Home -- Tamil -- 08. Good News -- 0 Introduction
Next lesson
08. இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்
0 - முன்னுரை
சர்ச்சைக்குரிய கேள்விகள்: இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை இஸ்லாமியருக்கு எடுத்துரைக்க முற்படும் எவரும் அதில் சர்ச்சசைக்குரிய மூன்று காரியங்கள் இருப்பதை அறிந்துகொள்வர். இந்த மூன்று காரியங்களுமே அவர்களுடனான உரையாடலை சீக்கிரமாகவே முடிவுக்குக் கொண்டுவந்துவிடும். இஸ்லாமியர்களுடைய பார்வையில் அவை:
1.வேதாகமம்: நியாயப்பிரமாணங்களும், சங்கீதங்களும், நற்செய்திகளும் நம்பத்தகுந்தவை அல்ல, ஏனெனில் அவற்றை யூதர்களும் கிறிஸ்தவர்களும் மாற்றி எழுதிவிட்டார்கள்.
2. சிலுவை: கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்ததன் மூலமாக பரிகாரத்தை உண்டுபண்ணினார் என்றும், அதன் மூலம் நரக தண்டனையிலிருந்து விடுதலை கிடைக்கிறது என்றும் கூறும் கிறிஸ்தவர்களுடைய நற்செய்தி பொய்ப்பிரச்சாரம் ஆகும். ஏனென்றால் குரானுடைய கூற்றுப்படி கிறிஸ்து சிலுவையில் மரிக்கவே இல்லை. அது மட்டுமன்றி குற்றத்தினால் பாரமடைந்த எந்த ஆத்துமாவும் இன்னொரு ஆத்துமாவின் பாரத்தைச் சுமக்க முடியாது. வேறு வார்த்தைகளில் சொன்னால் பதிலாள் (பாவம் செய்தவருக்குப் பதிலாக இன்னொருவர் மரிக்கும்) பலிமுறை என்பது சாத்தியமானதல்ல.
3. திரித்துவம்: பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகியோர் ஒரு திரித்துவ இறைவன் அல்ல, அவர்கள் கிறிஸ்தவர்களுடைய போலிப்படைப்புகள். குரான் போதிக்கிறபடி இறைவன் ஒருவனே. அவர் பிதாவுமல்ல, குமாரனுமல்ல, பரிசுத்த ஆவியுமல்ல.
இஸ்லாமியர்களுக்கு நற்செய்தி அறிவிக்க முற்படும்போது இப்படிப்பட்ட கடினமாக காரியங்களில் சிக்கி ஆரம்பத்திலேயே உரையாடல் ஒரு முடிவுக்கு வந்துவிடாமல் எவ்விதமாக அவர்களுடன் பேசுவது? இஸ்லாமியர்களுடன் ஆவிக்குரிய கலந்துரையாடல்களில் ஈடுபடும் கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க கீழ்க்காணும் நடைமுறை ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மேலே பட்டியலிடப்பட்ட ஒவ்வொரு சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கும் கீழ்க்காணும் ஐந்து கலந்துரையாடல் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு ஐந்து வித்தியாசமான ஆலோசனைகள் கொடுக்கப்படுகிறது.
சூழ்நிலைகள்: இஸ்லாமியர்களை நாம் கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம் – மற்றவர்களை இஸ்லாமியர்களாக்க முயற்சிக்கும் இஸ்லாமியர், தங்களை அணுகும் மற்ற விசுவாசத்தைச் சேர்ந்தவர்களை எதிர்க்கும் இஸ்லாமியர், திறந்த மனதுள்ள இஸ்லாமியர்கள், நம்பிக்கையிழந்த இஸ்லாமியர்கள், முன்னாள் இஸ்லாமியர்கள். இவ்விதமான வெவ்வேறு இஸ்லாமியர்களுடன் கலந்துரையாடும்போது, வெவ்வேறு சவால்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய வெவ்வேறு சூழ்நிலைகள் உருவாகும். கீழ்க்காணும் சவால்களின் பட்டியல் இஸ்லாமியர்களுடனான கலந்துரையாடல்களில் எழக்ககூடிய அடிப்படையான சூழ்நிலைகளை நமக்கு அறிவுறுத்துகிறது.
1. இஸ்லாத்தை ஆதரிக்கும் குரானுடைய வாதங்களுக்குப் பதிலளித்தல். இந்த சவால் மற்றவர்களை இஸ்லாமியர்களாக மாற்ற முயற்சிக்கும் இஸ்லாமியர்களுடனான கலந்துரையாடல்களில் அதிக முக்கியத்துவம் பெறும். இவர்கள் கிறிஸ்தவர்களையும் இஸ்லாத்திற்கு அழைக்கும் சுறுசுறுப்பான மறைபரப்பும் பணியாளர்கள்.
2. நற்செய்திக்கு எதிரான குரானின் வாதங்களை மறுத்துரைத்தல்.' தங்களை அணுகும் மற்ற விசுவாசத்தைச் சேர்ந்தவர்களை எதிர்க்கும் இஸ்லாமியர்களுடன் பேசும்போது, நற்செய்திக்கு எதிராக முன்வைக்கப்படும் குரானுடைய வாதங்களை குரானைக் கொண்டே மறுத்துரைப்பதற்கு இது பயனுள்ள முறையாகும்.
3. நற்செய்திக்கான குரானுடைய வாதங்களை எடுத்து முன்வைப்பது. திறந்த மனதுள்ள இஸ்லாமியர்களுக்கு குரானிலிருந்து நற்செய்திக்கு சார்பான வாதங்களை எவ்வாறு எடுத்துரைப்பது என்பதை இன்று கிறிஸ்தவர்களாயிருக்கும் முன்னாள் இஸ்லாமியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.
4. நற்செய்திக்கான வேதாகம வாதங்களை அறிமுகம் செய்தல். நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்க நாம் ஒவ்வொருவரும் ஆயத்தமானவர்களாயிருக்க வேண்டும். உதாரணமாக நம்பிக்கையிழந்த இஸ்லாமியர்கள் வேதாகமத்தின் சத்தியங்களை தாங்களே அறிந்துகொண்டு விசுவாசத்தினால் வேதாகமத்தின் அடிப்படைச் சத்தியத்தைப் பெற்றுக்கொள்ளும் வண்ணமாக நாம் நற்செய்தியை அறிவிக்கக் கூடியவர்களாயிருக்க வேண்டும்.
5. இஸ்லாமிற்கு எதிரான குரானுடைய வாதங்களை நாம் எடுத்து முன்வைக்க வேண்டும். முன்னாள் இஸ்லாமியர்கள் மீண்டும் இஸ்லாத்திற்குத் திரும்பிச் செல்லும் ஆபத்திருக்கிறது. அவர்கள் தங்கள் கிறிஸ்தவ விசுவாசத்தைக் கைவிட்டுவிடாதபடி, அவர்களுக்கு உதவிசெய்ய குரானுடன் தொடர்புடைய சிறப்பான வாதங்கள் மிகவும் முக்கியமானவை.
நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த மூன்று கேள்விகளையும் மேற்கண்ட ஐந்து உரையாடல் சூழ்நிலைகளில் எவ்விதமாகக் கையாள்வது என்பதை நாம் கவனிக்கப்போகிறோம். அதன் விளைவாக நாம் பதினைந்து பாடங்களைப் படிக்கவிருக்கிறோம். அவற்றின் பட்டியல் இந்த அறிமுக உரையின் இறுதியில் தரப்பட்டுள்ளது.
பாடங்களின் ஒழுங்குமுறை: நாம் பாடங்களைத் துல்லியமாகக் கற்றுக்கொள்வதற்காக, இவ்வரிசையிலுள்ள 15 பாடங்களும் (சில பாடங்கள் நீங்கலாக) கீழ்க்காணும் பிரிவுகளைக் கொண்டிருக்கும்.
1. சவால்: இப்பகுதியில் ஒவ்வொரு சந்திப்பின் ஆரம்பப் புள்ளியைப் பற்றியும் மேலோட்டமாகக் குறிப்பிடுவதுடன், அதன்விளைவாக குறிப்பிட்ட பாடப்பொருளுடன் தொடர்புள்ள நிலையில் எழும் கேள்விகளை சிந்திப்போம்.
2. பதில்: இந்தப் பதினைந்து பாட வரிசையில் பொதுவாக இந்தப் பகுதிதான் நீண்டதாக இருக்கும். இப்பகுதியில் குறிப்பிட்ட சவால்களுக்குப் பதிலளிக்கத்தக்க பயனுள்ள கருத்துக்களை நாம் வழங்குவோம்.
3. துக்க செய்தி: இந்தத் தலைப்பின் கீழ் ஏன் ஒரு இஸ்லாமியர் நற்செய்திக்கு எதிராக அவர் கொண்டுவரும் வாதங்களை சார்ந்திருக்க முடியாது என்பதற்கான காரணத்தைச் சுருக்கிக் கூறுவோம்.
4. நல்ல செய்தி: இப்பகுதியில் நாங்கள் கொடுக்கும் பதில்களிலிருந்து இஸ்லாமியர்களுக்குக் கிடைக்கும் புதிய ஆவிக்குரிய புரிதல்களைத் தொகுத்துக்கூறுவோம்.
5. கூடுதல் தகவல்: ஒரு குறிப்பிட்ட பாடத்தைக் குறித்த புரிந்துகொள்ளுதலை இன்னும் ஆழப்படுத்துவதற்காக சில இடங்களில் கூடுதல் தகவல்களைத் தருவோம்.
6. சாட்சி: இது முற்றிலும் நடைமுறைக்குரியதாக இருக்கும். முன்னாள் இஸ்லாமியர்களுடைய குறிப்பிட்ட அனுபவங்களின் வாயிலாக அவர்கள் ஏன் இஸ்லாத்தைக் கைவிட்டு இன்று இயேசுவைப் பின்பற்றுகிறார்கள் என்பதை வாசகர்கள் கண்டுகொள்வர்.
7. விண்ணப்பம்: நம்பிக்கையைப் பற்றிய வெறும் பேச்சுடன் நின்றுவிடாமல், அதை நடைமுறைப்படுத்துவதற்கு வகைசெய்யும்படி, இஸ்லாமியர் ஏறெடுக்கக்கூடிய விண்ணப்பங்களை ஒவ்வொரு பாடத்திற்கும் உகந்தாற்போல வடிவமைத்திருக்கிறோம்.
8. கேள்விகள்: வாசிப்பவரின் சிந்தனையைத் தூண்டும்வகையில், ஒவ்வொரு பாடத்துடனும் தொடர்புடைய கேள்விகளை நாம் கேட்டிருக்கிறோம். அந்தக் கேள்விகளை நாம் இஸ்லாமியர்களுடனான உரையாடலில் பயன்படுத்தலாம்.
9. மனப்பாடம்: இஸ்லாமியர்கள் தங்கள் இறைநூலைப் படிப்பதோடு மட்டுமன்றி, அதை மன்பாடமும் செய்கிறார்கள். இந்தப் பகுதியில் குறிப்பிட்ட பாடத்துடன் தொடர்புடைய வேதப் பகுதிகளை நாம் கொடுத்திருக்கிறோம். அவற்றை நாம் மனப்பாடம் செய்தால் அவை நமது ஆவிக்குரிய வளர்ச்சிக்குரிய வேர்களாயிருக்கும்.
நாம் வழங்கியுள்ள இந்த 15 பாடங்களுக்கும் பின்தொடராக, பிற்சேர்க்கையில் இஸ்லாமியர்களுடனான கலந்துரையாடலில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளையும் நாம் வழங்கியிருக்கிறோம்.
பொருளடக்கம்
முன்னுரை
1. வேதாகமம் 1 – குரான் பிழையற்றதா?
2. வேதாகமம் 2 – வேதாகமத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா?
3. வேதாகமம் 3 – மோசே முஹம்மதுவின் வருகையைப்பற்றி முன்னுரைத்தாரா?
4. வேதாகமம் 4 - நீங்கள் ஏன் வேதாகமத்தை நம்பலாம்?
5. வேதாகமம் 5 – ஏன் இஸ்லாமியர்கள் வேதாகமத்தை நம்புவதில்லை.
6. சிலுவை 1 – யார் நரகத்திற்குப் போவார்கள்?
7. சிலுவை 2 - கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டாரா?
8. சிலுவை 3 – ஆபிரகாமுடைய மகன் எவ்வாறு விடுவிக்கப்பட்டான்?
9. சிலுவை 4 – உங்கள் பாவங்களுக்காக இயேசு ஏன் மரித்தார்?
10. சிலுவை 5 – குரான் ஏன் சிலுவையை மறுதலிக்கிறது?
11. திரித்துவம் 1 - கிறிஸ்துவை விடுத்து முகமதுவை ஏற்பது ஏன்?
12. திரித்துவம் 2 – இறைவனுடைய திரியேகத்துவம் ஒரு பொய்யா?
13. திரித்துவம் 3 - கிறிஸ்து ஆதாமைப் போன்றவரா?
14. திரித்துவம் 4 – இறைவன் எவ்வாறு திரியேகராயிருக்க முடியும்?
15. திரித்துவம் 5 – குரான் ஏன் திரியேக இறைவனை மறுதலிக்கிறது?
பிற்சேர்க்கை – இஸ்லாமியர்களுடன் உரையாடுவதற்கான அவசியமான விதிமுறைகள்