Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":

Home -- Tamil -- 08. Good News -- 13 Is Christ like Adam?

This page in: -- Chinese -- English -- French -- German? -- Indonesian -- TAMIL -- Turkish

Previous lesson -- Next lesson

08. இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்

13 - கிறிஸ்து ஆதாமைப் போன்றவரா?



சவால்: முஸ்லிம்கள் குரானுடைய போதனைகளின் அடிப்படையில் கிறிஸ்து இறைவனுடைய மகன் என்பதையும் இறைவன் திரியேகர் என்பதையும் புறக்கணிக்கிறார்கள். கீழ்க்கண்ட குரானுடைய வசனத்தின் அடிப்படையில் கிறிஸ்துவின் தெய்வீகத்தை மறுதலிக்கும் தங்கள் நிலைப்பாட்டை முஸ்லிம்கள் உறுதிசெய்கிறார்கள். அந்த வசனம் கிறிஸ்துவையும் ஆதாமையும் ஒப்பிட்டுப் பேசுகிறது: “அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸôவின் உதாரணம், ஆதமின் உதாரணத்தைப் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “ஆகுக” எனக் கூறினான்; அவர் ஆகிவிட்டார்.” (சுரா ஆலு இம்ரான் 3:59). கிறிஸ்து ஆதாமைப் போன்று இறைவனால் படைக்கப்பட்ட மனிதன்தான் என்பதற்கான ஆதாரமாக முஸ்லிம்கள் இந்த வசனத்தைக் கருதுகிறார்கள். குரானுடைய போதனைகளின் அடிப்படையில் கிறிஸ்து ஆதாமைப் போன்றவர்தான் என்றும் அதனால் அவர் தெய்வீகத்தன்மை அற்றவர் என்றும் சொல்வது உண்மைதானா? கிறிஸ்துவின் தெய்வீகத்தைப் பற்றி குரான் எதுவுமே பேசுவதில்லையா?

பதில்: இதற்குப் பதில் தரும்படி ஆதாமையும் கிறிஸ்துவையும் ஒப்பிட்டுப் பேசுகிற மற்ற குரானிய பகுதிகளை நாம் காண வேண்டும்.

1. ஆதாமுடைய பெற்றோரும் கிறிஸ்துவினுடைய பெற்றோரும்: ஆதாமுக்கும் கிறிஸ்துவுக்கும் மனித தகப்பன் இல்லை என்று குரான் கூறுகிறது. இந்த காரியத்தில் அவர்கள் இருவரும் ஒன்றானவர்கள். ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஆதாமுக்குத் தாய் இல்லை. அவர் பூமியின் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டார். ஆனால் கிறிஸ்துவுக்குத் தாய் இருக்கிறார். ஏனெனில் கிறிஸ்து மர்யமுடைய மகன் என்று 13 முறை குரானில் குறிப்பிடப்பட்டிருக்கிறார். (உதாரணம் சுராக்கள் 2:87; 57:27). ஆகவே சுரா 3:59-ல் குறிப்பிடப்பட்டபடி ஆதாமைப் போல கிறிஸ்து மண்ணிலிருந்து உருவாக்கப்படவில்லை.

2. இறைவன் ஆதாமைப் பார்த்துக் கூறுவதும், கிறிஸ்துவைப் பார்த்துக் கூறுவதும்: அல்லாஹ் ஆதாமிடம் என்ன சொல்கிறார் என்றும் கிறிஸ்துவிடம் என்ன சொல்கிறார் என்றும் நாம் கவனித்துப் பார்த்தால் ஆதாமுக்கும் கிறிஸ்துவுக்கும் இடையிலுள்ள வேறு பெரிய வித்தியாசங்களை கண்டுகொள்ள முடியும். பரதீஸில் ஆதாம் பாவம் செய்தபோது அல்லாஹ்: “இன்னும் நாம், “நீங்கள் இறங்குங்கள்; உங்களில் சிலருக்குச் சிலர் பகைவர்களாக இருப்பீர்கள்” (சுரா அல் பகரா 2:36) என்று சொல்கிறார். ஆனால் கிறிஸ்துவின் ஊழிய காலத்தின் இறுதிப் பகுதியில் யூதர்கள் அவரைத் தாக்கிய சூழ்நிலையில் குரானில் எழுதப்பட்டிருப்பதாவது: “ஈஸôவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுகிறவனாகவும், இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக்கொள்கிறவனாகவும், உம்மைத் தூய்மைப்படுத்துகிறவனாகவும்…இருக்கிறேன்…” (ஆலு இம்ரான் 3:55). மேற்கண்ட வார்த்தைகளின் அடிப்படையில் கிறிஸ்துவுக்கும் ஆதாமுக்கும் இடையில் குரானில் குறிப்பிடப்பட்டுள்ள மாபெரும் வித்தியாசங்களை நாம் குறித்துக்காட்ட முடியும்.

அ) ஆதாமைப் பார்த்து அல்லாஹ் “பூமிக்குச் செல்லுங்கள்” என்று சொல்கிறார்; கிறிஸ்துவைப் பார்த்து “நான் உம்மைப் பரத்திற்கு எடுத்துக்கொள்வேன்” என்கிறார்.
ஆ) ஆதாம் அல்லாஹ்வினுடைய சிங்காசனத்திலிருந்து கீழாகத் தள்ளப்பட்டார். கிறிஸ்து அல்லாஹ்வினுடைய சிங்காசனத்திற்கு உயர்த்திக்கொள்ளப்பட்டார்.
இ) ஆதாம் பரதீஸில் இனி வாழாமல் உலகத்தில் வாழ்கிறார். கிறிஸ்து உலகத்தில் வாழாமல் பரதீஸில் வாழ்கிறார்.
ஈ) ஆதாம் பரதீஸில் ஆரம்பித்து பூமியை வந்தடைந்தார். ஆனால் கிறிஸ்து பூமியில் ஆரம்பித்து பரதீûஸச் சென்றடைந்தார்.
உ) “நீங்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாயிருப்பீர்கள்” என்று ஆதாமைப் பார்த்து அல்லாஹ் சொல்கிறார். கிறிஸ்துவைப் பார்த்தோ “நான் உம்மைப் பாவிகளில் இருந்து தூய்மைப்படுத்துவேன்” என்று சொல்கிறார்.
ஊ) ஆதாம் வெறுப்பினாலும் பகைமையினாலும் கறைப்பட்டுப் போனார். ஆனால் குரானுடைய போதனையின்படி கிறிஸ்து மற்றவர்களுடைய பாவங்களில் இருந்து தூய்மைப்படுத்தப்பட்டார், ஏனெனில் அவரில் பாவம் இருக்கவில்லை.
எ) ஆதாமுடைய அசுத்தம் ஒரு தெய்வீகத் தன்மை அல்ல! அப்படியிருக்குமானால் தொழுகைக்கு முன்பாக முஸ்லிம்கள் ஏன் தங்களை சடங்குரீதியாகச் சுத்திகரித்துக்கொள்கிறார்கள்? ஆனால் கிறிஸ்துவின் தூய்மையோ ஒரு தெய்வீக குணாதிசயமாயிருக்கிறது! அப்படியில்லையெனில் இறைவனே தூய்மையற்றவராயிருக்க, அவர் கிறிஸ்துவை எவ்வாறு தூய்மைப்படுத்த முடியும்?

3. தூதர்கள் கிறிஸ்துவைக் குறித்தும் ஆதாமைக் குறித்தும் சொன்னவைகள்: ஆதாமையும் கிறிஸ்துவையும் குறித்து தேவதூதர்கள் சொன்ன காரியங்களை நாம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது கிறிஸ்துவுக்கும் ஆதாமுக்கும் இடையிலுள்ள இன்னும் மேலான வித்தியாசங்களை நாம் காணலாம். பூமியின் மண்ணினால் ஆதாமை அல்லாஹ் உருவாக்குவதற்கு முன்பாகவே தூதர்கள் அல்லாஹ்விடம்: “(இறைவா!) அதில் குழப்பத்தை உண்டாக்கி இரத்தம் சிந்தக்கூடியவரையா நீ அமைக்கப்போகிறாய்?” (சுரா அல் பகரா 2:30) என்று கேட்டார்கள். ஆயினும் கிறிஸ்து அற்புதமான முறையில் தனது தாயின் கருவில் உருவாவதற்கு முன்பாகவே, “… மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து ஒரு வார்த்தையைக் (கலிமத்தூன்) கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பதைப் பற்றி) நன்மாராயம் கூறுகின்றான்; அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈ ஸா என்பதாகும்; அவர் இவ்வுலகத்திலும் மறுமையிலும் கண்ணியமிக்கவராகவும் (வஜீத்) இறைவனுக்கு நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்… நல்லோர்களில் ஒருவராகவும் இருப்பார்” (சுரா 3:45-46). இந்த இரண்டு குரான் பகுதிகளின் அடிப்படையில் ஆதாமுக்கும் கிறிஸ்துவுக்கும் இடையில் மேலும் பல வித்தியாசங்களை நாம் கவனிக்கலாம்.

அ) குரானுடைய போதனையின்படி தேவதூதர்கள் ஆதாமைப் பார்த்து: “குழப்பத்தை உண்டுபண்ணி இரத்தம் சிந்தக்கூடியவன்” என்று சொன்னார்கள். ஆனால் கிறிஸ்துவைப் பார்த்து அவர்கள் “மர்யமின் மகனாகிய ஈஸô இறைவனிடத்திலிருந்து வரும் வார்த்தை” என்று கூறுகிறார்கள்.
ஆ) ஆதாம் பூமியில் குழப்பத்தை உண்டுபண்ணி அதைக் கெடுத்துப்போட்டார். ஆனால் கிறிஸ்து இறைவனிடமிருந்து வரும் வார்த்தையாக இருக்கிறபடியால் அநேகருக்கு நன்மையை உண்டுபண்ணுகிறார். மேலும் அவர் நீதியுள்ளவராயிருக்கிற காரணத்தினால் அவர் குழப்பத்தை உண்டுபண்ணிய ஆதாமைவிட முற்றிலும் வித்தியாசமானவர்.
இ) ஆதாம் இதன் பிறகு பரதீஸில் இல்லை, பூமியில் வாழ்கிறார். ஆனால் கிறிஸ்து பரலோகத்தில் வாழ்கிறார், இனி அவர் பூமயில் வாழ்வதில்லை.
ஈ) ஆதாம் அல்லாஹ்விற்கு நெருங்கியவர்களில் ஒருவன் அல்ல, ஏனெனில் அவர் பரதீûஸவிட்டும் அல்லாஹ்வை விட்டும் துரத்தப்பட்டார். ஆனால் கிறிஸ்துவைப் பற்றி, அவர் அல்லாஹ்விற்கு நெருக்கமானவர்களில் ஒருவர் (அல்-மக்காரபினா) என்று சொல்லப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் குணாதிசயங்களை உடையவர்களே அவருக்கு நெருக்கமானவராயிருக்க முடியும். இங்கு கிறிஸ்துவைக் குறிக்கும்படி பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் (அல்-மக்காரபினா), உறவினரைக் குறிக்கும் வார்த்தையோடு தொடர்புடையது (காரிப்). கிறிஸ்து அல்லாஹ்வின் அருகில் நிற்பவராயின் அவர் அல்லாஹ்வின் உறவினன் என்று பொருளாகும்.

4. ஆதாமுக்கும் கிறிஸ்துவுக்கும் இடையிலுள்ள மேலும் சில வித்தியாசங்கள்: இன்னும் கிறிஸ்துவுக்கும் ஆதாமுக்கும் இடையிலான வித்தியாசங்களை நாம் குரானில் வாசிக்கலாம். உதாரணமாக,

அ) ஆதாம் எந்த தெய்வீகச் செயலையும் செய்யவில்லை, முற்றிலும் மனிதத் தன்மைக்குக் கட்டுப்பட்டவராகவே இருந்தார். ஆனால் கிறிஸ்துவோ தெய்வீக அற்புதங்களைச் செய்தார். அவர் படைத்தார், மறைவான காரியங்களை அறிந்திருந்தார், நோயாளிகளைக் குணமாக்கி, மரித்தவர்களை உயிரோடு எழுப்பி அனைத்து அற்புதங்களையும் செய்தார் (சுரா 3:49).
ஆ) ஆதாம் கீழ்ப்படியாதவராயிருந்த காரணத்தினால் இறைவன் அவரை பரலோகத்திலிருந்து பூமிக்கு தாழ்த்தினார் (சுரா 2:36). ஆயினும் கிறிஸ்து இறைவனுக்கு கீழ்ப்படிந்த காரணத்தினால் இறைவன் அவரைத் தம்மளவில் உயர்த்திக்கொண்டார் (சுரா 3:55; 4:157).
இ) ஆதாம் அல்லாஹ்வின் ஆவியினால் பலப்படுத்தப்படாதபடியால் சாத்தானுக்கு இரையானார் (சுரா 7:20; 20:120). ஆனால் கிறிஸ்து அல்லாஹ்வினுடைய ஆவியினால் பலப்படுத்தப்பட்டபடியால் சாத்தானால் அவரை மேற்கொள்ள முடியவில்லை (சுரா 2:87, 253; 5:110).
ஈ) ஆதாம் பாவம் செய்தார், பாவமுள்ள பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். ஆனால் கிறிஸ்து பாவம் செய்யவில்லை, மாறாக மக்களைச் சுத்திகரித்து, நோயாளிகளைக் குணமாக்கினார் (சுரா 3:49).

துக்க செய்தி: சுரா 3:49-ல் கிறிஸ்து ஆதாமைப் போன்றவர் என்று கூறப்பட்டிருப்பது குரானுடைய மற்ற பகுதிகள் கிறிஸ்துவைப் பற்றியும் ஆதாமைப் பற்றியும் போதிக்கும் காரியங்களுடன் முரண்படுகிறது. கிறிஸ்துவுக்கும் ஆதாமுக்கும் மாபெரும் வித்தியாசங்கள் இருக்கிற காரணத்தினால் சுரா 3:49-ஐ கிறிஸ்துவின் தெய்வீகத்தை மறுதலிப்பதற்கான ஆதாரமாகப் பயன்படுத்த முடியாது.

நல்ல செய்தி: குரான் கிறிஸ்துவுக்கு தெய்வீகக் குணாதிசயங்கள் இருப்பதாகக் கூறுகிற காரணத்தினால் கிறிஸ்துவின் தெய்வீகத்தை அது உறுதிசெய்கிறது. இறைவனைப் போல கிறிஸ்துவும் தூய்மையானவர் (தாஹிர்). அவர் இறைவனைப் போல உயிர்ப்பிக்கிறவர் (மூயி). இறைவனைப் போல அவரும் படைக்கிறவர் (காளிக்). இறைவனைப் போல கிறிஸ்துவும் சுத்திகரிக்கிறார் (முப்ரி). மேலும் கிறிஸ்து இறைவனுடைய வார்த்தை என்றும் இறைவனுக்கு நெருங்கினவர் என்றும் சொல்லுகிற காரணத்தினால் குரான் கிறிஸ்துவின் தெய்வீகத்தை உறுதிசெய்கிறது. ஆகவே குரானுடைய போதனையின்படி கிறிஸ்து ஆதாமைப் போன்றவர் அல்ல, இறைவனைப் போன்றவர்.

சாட்சி: என்னுடைய பெயர் கே.கே. அலவி, நான் தென்னிந்தியாவில் உள்ள கேரளாவில் வாழ்கிறேன். ஆகவே மலையாளமே என்னுடைய தாய் மொழியாகும். பள்ளிவாசலில் என்னுடைய தகப்பனார்தான் தொழுகையை வழிநடத்துவார். ஆகவே அவருடைய சந்ததியாகிய நான் அவரைத் தொடர்ந்து அந்த வேலையைச் செய்வேன் என்று அவர் எதிர்பார்த்தார். என்னுடைய முதலாம் வகுப்பில் இருந்தே நான் அரபியையும் இஸ்லாத்தையும் கற்றுக்கொண்டேன். நான் பதினான்கு வயதாயிருக்கும்போது எனக்கு ஒரு கிறிஸ்தவ புத்தகம் கிடைத்தது. ஒரு பக்தியுள்ள முஸ்லிமாக நான் அதை எறிந்திருக்க வேண்டும். ஆனாலும் அந்தப் புத்தகத்தில் இருந்த படங்கள் என்னைக் கவர்ந்த காரணத்தினால் அவ்வாறு அந்தப் புத்தகத்தை நான் எறிந்துவிடவில்லை. என்னுடைய இந்தச் செயல் எனது தகப்பனாரை அதிகம் வேதனைப்படுத்தியது, அவர் எனக்குக் கடுமையான தண்டனை கொடுத்து, அந்தப் புத்தகத்தை கிழித்து எறிந்துவிட்டார். ஆயினும் விதை போடப்பட்டுவிட்டது. நற்செய்தி என் உள்ளத்தில் செயல்பட ஆரம்பித்துவிட்டது. இன்னும் அதிகமாக நற்செய்தியை அறிய விரும்பினேன். நான் கிறிஸ்தவர்களைத் தேடினேன். யோவான் எழுதின நற்செய்தியை முழுவதும் வாசித்தேன். ஞாயிறு பள்ளியின் வகுப்புகளில் கலந்துகொண்டேன். இவையனைத்தையும் இரகசியமாகவே செய்தேன். என்னுடைய இந்தச் செயல்களை எனது தகப்பனார் கண்டுபிடித்தபோது அவர் என்னைக் கடுமையாகத் தண்டித்து, என்னைச் சங்கிலிகளினால் பல வாரங்கள் கட்டிப்போட்டார். இறுதியில் நான் இஸ்லாத்தைத் துறந்ததற்காக என்னைக் கொலைசெய்யத் தீர்மானித்துவிட்டார். ஆனால் நான் அங்கிருந்து தப்பித்து வந்துவிட்டேன். இந்நாள்வரை நான் என்னுடைய குடும்பத்தைத் திரும்பவும் பார்த்ததில்லை. அப்போது எனக்கு வயது 16 ஆக இருந்த காரணத்தினால் அந்தக் காலகட்டம் எனக்கு மிகுந்த கடினமாக இருந்தது. இறுதியில் நான் ஒரு இறையியல் கல்லூரியில் சேர்ந்து இன்று தென்னிந்தியத் திருச்சபையில் போதகராயிருக்கிறேன். 1980-ல் இருந்து நான் இஸ்லாமியர்கள் நடுவில் முழுநேர நற்செய்தியாளராகப் பணியாற்றுகிறேன். என் மூலமாக இஸ்மவேலர் பலர் கிறிஸ்துவின் மீதான விசுவாசத்திற்கு வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள்.

விண்ணப்பம்: பரிசுத்த இறைவா, கிறிஸ்து பல அற்புதங்களைச் செய்து இன்று உம்முடன் பரலோகத்தில் வீற்றிருப்பதற்காக உமக்கு நன்றி. கிறிஸ்து ஆதாமைப் போல சாதாரண மனிதன் அல்ல என்றும் அவர் தெய்வீகத் தூய்மையும் படைக்கும் ஆற்றலும் உள்ள உம்முடைய வார்த்தை என்றும் அறிந்துகொள்ள எனக்கு உதவிசெய்தருளும். கிறிஸ்து உண்மையில் யார் என்பதை அறிந்துகொள்ள என்னுடைய கண்களையும் காதுகளையும் திறந்தருளும்.

கேள்விகள்: குரானுடைய போதனைகளின் அடிப்படையில் கிறிஸ்து எவ்வாறு ஆதாமைவிட வித்தியாசமானவர்? குரானுடைய போதனைகளின் அடிப்படையில் இறைவனுடைய எத்தகு செயல்களையும் குணாதிசயங்களையும் கிறிஸ்துவும் பகிர்ந்துகொள்கிறார்?

மனப்பாடம்: பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டுமென்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டுக்குப் போனான். (லூக்கா 5:24-25).

www.Grace-and-Truth.net

Page last modified on June 07, 2013, at 11:30 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)