Home -- Tamil -- 08. Good News -- 7 Has Christ been crucified?
Previous lesson -- Next lesson
08. இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்
7 - கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டரா?
சவால்: முஸ்லிம்கள் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை தீவிரமாக நிராகரிக்கிறார்கள்.
நற்செய்தியில் கூறியிருக்கிறபடி, கிறிஸ்து தம்முடைய யூத எதிரிகளால் பலமாகப் புறக்கணிக்கப்பட்டு, பொறாமையினால் இறுதியில் எருசலேமை ஆட்கொண்டிருந்த ரோம இராணுவத்திடம் அவரை ஒப்படைத்து, அவரைக் கொல்லும்படி கேட்டுக் கொண்டார்கள் என்ற உண்மைக்கு கிறிஸ்தவர்கள் சாட்சியிடுகிறார்கள். ரோமப் போர்ச் சேவகர்கள் அவரைச் சித்திரவதை செய்து இறுதியில் சிலுவையில் ஆணியடித்துக் கொலை செய்தார்கள். சிலுவையில் அவர் தனக்கு அருகில் சிலுவையில் அறையப்பட்டிருந்த இரண்டு குற்றவாளிகளுடன் வேதனையுடன் மரித்தார். ரோமர்கள் அவரைக் கொலை செய்தார்கள்.
இந்த மரணத்தைக் குறித்த விவரமான விளக்கம் நற்செய்தி நூலில் இவ்விதமாக முடிவடைகிறது: அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள். அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார். அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்…அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். (யோவான் 19:16-18, 28-30). இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்பதும் சிலுவையில் அவர் பட்ட பாடுகளினாலேயே அவர் மரித்தார் என்பதும் யோவானுடைய சாட்சியிலிருந்து தெளிவாக விளங்குகிறது. அவர் உண்மையில் கொல்லப்பட்டார். இந்த நிகழ்வுகள் கிறிஸ்துவுக்கு நான்கு சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்படுகிறது.
இல்லை! கிறிஸ்து சிலுவையில் அறையப்படவும் இல்லை, கொல்லப்படவும் இல்லை என்று முஸ்லிம்கள் வலியுறுத்துகிறார்கள். கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதுபோல காணப்பட்டது. உண்மையில் நீதியில் ஒரு தவறு ஏற்பட்டுவிட்டது. கிறிஸ்துவைப் போல இருந்த ஒருவர் தவறுதலாகச் சிலுவையில் அறையப்பட்டுவிட்டார். ஆனால் உண்மையான கிறிஸ்து அவருடைய எதிரிகளின் கரங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டு, பரலோகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, இன்றும் அவர் திரும்ப வரும்வரை பரலோகத்தில் வீற்றிருக்கிறார்.
முஸ்லிம்கள் தங்களுடைய இந்த நம்பிக்கையை குரானிலுள்ள கீழ்க்காணும் ஒரே ஒரு வசனத்தினால் மட்டுமே நிலைநிறுத்துகிறார்கள். அது யூதர்களைக் குறித்து இவ்விதமாகப் பேசுகிறது: “இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய- மர்யமின் குமாரர் ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டவர்கள்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை. அவர்கள் அவரைச் சிலுவையில் அறையவுமில்லை; ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவர் ஒப்பாக்கப்பட்டார்; மேலும், இ(வ்விஷயத்)தில் அபிப்பிராயபேதம் கொண்டவர்கள் அதில் சந்தேகத்திலேயே இருக்கிறார்கள்; வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; மேலும் அவர்கள் உறுதியாக அவர்கள் அவரைக் கொல்லவே இல்லை. ஆனால், அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக்கொண்டான்; இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.” (சுரா அன்னிஸாவு 4:157-158). ஆனால் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்று நற்செய்தி நூல்கள் நான்கு முறை கூறும் சாட்சியை கிறிஸ்தவர்கள் மூல நற்செய்தியைத் திருத்திவிட்டார்கள் என்பதன் அடிப்படையில் முஸ்லிம்கள் நிராகரிக்கிறார்கள்.
நற்செய்தியின் நான்கு சாட்சிகளை மறுத்துரைப்பதற்கு குரானுடைய இந்தக் குற்றச்சாட்டு போதுமானதா? அனைத்து முஸ்லிம்களும் கிறிஸ்து சிலுவையில் அறையப்படவும் இல்லை, கொல்லப்படவும் இல்லை என்ற குரானுடைய கூற்றை நம்பத்தான் வேண்டுமா?
பதில்: கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதையும் கொலைசெய்யப்பட்டதையும் மறுதலிக்கும் குரானுடைய இந்தப் பகுதிக்கு (சுரா 4:157) எதிரிடையாக கிறிஸ்துவின் மரணத்திற்கு வெளிப்படையாக சாட்சியிடும் வேறு மூன்று பகுதிகள் குரானில் இருக்கிறது.
1. குரானுடைய கூற்றுப்படி கிறிஸ்து பிறந்த உடனேயே கிறிஸ்து இவ்விதமாகச் சொல்கிறார்: ““இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (யாஉமா அவுதா), நான் உயிர்பெற்று எழுப்பப்படும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்றும் அக்குழந்தை கூறியது” (சுரா மர்யம் 19:33). இந்த வசனம் எந்தவித சந்தேகத்திற்கும் இடமற்றவகையில் கிறிஸ்துவின் பிறப்பையும், இறப்பையும், உயிர்த்தெழுதலையும் அவற்றிற்கிடையிலான பிரிக்க முடியாத உறவையும் குறித்துத் தெளிவாகப் பேசுகிறது.
2. கிறிஸ்துவைக் கொல்லவேண்டும் என்ற யூதர்களுடைய திட்டத்தைக் குறித்து குரான் சொல்லுகிறது: “அவர்கள் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதிசெய்தான்; தவிர அல்லாஹ் சதிசெய்பவர்களில் மிகச்சிறந்தவன் ஆவான். “ஈஸôவே! நான் உம்மை மரிக்கச் செய்பவனாகவும் (இன்னிய் முத்தவாஃபிக்கா), இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக்கொள்பவனாகவும் நிராகரித்துக்கொண்டிருப்போரிலிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துகிறவனாகவும், மேலும் உம்மைப் பின்பற்றுவோரை மறுமைநாள்வரை நிராகரிப்போரைவிட மேலாக்கி வைக்கிறவனாகவும் இருக்கிறேன்…”…” (சுரா ஆல இம்ரான் 3:54-55). இந்த வசனத்திலிருந்து அல்லாஹ் கிறிஸ்துவை மரிக்க அனுமதிக்கிறார் என்பது நன்கு விளங்குகிறது. அவர்கள் இன்றும் நம்புவதைப் போல கிறிஸ்துவை நரகத்திற்கு அனுப்பாமல் பரலோகத்திற்குத் தன்னிடமாகச் சேர்த்துக்கொள்வதுதான் அல்லாஹ்வின் சதித்தந்திரமாயிருக்கிறது.
3. கிறிஸ்து அல்லாஹ்வினால் பரலோகத்திற்கு உயர்த்தப்பட்ட பிறகு, கிறிஸ்துவுக்கும் அல்லாஹ்விற்கும் இடையிலான ஒரு உரையாடலைக் குரான் விவரிக்கிறது. பரலோகத்தில் கிறிஸ்து அல்லாஹ்விடம் சொல்லுகிறார்: “நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி, “என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்!” என்பதைத் தவிர, வேறு எதையும் நான் அவர்களிடத்தில் கூறவில்லை; மேலும் நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னை மரிக்கச் செய்தபோது (பலாம்மா டவாஃப்பாய்டானிய் – falamma tawaffaytaniy, நீயே அவர்கள் மீது கண்காணிப்பாளனாய் இருந்தாய்; நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்” (சுரா அல் மாயிதா 5:117). கிறிஸ்து பரலோகத்திற்கு உயர்த்திக்கொள்ளப்படுவதற்கு முன்பாக மரித்தார் என்பதை இந்த வசனம் தெளிவாக எடுத்துக்கூறுகிறது. அல்லது கிறிஸ்து பரலோகத்தில் தம்முடைய மரணத்தைக் குறித்து இறந்த காலத்தில் பேசியிருக்க முடியாது.
இந்த மூன்று வசனங்களுக்கும் சுரா அன்னிஸôவு 4:157-158-க்கும் இடையில் வெளிப்படையாகவே முரண்பாடு காணப்படுகிறது. மேற்கண்ட மூன்று குரானிய பகுதிகளும் கிறிஸ்துவின் மரணத்தை உறுதி செய்கிறது. ஆனால் சுரா அன்னிஸôவு 4 கிறிஸ்துவின் மரணத்தை மறுதலிக்கின்றன. மூன்று வகையான விளக்கங்களைக் கொடுப்பதன் மூலமாக முஸ்லிம் விளக்கவுரையாளர்கள் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண முயற்சிக்கிறார்கள். ஆயினும், அவை யாவுமே இருளுள்ளதாகவும் புரிந்துகொள்ள முடியாததாகவுமே காணப்படுகிறது.
முதலாவது புரிந்துகொள்ள முடியாமை. கால விரிவாக்கம். சுரா 4:157-ஐயும் சுரா 19:33-ஐயும் முரணற்றதாகக் காண்பிப்பதற்காக முஸ்லிம் விளக்கவுரையாளர்கள் கிறிஸ்துவின் பிறப்பிற்கும் அவருடைய உயிர்த்தெழுதலுக்கும் இடையில் மிகநீண்ட காலகட்டத்தைச் சொருகுகிறார்கள். இதற்கு குரானில் எந்த ஆதாரமும் இல்லை. கிறிஸ்து பிறந்தார், பின்பு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார், இன்று அவர் அங்கு வாழ்கிறார் என்று அவர்கள் சொல்கிறார்கள். இறுதிக் காலத்தில் அவர் திரும்ப வருவார், அப்போதுதான் அவர் மரித்து அனைத்து மனிதர்களோடும்கூட உயிருடன் எழுப்பப்படுவார். ஆனால், இந்த விளக்கம் சுரா 5:117-உடன் முரண்படுகிறது. அதில் கிறிஸ்து மரித்தார் என்றும் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்றும் இறந்த காலத்தில் அல்லாஹ் கூறுகிறார்.
இரண்டாவது புரிந்துகொள்ள முடியாமை. ஒருவரிடத்தில் இன்னொருவர் பலியாதல். சுரா 4:157-ஐ விளக்குவதற்காக, முஸ்லிம் விளக்கவுரையாளர்கள் கிறிஸ்து கொல்லப்படவில்லை என்றும் கிறிஸ்துவைப் போல காணப்பட்ட இன்னொருவர்தான் சிலுவையில் அறையப்பட்டார் என்றும் சொல்கிறார்கள். கிறிஸ்து மரிப்பதற்கு முன்பாகவே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. ஆயினும் இந்த விளக்கவுரையாளர்களிடத்தில், யார் கிறிஸ்துவின் இடத்தில் கொல்லப்பட்டார் என்பதைக் குறித்து குழப்பம் காணப்படுகிறது. அது தீத்து என்று அழைக்கப்பட்ட ஒரு யூதனா? மனப்பூர்வமாகத் தன்னை ஒப்புக்கொடுத்த ஒரு சீடனா? அல்லது இயேசுவைக் காட்டிக்கொடுத்த அந்த சீடனா? ஆனால் முஸ்லிம் விளக்கவுரையாளர்களுடைய கருத்துப்படி அந்த நபர் யாராயிருந்தாலும் அவரைக் கிறிஸ்துவைப் போல அல்லாஹ் தோற்றமளிக்கச் செய்துவிட்டார். எனவே யூதர்கள் அவரை கிறிஸ்து என்று கருதிவிட்டார்கள். ஆனால் கருத்துள்ள விளக்கவுரையாளர்கள் இக்கருத்தை ஏற்பதில்லை (ஸமாக்ஸôரி மற்றும் ராஸி).
மூன்றாவது புரிந்துகொள்ள முடியாமை. இறந்து போதல் என்ற வார்த்தைக்கான வேறு விளக்கம். இந்த விளக்கங்களைச் சாத்தியமாக்குவதற்காக குரானிலுள்ள ஒரு வார்த்தையின் பொருளை இவர்கள் மாற்றுகிறார்கள். “வாஃபாத்” (இறந்து போதல்) என்ற வார்த்தை சுரா 3:55-ல் “இன்னிய் முத்தவாஃபிக்கா” (நான் உம்மை இறந்துபோக விடுகிறேன்) என்ற வடிவத்திலும், சுரா 5:117-ல் “பலாம்மா டவாஃப்பாய்டானிய்” (ஆனால் நாம் உம்மை இறந்துபோக விடும்போது) என்ற வடிவத்திலும் வருகிறது. “வாஃபாத்” என்பது மரணத்தை அல்ல, நித்திரையைக் குறிக்கிறது என்று சில விளக்கவுரையாளர்கள் கூறுகிறார்கள். (சுரா 6:60 மற்றும் 39:42ஆ-விலும் மட்டுமே “வாஃபாத்” என்ற வார்த்தை நித்திரை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சுராக்கள் 32:11; 4:15; 39:42அ 8:50 ஆகிய இடங்கள் இறத்தலைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது). இந்த விளக்கம் விளக்கவுரையாளர்கள் நடுவில் சர்ச்சையை உண்டுபண்ணியிருப்பதால், சில இஸ்லாமியப் பாரம்பரியங்கள் “வாஃபாத்” என்ற வார்த்தையை கிறிஸ்துவைக் குறித்த வசனத்தில் குரானிலுள்ள பெரும்பான்மையான இடங்களில் பொருள் கொள்வதைப் போல மரணத்தைக் குறிப்பதாகவே பொருள்கொள்ள வேண்டும், தூக்கத்தைக் குறிப்பதாகப் பொருள்கொள்ளக்கூடாது என்று கூறுகின்றன.
துக்க செய்தி: சுரா 4:157-க்கும் கிறிஸ்துவின் மரணத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசும் குரானின் மற்ற பகுதிகளுக்கும் இடையிலுள்ள முரண்பாட்டை சரிசெய்வதற்காக முஸ்லிம் அறிஞர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்றன.
நல்ல செய்தி: குரானை வாசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் என்றும் அவருக்குப் பதிலாக வேறொருவர் அறையப்படவில்லை என்றும் நம்ப முடியும். சுரா 4:157 கிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை என்று சொல்லவில்லை. மாறாக சுரா 8:17-ஐப் போல (நபியே! பகைவர்கள் மீது மண்ணை நீர் எறிந்தபோது, அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்;) சுரா 4:157 “யூதர்கள் கிறிஸ்துவைக் கொலைசெய்யவில்லை. அல்லாஹ்தான் கிறிஸ்துவைக் கொலைசெய்தான்” என்றே சொல்லுகிறது.
சாட்சி: என்னுடைய பெயர் இம்ரான், நான் யோர்தான் நாட்டைச் சேர்ந்தவன். நான் ஒரு பக்தியுள்ள முஸ்லிமாக இருந்து பல இஸ்லாமிய பள்ளிகளுக்குச் சென்றிருக்கிறேன். இறுதியாக நான் கெய்ரோவிலுள்ள அல் அஸôர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாத்தைப் பயின்றேன். ஆபிரகாமுடைய மகன் ஆபிரகாமினால் கொலைசெய்யப்படுவதற்கு கொண்டு செல்லப்பட்டபோது மிகப்பெரிய பலியினால் அல்லாஹ் எவ்வாறு அவரை மீட்டார் என்பதையே நான் என்னுடைய இறுதி ஆய்வுக்கட்டுரையின் பொருளாகக் கொண்டேன் (சுரா அல் ஸஃப்ஃபாத் 37:99-111). அந்த குரானிய பகுதிகளுக்கான முஸ்லிம் விளக்கவுரைகள் பலவற்றை ஆய்வு செய்தேன். அவற்றில் எதுவுமே மீட்பைக் (ஃபைடா) குறித்த கேள்விக்கு திருப்திகரமான பதிலைத் தரவில்லை. தவ்ராத்தையும் அதற்கு யூதர்களும் கிறிஸ்தவர்களும் கொடுக்கும் விளக்கங்களைக் கேட்ட பிறகே, தவ்ராத்தில் பதிலாள் மரணத்தின் மூலமாக வரும் பாவப்பரிகாரத்தைப் பற்றி பேசப்பட்டிருப்பதையும் சிலுவையில் கிறிஸ்துவின் பதிலாள் மரணத்தின் மூலமாக மீட்பு என்று நற்செய்தியில் சொல்லப்பட்டிருப்பதையும் படித்த பிறகே. மீட்பைக் குறித்து எனக்குப் புரிய ஆரம்பித்தது. இரத்தம் சிந்தப்படாமல் பாவப்பரிகாரமோ பாவமன்னிப்போ கிடைக்காது என்பதை உணர்ந்து கொண்டேன். நான் வேதாகமத்திலிருந்து கண்டுகொண்ட காரியங்களை என்னுடைய ஆய்வுக்கட்டுரையில் சேர்த்துக்கொண்டேன். என்னுடைய நிலைப்பாட்டை நான் விளக்கியபோது என் உடன் படித்த இஸ்லாமிய மாணவர்களும் பேராசிரியர்களும் மிகுந்த கோபமடைந்து கிட்டத்தட்ட என்னை அடித்துத் துவைத்து விட்டதார்கள். ஆனால் நான் பிழைத்துக்கொண்டேன். மரணத்திற்கு ஏதுவாக காயப்பட்டிருந்த என்னைக் கிறிஸ்தவர்கள் கண்டு, நான் சுகம் பெறும்வரை என்னைக் கவனித்துக்கொண்டார்கள். இன்று என்னுடைய பாவங்களுக்காக மரித்து, என்னுடைய பாவங்களை மன்னிக்கும் கிறிஸ்துவின் மரணத்தை இன்று நான் விசுவாசிக்கிறேன். குரான் உண்மையில் என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு மேற்கண்ட விளக்கம் எனக்கு உதவிசெய்தது. எனதருமை நண்பரே! கிறிஸ்துவின் மீட்பை நீங்கள் நம்பாவிட்டால் நீங்கள் தொலைந்து போவீர்கள்!
விண்ணப்பம்: இரக்கமுள்ள இறைவனே! உம்முடைய சித்தமும் வழிநடத்தலும் இன்றி எதுவும் நடைபெறாது என்பதற்காக உமக்கு நன்றி. ரோமப் போர்வீரர்களினால் சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும்படி நீர் கிறிஸ்துவை அனுமதித்தீர். நீர் ஏன் அதைச் செய்தீர் என்பதை அறிந்துகொள்ள எனக்கு உதவி செய்தருளும். நான் உம்முடைய இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும்படி நீர் என்னை ஆயத்தப்படுத்தும்.
கேள்விகள: குரானுடைய போதனையின்படி கிறிஸ்து மரித்தாரா? கிறிஸ்துவின் மரணத்தைக் குறித்து குரானிலுள்ள முரண்பாடுகளை சரிப்படுத்த இஸ்லாமிய விளக்கவுரையாளர்கள் எவ்வாறு முயற்சி செய்கிறார்கள். கிறிஸ்துவின் மரணத்தைக் குறித்து நற்செய்தி என்ன கூறுகிறது?
மனப்பாடம்: என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. (சங்கீதம் 51:2-3). தீர்க்கதரிசியாகிய தாவீதின் வார்த்தைகள்.