Home -- Tamil -- 08. Good News -- 14 How can God be triune?
Previous lesson -- Next lesson
08. இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்
14 - இறைவன் எவ்வாறு திரியேகராயிருக்க முடியும்?
சவால்: இறைவன் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாயிருக்கிறார் என்பது குரானுடைய போதனைகளுடன் முரண்படுவதாலும், அவர்களுக்கு அதன் ஆவிக்குரிய பொருள் புரியாததாலும் திரியேகத்துவம் என்பது எப்போதுமே முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. மேலும் “அறிவடைந்த” பொதுமக்கள்கூட இறைவனை பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று சிந்திப்பது தவறானது என்று கருதுகிறார்கள். அவர்களும் முஸ்லிம்களோடு நாம் ஏன் திரியேக இறைவனை நம்ப வேண்டும்? ஒரு இறைவன் எப்படி மூவராயிருக்க முடியும்? என்று கேட்கிறார்கள்.
பதில்: குரான் பேசுகிற இறைவனும் வேதாகமம் பேசுகிற இறைவனும் ஒரே இறைவன்தான் என்று பலர் சிந்திக்கிறார்கள். முஸ்லிம்கள் குரானை அடிப்படையாகக் கொண்டு இதை வலியுறுத்துகிறார்கள் (“எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஒன்று” – சுரா அல் அன்கபூத் 29:46). அவர்கள் மட்டுமல்ல, மனிதவியல் மற்றும் பகுத்தறிவுவாதம் ஆகியவற்றின் தாக்கத்திற்குள்ளானவர்களும் குரானுடைய இறைவனும் வேதாகமத்தினுடைய இறைவனும் ஒன்றுதான் என்று கருதுகிறார்கள். அவர்கள் ஒரே இறைவன்தானா? இப்படிப்பட்ட காரியத்தைக் கூறுபவர்கள் கவனிக்கத் தவறுவது என்ன? இந்தக் கேள்விகளுக்குப் பதில் கொடுப்பதற்கு, நற்செய்திக்கும் குரானுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை ஆராய்வது மிகவும் முக்கியமானது. அதன்பிறகு இந்த வித்தியாசங்கள் ஒவ்வொன்றுக்குமான ஆவிக்குரிய அடிப்படை என்ன என்று கேட்க வேண்டும். நற்செய்தியில் விளக்கப்பட்டுள்ள இறைவனுடைய மூன்று குணாதிசயங்களை ஆராய்வோம். இந்த மூன்று குணாதிசயங்களும் இறைவன் திரியேகராயிருக்க முடியும் என்பதை விளக்குவதாயிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
1. எதிரிகளை நேசிக்கும் அன்பு: முஹம்மது போரிடும் பிரபுவாக இருந்து, எதிரிகளைப் பதுங்கியிருந்து தாக்கினார் என்பது உண்மை. அவர் தன்னுடைய சீடர்களும் தங்கள் எதிரிகளைக் கொல்ல வேண்டும் என்று போதித்தார். ஆனால் கிறிஸ்துவோ எந்தப் போரையும் நடத்தவில்லை என்பதுடன் அவர் யாரையும் கொல்லும்படி கட்டளையிடவும் இல்லை. ஆனால் கிறிஸ்து தம்முடைய மலைப்பிரசங்கத்தில், “உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்…” என்று போதித்தார் (மத்தேயு 5:44). முஹம்மதுவும் கிறிஸ்துவும் தங்கள் நடத்தையில் இவ்வளவு வித்தியாசமானவர்களாக இருப்பதற்குக் காரணம் என்ன?
இந்த வித்தியாசத்தை அறிந்துகொள்வதற்கு, ஒரு மாபெரும் ஆவிக்குரிய மாறுபாட்டை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதாவது, கிறிஸ்துவின் இறைவன் தம்முடைய எதிரிகளை நேசிக்கிறார். ஆனால் முஹம்மதுவின் இறைவன் தம்முடைய எதிரிகளை வெறுக்கிறார்.
எதிரிடையான இந்த இரண்டு கூற்றுகளுக்கும் ஆதாரத்தை நாம் வேதாகமத்திலிருந்தும் குரானிலிருந்தும் காணலாம். கிறிஸ்துவின் இறைவனைப் பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதுகிறார்: “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால்…” (ரோமர் 5:10). மனிதர்களாகிய நாம் இறைவனுக்கு எதிரிகளாக இருக்கும்போது, தம்முடைய குமாரனை நமக்காகச் சிலுவையில் மரிக்கக் கொடுத்ததன் மூலமாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கிக் கொண்டார். ஆகவே கிறிஸ்து நாம் எதிரிகளை நேசிக்க வேண்டும் என்று நம்மிடம் கூறும்போது நாம் இறைவனைப் போல மாற வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் முஹம்மதுவின் இறைவனைக் குறித்து நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “எவன் அல்லாஹ்விற்கும், அவனுடைய வானவர்களுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயீலுக்கும் பகைவனாக இருக்கின்றானோ, நிச்சயமாக (அத்தகைய) நிராகரிப்பாளர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கின்றான்.” (அல் பகரா 2:98). முஸ்லிம்கள் தங்கள் பகைவர்களுடன் போர் புரிய வேண்டும் என்று குரான் கட்டளையிடுமானால், அவர்கள் தங்கள் எதிரிகளை நேசிக்கக்கூடாது என்றே அது கற்பிக்கிறது. அல்லாஹ்வே தனது எதிரிகளை நேசிக்காமல் அவர்களுக்கு எதிராக இருப்பதால் அவர்களும் தங்கள் எதிரிகளை அப்படித்தான் நடத்த வேண்டும். முஸ்லிம்கள் தங்கள் எதிரிகளுக்கு எதிராகப் போரிடும்போது அவர்கள் தங்கள் இறைவனைப் போல செயல்படுகிறார்கள்.
2. தாழ்மை. கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை குரான் மறுதலிக்கிறது என்பது உண்மை. சுரா அன்னிஸாவு 4:157-ல் “…அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை; ஆனால், அவர்களுக்கு (அவரைப் போன்ற ஒருவர்) ஒப்பாக்கப்பட்டார்.” ஆனால் நற்செய்தி கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் என்று தெளிவாக அறிவிக்கிறது. கிறிஸ்தவத்திற்கு எதிரான வல்லமைகளான நாத்திகமும் யூதமார்க்கமும் கூட கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் என்பதை ஏற்றுக்கொள்கிறது. ஏன் இந்தக் காரியத்தில் குரானும் நற்செய்தி நூல்களும் இவ்வாறு வித்தியாசப்படுகின்றன?
இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்வதற்கு இந்த மாபெரும் மாறுபாட்டை நாம் அறிந்துகொள்ள வேண்டும். கிறிஸ்துவின் இறைவன் தாழ்மையுள்ளவர். முஹம்மதுவின் இறைவன் பெருமையுள்ளவர்.
இந்த இரண்டு எதிரிடையான கூற்றுகளுக்கும் நான் மேற்கோள்களைக் காட்டுகிறேன். இயேசு நற்செய்தி நூல்களில் “… நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்…” (மத்தேயு 11:29) என்றும் “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” (யோவான் 14:9) என்றும் கூறுகிறார். இதற்கு பிதா மிகுந்த தாழ்மையுள்ள இதயம் உடையவர் என்று பொருள். இந்தத் தாழ்மை இல்லாவிட்டால் இறைமகன் மனிதனாக வந்திருக்கவும் மாட்டார், சிலுவையில் மரித்திருக்கவும் மாட்டார். ஆகவே நாம் தாழ்மையாக இருக்கும்போது கிறிஸ்துவின் இறைவனைப் போல இருக்கிறோம். ஆனால் முஹம்மதுவின் இறைவனைக் குறித்து நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர வேறு தெய்வம் இல்லை; அவனே பேரரசன்; … யாவரையும் மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமையுள்ளவன் (அல் – முத்த காபிர்)…” (சுரா அல் ஹஷ்ர் 59:23). இதனால்தான் குரானுடைய அல்லாஹ் சிலுவை மரணத்தைப் புறக்கணிக்கிறார். அவர் மனிதனாக வருவது அவருடைய மேன்மைக்குப் பொருந்தாத ஒன்றாகும். அதனால்தான் கிறிஸ்து இறைமகன் என்பதை அவர் மறுதலிக்கிறார். அவமானத்திற்குரிய மரணத்தை அனுபவிக்க முடியாதபடி அவர் பெருமையுள்ளவராயிருக்கிறார். முஸ்லிம்கள் தங்கள் எதிரிகளைப் பெருமையுடனும் மேட்டிமையுடனும் நடத்தும்போது அவர்கள் தங்கள் இறைவனைப் போலவே நடந்துகொள்கிறார்கள்.
3. சந்தோஷம். குரானுடைய போதனைகளின் அடிப்படையில் முஸ்லிம்கள் இறைவனுடைய திரியேகத்துவத்தை மறுதலிக்கிறார்கள். அதனால் அவர்கள் அல்லாஹ் பிதா அல்ல என்றும், கிறிஸ்து இறைமகன் அல்ல என்றும், பரிசுத்த ஆவியானவர் அல்லாஹ்வின் படைப்பே என்றும் கூறுகிறார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் நற்செய்தியின் போதனைகளின் அடிப்படையில் இறைவன் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய ஒரே இறைவன் என்று அறிக்கை செய்கிறார்கள். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்பது ஒரு ஆவிக்குரிய ஐக்கியம் என்றும் குரான் குறிப்பிடுவதைப் போல (சுரா அல் மாயிதா 5:116) அது பிதாவுக்கும், மர்யமுக்கும் இடையில் பாலியல் ரீதியாகப் பிறந்த பாலியல் பிள்ளை கிறிஸ்து அல்ல என்றும் நம்புகிறார்கள். இந்தக் காரியத்தில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் ஏன் ஒருவருக்கொருவர் எதிர் நிலை எடுக்கிறார்கள்?
இந்தக் கேள்விக்கான பதிலைப் புரிந்துகொள்வதற்காக நாம் கீழ்க்காணும் மாபெரும் ஆவிக்குரிய முரண்பாட்டைக் கருத்தில்கொள்ள வேண்டும். கிறிஸ்துவின் இறைவன் முழுவதும் மகிழ்ச்சியானவர். முஹம்மதுவின் இறைவன் மகிழ்ச்சியை நேசிப்பதில்லை.
பிதாவில் குமாரன் மகிழ்ந்திருப்பதிலும், பிதா குமாரனில் மகிழ்ந்திருப்பதிலும், இருவரும் பரிசுத்த ஆவியில் மகிழ்ந்திருப்பதிலும்தான் திரியேகத்துவத்தின் இரகசியம் அடங்கியிருக்கிறது. சில மேற்கோள்கள் வருமாறு. அ) “அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது” (மத்தேயு 3:17). குமாரனில் பிதா மிகவும் பிரியமாயிருந்ததால் அவரைக் குறித்து மிக்க சந்தோஷமுள்ளவராயிருக்கிறார். ஆ) “என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” (யோவான் 15:11). கிறிஸ்து முழுவதும் சந்தோஷத்தினால் நிறைந்திருந்து தம்முடைய சந்தோஷத்தைத் தம்முடையவர்களுக்குக் கொடுக்கிறார். இ) “ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்…” (கலாத்தியர் 5:22). பரிசுத்த ஆவியானவர் எங்கே செயல்படுகிறாரோ அங்கு மகிழ்ச்சி பெருக்கெடுக்கிறது. ஆனால் அல்லாஹ் சந்தோஷமாயிருக்கிறார் என்று நாம் குரானில் எங்கும் வாசிப்பதில்லை. மாறாக , “… அல்லாஹ் மகிழ்ச்சியானவர்களை நேசிப்பதில்லை… (சுரா அல் கஸஸ் 28:76). இதனால்தான் முஸ்லிம்கள் தங்கள் பள்ளிவாசல்களில் பாடல்களைப் பாடுவதில்லை. நீங்கள் பாடல்களைப் பாடும்போது மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஆனால் அல்லாஹ் மகிழ்ச்சியாயிருப்பவனை நேசிக்காத காரணத்தினால் அவரைத் தொழுதுகொள்பவர்கள் பாடல்பாட முடியாதவர்களாயிருக்கிறார்கள்.
இந்த மூன்று வேதாகம குணாதிசயங்களைப் பார்க்கும்போது கிறிஸ்துவின் திரியேக இறைவனுடைய இரகசியத்தை நாம் அறிந்துகொள்கிறோம். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய இறைவனை நாம் தனித்தனி நபர்களாக பிரித்தறிய முடிகிறது, காரணம் ஒருவரையொருவர் பாராட்டுகிறார்கள். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய இறைவன் ஒன்றாயிருக்கிறார், காரணம் அவர்கள் ஒருவருக்கொருவர் தாழ்மையாயிருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் விரோதமாக ஒருபோதும் கலகம் செய்வதில்லை. இந்தக் காரணத்தினால்தான் குரான் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய திரியேக இறைவனை மறுதலிக்கிறது. இதன் விளைவாக அல்லாஹ்வும் கிறிஸ்துவின் இறைவனும் ஒன்றானவர்கள் அல்ல.
நல்ல செய்தி: நற்செய்தியின் இறைவன் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய திரியேக இறைவனாயிருக்கிறார். காரணம் அவர் மகிழ்ச்சியால் நிறைந்தவராகவும், சுயநலமற்ற தாழ்மையில் ஊன்றப்பட்டவராகவும், தம்முடைய எதிரிகளையும் சிநேகிப்பவராகவும் இருக்கிறார். நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவருடைய மகிழ்ச்சியையும், தாழ்மையையும், அன்பையும் நம்மில் செயல்பட அனுமதிக்கும்போது, நாமும் அவரைப் போல அவருடைய பிள்ளைகளாகி அவருடைய திரியேக வாழ்வில் பங்கடைவோம்.
சாட்சி: என்னுடைய பெயர் மஸ்ரி, நான் எகிப்தில் வாழ்கிறேன். ஒரு இளவயது முஸ்லிமாக நான் ஒரு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பில் இடம்பெற்றிருந்தேன். என்னுடைய குழுவின் அங்கத்தினர்கள் தங்கள் கொள்கையில் மட்டுமல்ல, நடைமுறையிலும் தங்கள் எதிரிகளை வெறுத்துக் கொலைசெய்கிறார்கள் என்பதை நான் அறிந்தபோது அதிர்ச்சியடைந்தேன். ஆகவே அப்படிப்பட்ட கூட்டத்திலிருந்து விலகிவிட ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் அரசாங்கத்தினால் கைதுசெய்யப்பட்டபோது எனக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. இதன்பிறகு நான் முழுவதும் குழப்பம் அடைந்தவனாகப் போதைப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்தேன். ஒருநாள் எனக்குப் பல்வலி ஏற்பட்ட காரணத்தினால் ஒரு கிறிஸ்தவ மருத்துவரைக் காணச்சென்றேன். அவர் என்னுடைய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு எனக்கு மூன்று காரியங்களைச் செய்தார். அவை என்னுடைய வாழ்க்கையை மாற்றியமைத்தது. அவர் என்னோடு நேரம் செலவு செய்யும்படி தன்னுடைய மருத்துவமனையைப் பூட்டினார். அவர் கிறிஸ்தவர் என்பதால் அவரை நான் அவமதித்தபோதிலும் அன்று இரவு முழுவதும், அதிகாலை 5 மணிவரை என்னுடைய பிரச்சனைகள் அனைத்தையும் செவிகொடுத்துக் கேட்டார். நான் உயிர்வேதியியல் படித்திருந்த காரணத்தினால் அவருடைய மருத்துவமனையில் வேலைசெய்யும்படி தன்னுடைய சந்தோஷமான அணுகுமுறையினால் அமர்த்திக்கொண்டார். அதற்குப் பிறகு கிறிஸ்துவினுடைய இறைவனின் மூன்று குணாதிசயங்கள் இவருடைய வாழ்க்கையில் வெளிப்பட்டதை நான் உணர்ந்துகொண்டேன். ஒரு இரவு முழுவதும் என்னுடைய பிரச்சனைகளுக்குச் செவிகொடுத்ததன் மூலமாக அவருடைய எதிரியாகிய என்மீது தன்னுடைய அன்பைக் காண்பித்தார். அவர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவராக இருந்தும் என்னுடைய பிரச்சனைக்காக தனது மருத்துவமனையை மூடிவிட்டதால் தன்னுடைய தாழ்மையை வெளிப்படுத்தினார். தன்னுடைய மகிழ்ச்சியான மனநிலையினால் என்னை தன்னுடைய மருத்துவ மனையில் வேலைக்கு அமர்த்தினார். என்னுடைய கேள்விகளுக்குப் பதிலளிக்கக்கூடிய கிறிஸ்தவ அறிஞர்களிடம் என்னை அறிமுகம் செய்துவைத்தார். தன்னுடைய எதிரிகளை நேசித்து, தாழ்மையுள்ளவராயிருந்து, தன்னுடைய மகிழ்ச்சியை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் கிறிஸ்துவை, இன்று நான் அருகிலும் தூரத்திலும் இருக்கும் முஸ்லிம்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
விண்ணப்பம்: பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய திரியேக இறைவனே, நீர் உம்மைக் கிறிஸ்துவில் வெளிப்படுத்தியமைக்காக உமக்கு நன்றி. நான் உம்முடைய எதிரியாயிருந்தபோது நீர் என்னை நேசித்ததைப் போல நானும் என்னுடைய எதிரிகளை நேசிக்க எனக்கு உதவி செய்யும். உம்முடைய தாழ்மையை நான் பிரதிபலிக்கும்படி என்னை மறுரூபப்படுத்தும். என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியினால் நிரப்பும்.
கேள்விகள்: திரியேக இறைவனுடைய இரகசியத்தைப் புரிந்துகொள்ள நமக்குத் துணைபுரியும் தெய்வீக குணாதிசயங்கள் யாவை? பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தை குரான் ஏன் மறுதலிக்கிறது?
மனப்பாடம்: அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். (யோவான் 1:12-13).