Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":

Home -- Tamil -- 08. Good News -- 6 Who goes to hell?

This page in: -- Chinese -- English -- French -- German? -- Indonesian -- TAMIL -- Turkish

Previous lesson -- Next lesson

08. இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்

6 - யார் நரகத்திற்குப் போவார்கள்?



சவால்: பக்தியுள்ள முஸ்லிம்கள் கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக தம்முடைய உயிரைக்கொடுத்தார் என்று நற்செய்தி கூறுவதைப் புறக்கணிக்கிறார்கள். ஏனென்றால் கிறிஸ்துவின் சிலுவை மரணம் என்பது ஒரு ஏமாற்று வேலை என்றும் கிறிஸ்தவர்கள் நற்செய்தி நூல்களைத் திருத்தி எழுதிய காரணத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்று என்றும் அவர்கள் கருதுகிறார்கள். கிறிஸ்து கொல்லப்படவில்லை என்றும் சிலுவையில் அறையப்படவில்லை என்றும் குற்றத்தினால் பாரம் சுமக்கும் எந்த ஆத்துமாவும் இன்னொரு ஆத்துமாவின் பாரத்தை சுமக்க முடியாது என்று குரான் சொல்வதை அவர்கள் நம்புகிறார்கள். நரகத்திலிருந்து காக்கப்படுதல் என்ற அவர்களுடைய விசுவாசத்தின் அடிப்படையில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் பதிலாள் மரணத்தை (Substitutionary Death) நம்பக்கூடாது என்று அவர்களுக்கு அழைப்புவிடுகிறார்கள். அதற்குப் பதிலாக கிறிஸ்தவர்கள் குரானும் இஸ்லாத்தும் பரிந்துரைக்கும் நற்செயல்களைச் செய்ய வேண்டும் என்றும் அவைகள்தான் நியாயத்தீர்ப்பு நாளில் அவர்களுக்கு நேரிடவிருக்கும் தீமையிலிருந்து அவர்களைக் காக்க வல்லது என்றும் அவர்கள் கிறிஸ்தவர்களை அழைக்கிறார்கள். இந்த வழியின் மூலமாக மட்டுமே மக்கள் நரகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு பரதீஸிற்குப் போகும் வழியாகும் என்கிறார்கள். இந்த அழைப்பை கிறிஸ்தவர்கள் பின்பற்ற முடியுமா? நற்செயல்கள் இரட்சிப்பை உண்மையில் உறுதிசெய்யுமா?

பதில்: குரானுடைய போதனையின்படி யார் நரகத்திற்குப் போவார்கள் என்ற போதனையை ஆராய்ந்து பார்த்தால் இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டுகொள்ளலாம். இந்தக் கேள்விக்குப் பதிலைக் காண்பதற்கு நான்கு வகையான வசனங்களைக் குரானிலிருந்து காணலாம்.

1. பாவிகள் நரகத்திற்குப் போவார்கள். நரகம் பாவிகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனை என்று குரான் சொல்லுகிறது. கீழ்க்கண்ட இஸ்லாத்தின் பாவங்களுக்காக நரக தண்டனை வழங்கப்படும் என்று குரானில் அல்லாஹ் எச்சரிக்கை விடுக்கிறார்: இஸ்லாத்தை நிராகரிப்பவர்கள் (காஃபிர் (kufr) – 16 x; உதாரணம் சுரா 9:68); அல்லாஹ்வின் தெய்வத்துவத்திற்கு இணையை உண்டாக்குபவர்கள் (ஸர்க் (shirk) – 3 x; உதாரணம் சுரா 17:39); நரகத்தை மறுதலிப்பவர்கள் (தாஹிப் ஜஹனம் (takdhib jahannam) – சுரா 55:43); அல்லாஹ்வையும் முஹம்மதுவையும் வார்த்தைகளால் எதிர்ப்பவர்கள் அல்லது தாக்குபவர்கள் (தஹாதூத் (tahaadud) - சுரா 9:63; 72:23); பெருமையுடனிருந்து முஹம்மதுவைப் பரிகசிப்பவர்கள் அல்லது புறக்கணிப்பவர்கள் (இஸ்திக்பார் (istikbaar) – 5 x; சுரா 39:59); நம்பிக்கைத்துரோகம் செய்பவர்கள் (குப்த் (khubth) – சுரா 8:36); குற்றச்செயல்கள் புரிபவர்கள் (ஜுர்ம் (jurm) – 5 x; சுரா 20:74); ஒரு முஸ்லிமாக இருந்துகொண்டு இன்னொரு முஸ்லிமை மனப்பூர்வமாகக் கொலைசெய்பவர்கள் (காட்ல் (qatl) – சுரா 4:93); ஒரு முஸ்லிமாக போதிய அளவு நற்செயல்கள் செய்யாதவர்கள் (கஃபாத் மஷாவி நுஹு (khaffat mawaazinuhu) – சுரா 23:103); ஒரு முஸ்லிமாக உண்மை வழியை விட்டு விலகி போதிய அளவு பிச்சை கொடாதவர்கள் (அல் குவாஸிடூன் (al-qaasituun) – சுரா 72:14); கிறிஸ்துவைப் பின்பற்றுபவராக இருந்துகொண்டு இஸ்லாத்தைப் புறக்கணிப்பவர்கள் (கபிர் அல்பா ஈசா (kufr atbaa' 'Isa) – சுரா 3:54) மற்றும் இறுதியாக பலதெய்வ வழிபாடு செய்பவர்கள் (முஸ்ரிக் (mushrik) – சுரா 48:6). இந்தக் குற்றவாளிகளுடைய பட்டியலில் பெரும்பாலானோர் முகமதுவின் எதிரிகளாகவும் அவரை விமர்சித்தவர்களாகவும் இருந்ததால் அவருடைய வெறுப்புக்கு உள்ளானவர்கள் என்பது தெரிகிறது. அவர்களுக்கு நரகம் கிடைக்கும் என்று சொல்வதன் மூலம் அவர் அவர்களைப் பழிதீர்த்துக்கொண்டார்.

2. அல்லாஹ் தான் விரும்புகிறவர்களை நரகத்தில் வாதிக்கிறார். குரானைப் பொறுத்தவரை ஒருவனுக்கு இரக்கம் காட்டுவதும் அவனைத் தண்டிப்பதும் அல்லது துன்புறுத்துவதும் முற்றிலும் அல்லாஹ்வைப் பொறுத்தது. “உங்களுடைய இறைவன் உங்களைப் பற்றி நன்கறிவான்; அவன் நாடினால் உங்களுக்குக் கிருபை செய்வான்; அல்லது அவன் நாடினால் உங்களை வேதனை செய்வான்; நாம் உம்மை அவர்களுக்குப் பொறுப்பாளியாக அனுப்பவில்லை” (சுரா பனீ இஸ்ராயீல் 17:54; மேலும் சுரா அல் அன்கபூத் 29:21 மற்றும் அல் மாயிதா 5:40-ஐயும் பார்க்கவும்). ஒரு முஸ்லிமிற்கு அல்லாஹ் தன்னைக் குறித்து என்ன முடிவெடுப்பார் என்பதை அறிந்துகொள்ள முடியாது. அல்லாஹ் அவருக்கு இரக்கம் காண்பிப்பாரா அல்லது நரகத்தில் வாதிப்பாரா என்பது அவருக்குத் தெரியாது. “நீங்கள் பரதீஸிற்குப் போவீர்களா?” என்று நீங்கள் ஒரு முஸ்லிமிடம் கேட்டால், அவர் “இன்சா அல்லாஹ்” என்று சொல்வார். அதற்கு “அல்லாஹ் விரும்பினால்” என்று பொருள். இஸ்லாத்தில் நிச்சயம் கிடையாது.

3. இஸ்லாமிற்குரிய நற்செயல்களைச் செய்வதன் மூலமாக அல்லாஹ்வின் கருணையைப் பெறமுடியுமா என்பதைக் குறித்த நிச்சயமின்மை. குரானிலுள்ள பல பகுதிகளில் அல்லாஹ்வின் கருணையைக் குறித்துப் பேசும்போது “ஒருவேளை” (லா அல்லா) அல்லது “இருக்கலாம்” (அஸô) என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. “நம்பிக்கை கொண்டவர்களே! கலப்பற்ற முறையில் நீங்கள் அல்லாஹ்விடம் (தவ்பா செய்து), பாவமன்னிப்புப் பெறுங்கள். உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களைவிட்டுப் போக்கி, உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்யக்கூடும்; அவற்றின் கீழே சதா ஆறுகள் ஓடிக்கொண்டே இருக்கும்…” (சுரா அத் தஹ்ரீம் 66:8அ). “குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள்; (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படலாம்” (சுரா அல் அஃராஃப் 7:204). “(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும்பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தையும் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்ப்படியுங்கள்.” (சுரா அந் நூர் 24:56). “வேறு சிலர் தம் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றனர்; நற்செயலையும் வேறு தீமையையும் அவர்கள் கலந்து விட்டனர்; அல்லாஹ் அவர்களிடம் ஒருவேளை திரும்பக்கூடும் (அவர்களுக்கு மன்னிப்பு வழங்க). அல்லாஹ் மன்னிக்கிறான், இரக்கம் காட்டுகிறான்.” (சுரா அத் தாவ்பா 9:102). ஒருவன் தன்னுடைய பாவத்திற்கான தனிப்பட்ட பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்வதற்கான நிச்சயம் இஸ்லாத்தில் இல்லை. இரட்சிக்கப்படுவதற்காக ஒருவன் செய்கின்ற எல்லா இஸ்லாமின் நற்செயல்களையும் செய்தாலும் “ஒருவேளை” என்ற சந்தேகமே இஸ்லாத்தில் காணப்படுகிறது.

4. அனைத்து முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா? ஒரு நல்ல முஸ்லிம் நரகத்தைவிட்டுத் தப்ப முடியுமா என்ற இரட்டைச் சந்தேகம் காணப்படும்போது, அந்த நேர்மையான முஸ்லிமிற்கு இருக்கக்கூடிய கடைசி நம்பிக்கையின் கீற்றையும் கீழ்க்காணும் குரானின் பகுதிகள் தகர்த்து விடுகின்றன. “68. ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக! நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம். 69. பின்னர் நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அளவற்ற அருளாளனுக்கு மாறு செய்வதில் கடினமாக இருந்தவர்கள் யாவரையும் நிச்சயமாக பிரித்து விடுவோம். … 71. மேலும் அதனை (நரகத்தைக்) கடக்காமல் உங்களில் (முஸ்லிம்களில்) யாரும் இருக்க முடியாது; இது இறைவனுடைய முடிவான தீர்மானமாகும். 72. அதன் பின்னர், (நம்மை) அஞ்சியோரை நாம் ஈடேற்றுவோம்; ஆனால் அநியாயம் செய்தவர்களை அ(நரகத்)தில் முழுந்தாளிட்டவர்களாக விட்டுவிடுவோம்.” (சுரா மர்யம் 19:68-72). வசனம் 71-ன் எழுத்தின்படியான பொருள் ஒவ்வொரு முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்கள் என்பதே. ஏனெனில் அவர்களை நரகத்திற்குக் கொண்டுவரும்படி அல்லாஹ்வைவிட மேலான சக்தியினால் அல்லாஹ்விற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பின்புதான் (ஒருவேளை) அல்லாஹ் அவர்களை விடுவிக்கக்கூடும். வரலாற்றில் இந்த வசனத்தைக் கையாள்வது முஸ்லிம்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. ஆகவே, இந்த வசனத்தைச் சற்று திரித்து ஞானமாக விளக்கம் கொடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பல்வேறு முரண்பட்ட இஸ்லாமிய பாரம்பரியங்களின்படி இப்பகுதிக்கு விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. அதன்படி முகமது இந்த வசனத்தில் நரகம் என்னும் படுகுழிக்கு மேலாக பரதீஸிற்கு இட்டுச் செல்லும் ஒரு பாலம் இருக்கிறது; பக்தியுள்ள நம்பிக்கையாளர்கள் அந்த பாலத்தை மிக விரைவாகக் கடந்துவிடுவார்கள். ஆனால் தீமை செய்பவர்கள் நரகத்தில் விழத்தக்கதாக அந்தப் பாலம் மிகவும் குறுகியதாக இருக்கும் என்று தான் சொல்கிறார் என்ற விளக்கம் தரப்படுகிறது. ஆனால் அரபு குரானுடைய மூல பாடத்தைப் படிக்கும்போது சந்தேகத்திற்கு இடமில்லாமல் அனைத்து முஸ்லிம்களும் நரகத்திற்கு வர வேண்டும் என்பதும் அவர்கள் தாண்டிச் செல்ல முடியாது என்பது தெளிவாகக் காணப்படுகிறது.

ஆனால் ஒரு கிறிஸ்தவனுக்கு இறைவனுடைய நற்செய்தியின் சந்தேகத்திற்கு இடமற்ற வாக்குத்தத்தம் உள்ளங்கை நெல்லிக்கனியைப் போல காணப்படுகிறது. சிலுவையில் நம்முடைய பாவங்களுக்காகத் தம் உயிரைக் கொடுத்த கிறிஸ்துவின் பதிலாள் மரணத்தை விசுவாசிப்பதன் மூலமாக ஒரு விசுவாசி மிக நிச்சயமாக மரண தண்டனையிலிருந்து தப்பிக்கிறான்.

துக்க செய்தி: இஸ்லாத்தின் நற்செயல்களைச் செய்வதன் மூலமாக நரகத்திலிருந்து தப்பிக்கலாம் என்ற ஒரு முஸ்லிமின் அழைப்பை ஒரு கிறிஸ்தவன் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் குரானுடைய போதனையின்படி அல்லாஹ் நினைத்தால் மட்டுமே ஒருவனை நரகத்திலிருந்து விடுவிப்பார். அது மட்டுமல்ல பரலோகத்திற்குச் செல்லும் வழி நரகத்தின் வழியாகவே செல்கிறது!

நல்ல செய்தி: நரகம், பிசாசு, மரணம் ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுவிக்கும் விடுதலைக்கான ஒரு வழி இருக்கிறது. அந்த வழி இயேசு கிறிஸ்துவே! அவர் நம்மைப் பரதீஸின் தோட்டத்திற்கு அல்ல, வாழ்வின் ஊற்றுக் கண்ணாகிய இறைவனிடத்திற்கே நடத்திச் செல்வார். இறைவனுடன் உறவுகொண்டிருப்பது பரதீஸின் சந்தோஷங்கள் அனைத்தையும்விட மிகவும் விலையேறப்பெற்றது.

சாட்சி: என்னுடைய பெயர் ஆசிஸ். நான் பாகிஸ்தானின் ஒரு முன்னாள் முஸ்லிமாக வாழ்கிறேன். 2007-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி நான் என்னுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு வெள்ளை நிற கார் என்மீது பலமாய் மோதியது. நான் கீழே விழுந்து கிடந்தபோது, அந்தக் காரின் ஓட்டுநரும் அவருக்கு அருகில் அமர்ந்திருந்தவரும் இறங்கி வந்து இருப்பு அடிப்பக்கமுள்ள சப்பாத்துகளால் என்னை மிதித்தார்கள். அவர்கள் என்னுடைய தலையிலோ, முகத்திலோ, உடலின் மேல்பகுதியிலோ மிதிக்கவில்லை. அவர்கள் என்னுடைய காலையும் முட்டியையும் மட்டுமே குறிபார்த்துத் தாக்கினார்கள். என்னுடைய கால்கள் உடைந்துவிட்டன என்று அவர்கள் உறுதிசெய்தபிறகு “அல்லாஹ் அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கத்திவிட்டு என்னை விட்டுச் சென்றார்கள். அவசர ஊர்தி குழு வந்து என்னை எடுத்துக்கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்தது. ஏற்கனவே பல இஸ்லாமிய எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளைக் கடந்த காலங்களில் சமாளிக்க வேண்டியிருந்தது. இது எனக்கு ஒரு புதிய அனுபவமல்ல. முப்பது நிமிடங்களுக்குள்ளாக போலீஸ் அந்த “தீவிரவாதிகளான அன்பின் சகோதரர்களுடன்” என்னிடத்தில் வந்தார்கள். இந்த சந்தர்ப்பத்தை நான் கிறிஸ்தவ விசுவாசத்தைக் குறித்து சாட்சி கூறுவதற்காகப் பயன்படுத்தும்படி பரிசுத்த ஆவியானவர் என்னை பலப்படுத்தி வழிநடத்தினார். அப்போது அவர்கள் எனக்கு அருகில் வந்து எந்த ஒரு வார்த்தையையும் பேசுவதற்கு முன்பாகவே நான் அவர்கள் என்னுடைய சகோதரர்கள் என்று அறிவித்தேன். நான் அவர்களை மன்னிப்பதாகவும் சொன்னேன். மேலும், “நான் உங்களுக்குப் பயந்ததால் இப்படிச் சொல்லவில்லை. இது என்னுடைய கிறிஸ்தவ விசுவாசத்தின் வழி. நான் உங்களை மன்னிக்கிறேன். உங்களை நேசிக்கிறேன். உங்களுக்காக விண்ணப்பிக்கிறேன். இதைத்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்” என்று சொன்னேன். ஏப்ரல் 4-ம் தேதி என்னுடைய கால்களில் அறுவை சிகிட்சை செய்யப்பட்டது. 6-ம் தேதி நான் மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பினேன். நான் இப்பொழுது முழுமையான சுகம் பெற்றிருக்கிறேன். கர்த்தராகிய இயேசு அவருக்கு சாட்சியிடும் தருணத்தை எனக்குக் கொடுத்ததற்காக நான் அவருக்கு நன்றி சொல்கிறேன்.

விண்ணப்பம்: நீதியும் வல்லமையும் உள்ள இறைவனே, நாங்கள் அனைவரும் உமக்கு விரோதமாகப் பாவம் செய்திருப்பதால் எங்கள் அனைவரையும் நரகத்தில் தூக்கி எறிய உமக்கு உரிமை இருக்கிறது. நீர் மட்டுமே பரிசுத்தமும் நீதியும் உள்ளவர், அதேவேளையில் அன்பும் இரக்கமும் நிறைந்தவர். உம்மிடத்தில் வருவதற்காக கிறிஸ்துவில் நீர் எங்களுக்குக் காட்டியிருக்கும் வழியை கண்டுபிடிக்க எனக்கு உதவி செய்தருளும்.

கேள்விகள: யார் நரகத்திற்குப் போவார்கள்? குரானுடைய போதனையின்படி நரகத்திற்குச் செல்லாமல் பரதீஸிற்குச் செல்ல வழியில்லை, ஏன்?

மனப்பாடம்: நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, (உபாகமம் 30:19).

www.Grace-and-Truth.net

Page last modified on June 07, 2013, at 11:17 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)