Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":

Home -- Tamil -- 08. Good News -- 1 Is the Koran infallible?

This page in: -- Chinese -- English -- French -- German? -- Indonesian -- TAMIL -- Turkish

Previous lesson -- Next lesson

08. இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்

1 - குரான் பிழையற்றதா?



சவால்: வேதாகமத்திலுள்ள நூல்கள் மாற்றி எழுதப்பட்டு கறைபடுத்தப்பட்டது என்று இஸ்லாமியர்கள் நம்புகிற காரணத்தினால் அவர்கள் வேதாகமத்தை மனப்பாடம் செய்வதோ மேற்கோள் காட்டுவதோ இல்லை. ஆனால் குரான் கறைபடாதது என்றும் தவறற்றது என்றும் அவர்கள் நம்புவதால் அதை அவர்கள் மனப்பாடம் செய்வதுடன் அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்கள். ஆகவே கிறிஸ்தவர்களும் இனிமேல் வேதாகமத்தை அல்ல குரானையே நம்ப வேண்டும் என்று அவர்கள் அழைக்கிறார்கள். ஒரு கிறிஸ்தவன் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளலாமா? குரான் பிழையற்றதா?

பதில்: அல்லாஹ் பரத்திலிருந்து குரானை முகமதுவின் மீது இறக்கிக்கொடுத்தார் என்று பல இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். ஒரு முழுமையடைந்த புத்தகமாகவே குரான் தேவதூதனால் முகமதுவிற்குக் கொடுக்கப்பட்டது என்று அவர்கள் கருதுகிறார்கள். அல்லாஹ் குரானைப் பிழையற்றதாகக் கொடுத்திருப்பதால் அது அழிவற்றது அதில் தவறிருக்க முடியாது என்பதில் அவர்கள் உறுதியாயிருக்கிறார்கள்.

ஆனால் குரான் எவ்விதமாக வந்தது என்று இஸ்லாமிய அறிஞர்களிடம் கேட்பீர்களானால் முற்றிலும் வித்தியாசமான பதிலையே நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். யூதர்களுடைய அல்லது கிறிஸ்தவர்களுடைய வேதத்திலிருந்து முகமது எதையும் வாசித்து எழுதிவிடவில்லை என்பதை நிரூபிப்பதற்காக முகமதுவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்று அவர்கள் போதிப்பார்கள். அத்துடன், அவர்கள் குரான் முழுவதையும் முகமது ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் குரானுடைய தனிப்பட்ட பகுதிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்ளாக முகமதுவுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலையில் தெரியப்படுத்தப்பட்டது என்றும் வலியுறுத்துவார்கள். கி. பி. 632-ல் முகமது மரித்தபோது குரான் ஒரு புத்தகமாக இருக்கவில்லை என்று இந்த இஸ்லாமியர்கள் சொல்லுவார்கள். முகமதுவுடன் வாழ்ந்த நபித்தோழர்கள் குரானுடைய வெவ்வேறு பகுதிகளை மனப்பாடம் செய்து அவற்றில் சிலவற்றை மரப்பட்டைகளிலும், மிருகங்களுடைய தோல்கள் மற்றும் எலும்புகளிலும் எழுதி வைத்தார்கள். கி. பி. 653-ல்தான் அனைத்து இஸ்லாமியர்களின் ஆட்சியாளரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அதிகாரபூர்வமான இஸ்லாமிய ஆணையம் அப்போதிருந்த பகுதிகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து பின்பற்றத்தக்க ஒரே ஆவணமாக குரானை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து, அந்தக் குரானுக்குப் போட்டியாக இருந்த மற்ற அனைத்துக் கையெழுத்துப் பிரதிகளும் எரிக்கப்பட வேண்டும் என்று கலிபா உதுமான் கட்டளையிட்டார். அவருடைய அதிகாரபூர்வ ஆணையத்தின் பதிப்பு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்றுவரை ஷியா முஸ்லிம்களும் ஷன்னி முஸ்லிம்களும் குரானுடைய தோற்றத்தைக் குறித்து தங்களுக்குள் வாதிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். சையத்துக்களின் இமாமாகிய அலியை மற்ற முஸ்லிம்களுக்கு மேலாக உயர்த்திப்பேசும் சில குரானிய வசனங்களை அந்த ஆணையம் குரானில் சேர்க்கத் தவறிவிட்டது என்று ஷியாக்கள் நம்புவதால் இன்றளவும் இதைக் குறித்து அவர்கள் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இஸ்லாமிய அறிஞர்களும் குரானை மனப்பாடமாக அறிந்து, அதை ஓதும் கலையில் (தஸ்வீய்ட்- tajwiid) பயிற்சி பெற்றவர்களிடம் கேட்டுப் பார்த்தால், குரான் என்பது ஒன்றல்ல என்றும் அவர்கள் பல்வேறு குரான்கள் இருக்கிறது என்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். இதை அவர்கள் வெவ்வேறு விதமான “வாசிப்புகள்” அல்லது “ஓதும் வகைகள்” (குய்ரா ஆயத்- qira'aat) என்று அழைக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு குரான் வாசிப்பிற்கும் இஸ்லாமின் ஆரம்ப காலத்திலிருந்த ஓர் அதிகாரத்தை மேற்கோள் காட்டுகிறார்கள். இன்றைக்கு வரைக்கும் அந்த ஓதுதல்தான் சரி என்று வாதிடுகிறார்கள். அந்த அதிகாரத்தின் ஒவ்வொரு வாசிப்புகளும் இரண்டு இஸ்லாமிய உத்தரவாதிகளால் வெவ்வேறு வழிகளில் அங்கீகரிக்கப்படும். இன்று ஏறத்தாழ உலகமெங்கும் அரபிய நூலாக விநியோகிக்கப்பட்டுள்ள குரானுடைய பதிப்பு ஹாப்ஸ் (Hafs) என்பவரால் அங்கீகரிக்கப்பட்ட (இவர் கி. பி. 796-ல் இறந்தார்), ஆசிம் ('Asim) என்பவருடைய வாசிப்புகளை உள்ளடக்கியுள்ளது (இவர் 745-ல் இறந்தார்). ஆயினும் இன்னும் ஆறு வேறுபட்ட குரான் வாசகங்கள் இருக்கிறது. அவற்றில் ஒன்று நாபியின் (Nafi') வாசிப்பு (இவர் 785-ல் இறந்தார்). இது வார்ஸ் (Warsh, இவர் 812-ல் இறந்தார்) என்பவரால் அங்கீகரிக்கப்பட்டது. இந்தப் பதிப்புத்தான் இன்னும் மொரோக்காவில் அச்சாகிறது. இபின் அமீர் (736-ல் இறந்தவர்), இபின் கதிர் (738-ல் இறந்தவர்), அபு அமர் (770-ல் இறந்தவர்), ஹம்சா (773-ல் இறந்தவர்) மற்றும் அல் காசாய் (804-ல் இறந்தவர்) ஆகியோருடைய வாசிப்புகளே மற்ற ஐந்து வாசிப்புகளாகும். சில இஸ்லாமிய அறிஞர்கள் தத்தமது இஸ்லாமிய அதிகாரங்களின்படி பேரிடப்பட்டதும் இரண்டு முஸ்லிம் உத்தரவாதிகளால் தத்தமது வழிகளில் அங்கீகரிக்கப்பட்டதுமான வித்தியாசமான வாசிப்புகள் மொத்தம் பதினான்கு இருக்கிறது என்று ஏற்றுக்கொள்கிறார்கள். கி. பி. 1988-ல் சவுதி அரேபியா குரானுடைய ஒரு பதிப்பை அங்கீகரித்தது. அதில் ஹாப்ஸால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிமின் வாசிப்பு நடுவிலும் பெரும்பான்மை பாடத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் அந்த வசனத்தை மற்ற 19 இஸ்லாமிய உத்தரவாதிகள் எவ்வாறு கூறியிருக்கிறார்கள் என்பது ஓரங்களிலும் அச்சிடப்பட்டிருக்கும். அந்த குரான் பதிப்பை நான் படித்து, குரானுடைய வெவ்வேறு வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களுடைய பொருள் வாசிப்புகளைப் பொறுத்து மாறுபடுகிறது என்பதைக் கண்டிருக்கிறேன்.

துக்க செய்தி: அல்லாஹ் முகமதுவுக்கு இறக்கிக்கொடுத்த குரானிய வசனங்களை எந்த குரானிய பதிப்பு உள்ளடக்கியுள்ளது என்பதில் ஷியா மற்றும் ஷன்னி முஸ்லிம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. மேலும் பக்தியுள்ள முஸ்லிம்களால் தொடர்ந்து ஓதப்படும் குரானில் 28 பதிப்புகள் இருக்கிறது (பதினான்கு வாசிப்புகளும் இரண்டு உத்தரவாதிகளால் இருவேறு வாசிப்புகளாக்கப்பட்டுள்ளது). இந்தக் குரான்களில் எது பிழையற்றது? இந்த 28 குரான்களுமே பிழையற்றவை என்று முஸ்லிம்கள் கோரினால், பிழையின்மை என்பதன் பொருள்தான் என்ன? ஆகவே குரான் அல்லாஹ்வினால் பிழையற்ற நூலாக உருவாக்கப்படவில்லை என்று நான் நம்புகிறேன்.

நல்ல செய்தி: என்னுடைய வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் என்னைக் கட்டுப்படுத்திய குரானிலிருந்து இந்த இஸ்லாமியப் போதனைகள் என்னை விடுவித்திருக்கிறது. என் வாழ்வின் மீதான குரானுடைய அதிகாரம் முறிக்கப்பட்டுவிட்டது. இனிமேல் நான் குரான் என்ற நூலினால் கட்டுப்படுத்தப்படாதவனாக சுயாதீனத்துடன் சத்தியத்தைத் தேடக்கூடியவனாக இருக்கிறேன்.

கூடுதல் தகவல்: இன்றைக்கு இருக்கின்ற குரானுடைய பதிப்புகள் எவ்வாறு பழைய குரான் பதிப்புகளுடன் வேறுபடுகிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்காக அருங்காட்சியகங்களையும் தனிப்பட்டவர்களுடைய சேகரிப்புகளையும் ஆராய்வது அற்புதமான அனுபவமாகும். பிரான்கோயிஸ் டெரோச்சி என்பவர் எழுதிய அப்பாசித் பாரம்பரியம்: கி. பி. 8-ம் நூற்றாண்டு முதல் 10-ம் நூற்றாண்டு வரை இருந்த குரான்கள் என்ற நூலில் (François Déroche: The Abbasid Tradition. Qur'ans of the 8th to the 10th centuries AD (Oxford University Press 1992) , இஸ்லாத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில் காணப்பட்ட குரான் முலப்பிரதிகளைப் பற்றிய விவரங்களைக் காணலாம். அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது கீழ்க்காணும் வேறுபாடுகள் தெரிகின்றது.

1. கி. பி. 800-க்கு முற்பட்ட குரானிய மூலப்பிரதிகள் ஒரு வகையான சரிவான எழுத்தின் மூலம் உருவாக்கப்பட்டவை. இவ்வெழுத்து முறை இஜாசியின் மாயில் (Ma'il of Hijazi) எழுத்து என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக அ அல்லது க என்பதற்கான அரபு எழுத்து இன்றைக்கு எழுதப்படுவதுபோல, மேலிருந்து கீழாக செங்குத்தாக எழுதப்படுவதில்லை. மேல் வலதுபுறத்திலிருந்து, கீழ்நோக்கி இடதுபுறமாக சரிவாக எழுதப்படும். மேலும் இன்றைக்கு இருக்கும் குரானில் காணப்படும் பல வார்த்தைகள் பழைய குரான்களில் காணப்படுவதில்லை.

2. ஆரம்ப கால குரான் மூலப்பிரதிகளில் அனைத்து மெய்யெழுத்துக்களையும் ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திப் பார்க்க இயலாது. உதாரணமாக B, T, TH, N மற்றும் Y ஆகியவற்றுக்கான அரபு எழுத்துக்கள் ஒன்றுபோலவே தோற்றமளிக்கும். காலப்போக்கில் எழுத்துவடிவத்திலுள்ள வேறுபட்ட அரபு எழுத்துக்களைப் பிரித்தறிவதற்கான குறிகள் சேர்க்கப்பட்டன. ஆரம்பத்தில் சிறிய கோடுகள் பயன்படுத்தப்பட்டன. கி. பி. 900-க்குப் பிறகு இன்றிருப்பதைப் போல, ஒவ்வொரு அடிப்படை எழுத்துக்களுக்கு கீழேயோ அல்லது மேலேயோ புள்ளிகளை வைப்பதன் மூலமாக வேறுபடுத்தி அறியப்பட்டன. ஆகவே அராபிக் மெய்யெழுத்துக்களைப் பொறுத்தவரை ஆரம்ப கால குரானியப் பாடங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்தருபவையாகவே இருந்தன.

3. கி. பி. 950-க்குப் பிறகே பழைய குரானிய மூலப்பிரதிகளின் அனைத்து வார்த்தைகளுக்கு மேலும் சிறிய உயிரெழுத்து அடையாளங்கள் போடப்பட்டது. ஆரம்பத்தில் அவை தடித்த புள்ளிகளாக இருந்தன. பிறகு இன்று இருப்பதைப் போல எழுத்துக்களுக்கு மேலாகவோ கீழாகவோ சிறிய கோடுகள் அல்லது எழுத்துக்கள் எழுதப்படுகின்றன. ஒரு அரபு வார்த்தையின் பொருள் அவ்வார்த்தையிலுள்ள உயிரெழுத்தையே அதிகம் சார்ந்திருப்பதால், உயிரெழுத்துக்களின் அடிப்படையிலும் பழைய குரான்கள் தெளிவற்ற பொருளுடையவையாகவே உள்ளன.

இன்றிருக்கும் குரான்களில் உள்ளதைப் போல உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் கொண்டிருக்கும் மிகப்பழைமையான குரான் கி. பி. 1000-ம் வருடத்தைச் சேர்ந்ததாகவே அறியப்படுகிறது. அது பாக்தாத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளராகிய இபின் அல்-பவாப்பினால் (Ibn al-Bawwab) எழுதப்பட்டது. இன்றிருக்கும் குரானிலிருந்து அனைத்து ஆரம்ப கால குரான்களும் வேறுபடுகின்றன. ஆரம்ப கால மூலப்பிரதிகளில் உள்ள எழுத்துக்களின் தன்மையினால் ஏற்படும் தெளிவின்மை காரணமாகவே பிறகாலத்தில் வெவ்வேறு குரானிய வாசிப்புகள் தோன்றின.

சாட்சி: என்னுடைய பெயர் அசாலி, நான் பாக்கிஸ்தானைச் சேர்ந்தவன். நான் வாலிபனாயிருக்கும்போது குரான் தவறற்றது என்று இஸ்லாமியப் போதகர்கள் எனக்குக் கற்பித்தார்கள். ஏனெனில் அது அல்லாஹ்வினால் முத்திரையிடப்பட்டது (மாசோஅம் – ma'soum) என்று அவர்கள் சொன்னார்கள். என்னுடைய வகுப்பில் இருந்த இரண்டு கிறிஸ்தவ மாணவர்களைத் தவிர அனைவருமே இஸ்லாமியர்கள்தான். அந்த இரண்டு கிறிஸ்தவ மாணவர்களையும் இஸ்லாமிற்கு மாற்ற நான் விரும்பினேன். அதற்காக அவர்களுடைய வேதாகமத்தைவிட என்னுடைய குரான் அதிக பலம் வாய்ந்தது என்று அவர்களுக்குக் காண்பிக்க விரும்பினேன். அவர்கள் தங்கள் வேதாகமத்தைக் கொண்டுவந்து குரான் அதைவிடச் சிறந்தது என்று அனுபவித்து அறிய வேண்டும் என்று சவால்விட்டேன். அவர்கள் தங்கள் வேதாகமத்தைக் கொண்டுவந்தார்கள், நானும் என்னுடைய குரானைக் கொண்டு சென்றேன். குரான் அல்லாவினால் முத்திரையிடப்பட்டதால் அதை அழிக்க முடியாது என்ற நான் நம்பினேன். ஆகவே இரண்டு தரப்பினரும் தங்கள் புத்தகத்தை எரிக்க வேண்டும் என்று கூறினேன். எந்த புத்தகம் எரிகிறதோ அது பெலவீனமானது என்று நிரூபிக்கப்படும். அல்லா தீயிலிருந்து குரானைக் காப்பார் என்ற நம்பிக்கையில் நான் என்னுடைய குரானுக்குத் தீயிட்டேன். ஆனால் தீயிட்ட சில நிமிடங்களுக்குள்ளாக என்னுடைய குரான் முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிட்டது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அது என்னை முற்றிலும் பாதித்தது. கிறிஸ்தவர்களுடைய வேதாகமமும் குரானைவிடச் சிறந்ததல்ல என்பதை நிரூபிப்பதற்காக நான் அதை எரிக்க முயன்றேன். நான் எவ்வளவோ முயற்சி செய்தபோதிலும் அந்நாளில் எந்த சூழ்நிலையிலும் அது எரியவில்லை. இந்த நிகழ்வு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதால் நான் மயங்கி விழுந்தேன். நான் மீண்டும் எழுந்தபோது வேதாகமத்தின் சத்தியத்தை விசுவாசித்தேன். பக்தியுள்ள இஸ்லாமியர்களாகிய என்னுடைய பெற்றோர் என்னுடைய விசுவாசத்தைக் கண்டு கலங்கினவர்களாக என்னை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டார்கள். அதன்பிறகு நான் பல துன்பங்களை அனுபவித்தாலும் என்னுடைய புதிய விசுவாசத்தில் உறுதியாயிருந்தேன். அதன் பிறகு நான் ஒரு வேதாகமக் கல்லூரிக்குச் சென்றேன். இன்று நான் என்னுடைய நாட்டிலுள்ள இஸ்லாமியர்களுக்கும், இன்டர்நெட் மூலமாக உலகமெங்கிலும் வேதாகமம் நம்பத்தகுந்தது என்றும் குரான் தவறுள்ளது என்றும் சாட்சியிட்டு வருகிறேன்.

விண்ணப்பம்: வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள இறைவா, குரானைக் குறித்த இந்த உண்மைகள் என்னை ஆழமாக அசைக்கின்றன. நீர் உம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாகவும் செய்தியாளர்கள் மூலமாகவும் உம்மை எங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர் என்று நான் நம்புகிறேன். உம்முடைய உண்மையான வார்த்தையைக் கண்டுபிடிக்க எனக்கு உதவிசெய்யும். உம்முடைய சத்தியத்தை ஏற்றுக்கொள்ள என்னை ஆயத்தப்படுத்தும்.

கேள்விகள்: கலிபா உதுமான் அவர்கள் குரானுடைய மூலப்பிரதிகளை ஏன் எரித்தார்? இன்றிருக்கும் வேறுபட்ட குரான்கள் எத்தனை, அவை எந்த இஸ்லாமிய அதிகாரத்தின் பெயரால் அழைக்கப்படுகின்றன? இன்றைய குரான் ஆரம்ப கால குரானிய மூலப்பிரதிகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றது?

மனப்பாடம்: கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும். சங். 86:11 – (தீர்க்கதரிசியாகிய தாவீதின் வார்த்தைகள்).

www.Grace-and-Truth.net

Page last modified on June 07, 2013, at 11:16 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)