல்கிறார்கள் என்பதை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

இதே எதிர்த் தன்மை ஆதியாகமம் 4-ம் அதிகாரத்தில் காயீன் ஆபேலைக் கொலை செய்யும் போதும் தொடர்ந்தது. காயீன் ஏன் ஆபேலைக் கொன்றான் என்றும் காயீனைப் போல நாம் இருக்கக்கூடாது என்றும் யோவான் நம்மை எச்சரிக்கிறார்: “பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.” (1 யோவான் 3:12). அதன் பின்பு நோவாவின் குடும்பம் உலகத்தின் மனித இனத்திலிருந்து வேறுபடுத்தப்பட்ட நிலையில் பழைய ஏற்பாடு தொடர்வதைப் பார்க்கிறோம் (ஆதி. 5-9). அவ்வாறே சேமுடைய மகன்கள் அவனுடைய மற்ற சகோதரர்களில் இருந்து பிரிக்கப்படுகிறார்கள் (ஆதி. 10). அதன் பிறகு ஆபிரகாமும் அவருடைய சந்ததியும் மற்ற இனங்களில் இருந்து வேறுபடுத்தப்படுகிறார்கள். இஸ்மவேலை விடுத்து ஈசாக்கு தெரிந்துகொள்ளப்படுகிறார். யாக்கோபு தெரிந்துகொள்ளப்படுகிறார். ஏசா தெரிந்துகொள்ளப்படவில்லை. அவ்வாறே இஸ்ரவேல் மக்கள் ஒரு தனி இனமாக தெரிந்துகொள்ளப்பட்டு அவர்கள் தங்களை தூய்மையாகக் காத்துக்கொள்ள வேண்டும் என்று கட்டளை பெறுகிறார்கள்.

இந்த எதிர்ப்பு நிலை அவநம்பிக்கையாளர்களுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் இடையில் கடவுளுடைய வழிக்கும் உலகத்தின் வழிக்கும் இடையில் உள்ள எதிர்ப்பு நிலையாக புதிய ஏற்பாட்டிலும் தொடர்கிறது. “என்னோடு இராதவன் எனக்கு எதிரியாக இருக்கிறான்” (மத். 12.30) என்று இதைத்தான் இயேசு குறிப்பிடுகிறார். ஏனெனில் “யாரும் இரண்டு முதலாளிகளுக்கு வேலை செய்ய முடியாது” (மத். 6:24). களைகளைப் பற்றிய உவமையிலும் இயேசு தீய பிள்ளைகளைக் சாத்தானால் விதைக்கப்பட்ட களைகளாக இயேசு அடையாளம் காண்கிறார் (மத். 13 38-39). நம்பிக்கையாளர்கள் அவநம்பிக்கையாளர்களுடன் திருமண உறவில் பிணைக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்திய பிறகு பவுல் இந்த காரியத்தையே வலியுறுத்தி “ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர்சொல்லுகிறார்.” (2 கொரி. 6:17) என்பதை நினைவூட்டுகிறார்.

இந்த எதிர்ப்பு நிலை ஆண்டவராகிய இயேசு இரண்டாம் முறை வரும்போது செம்மறி ஆடுகளையும் வெள்ளாடுகளையும் இரண்டாகப் பிரிக்கும்போது நித்திய காலமாக தொடரும். இரண்டு குழுக்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து போக முடியாதவை. அவை உலகத் தோற்றத்துக்கு முன்னும் அப்படித்தான் இருந்தது. நித்தியத்திலும் அப்படியே தொடரும். நம்பிக்கையாளர்களும் அவநம்பிக்கையாளர்களும் சமமாகப் பிணைக்கப்படக்கூடாது, ஏனெனில் ஒளிக்கும் இருளுக்கும் சம்மந்தம் இல்லை, நீதிக்கும் அநீதிக்கும் பங்கில்லை (2 கொரி. 6:14); சுருக்கமாகச் சொன்னால் ஆவிக்குரிய காரியமாக இருந்தாலும் அறிவு சார்ந்த காரியமாக இருந்தாலும் இந்த இரண்டு சாராருக்கும் பொதுவான தளம் என்று ஒன்றில்லை (2 கொரி. 6:15). பொல்லாங்கான் எய்யும் நெருப்பு அம்புகளை அணைத்துப் போடும் மக்களாக இருக்கும்படி கடவுளுடைய ஆயுதங்கள் அனைத்தையும் நாம் அணிந்துகொள்ள வேண்டும் என்று பவுல் ஆலோசனை வழங்குகிறார் (எபே. 6:10-17). இந்த ஆயுதங்களில் ஆவியின் வாள் என்னும் கடவுளுடைய வார்த்தையும் உள்ளடக்கப்பட்டிருக்கிறது (எபே. 6:17). பகுதி நேர நம்பிக்கையாளர் என்று யாரும் இல்லை. ஒன்று அவர் நம்பிக்கையாளராக இருக்க வேண்டும் அல்லது அவர் அவநம்பிக்கையாளராக இருக்க வேண்டும். கீழ்காணும் வசனங்கள் இந்த உண்மையைத் தெளிவுபடுத்துகின்றன.

மத்தேயு 12:30 -- "என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.”
சங்கீதம் 96:5 -- “சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.”
யாத்திராகமம் 8:23 -- “என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர்சொல்லுகிறார் என்று சொல் என்றார்.”
மல்கியா 3:18 -- “அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்.”
யாக்கோபு 4:4 -- “விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.”
யோவான் 14:6 -- “அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.”
எபேசியர் 4:17-19 -- “ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள். அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதய கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து; உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.”
எரேமியா 17:9 -- “எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?”
லூக்கா 11:23 -- “என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.”
மத்தேயு 6:24 -- “இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.”
1 இராஜா. 18:21 -- “அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர்தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.”

இந்த வசனங்களும் இன்னும் பல வசனங்களும் இந்த கருத்தையே வலியுறுத்திப் பேசுகின்றன: நாம் ஒரு நிமிடம் கூட கடவுளைப் புறம்தள்ளிவிட்டு மற்ற முதலாளிகளுக்குப் பணி செய்ய முடியாது. அந்த முதலாளிகள் எந்த வடிவத்திலும் வரலாம்.

www.Grace-and-Truth.net

Page last modified on April 12, 2023, at 07:45 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)