Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 09. Comparisons -- 4.07 Fifth Commandment: Honor Your Father and Your Mother
This page in: -- Afrikaans -- Arabic? -- Armenian? -- Azeri? -- Bulgarian? -- Cebuano? -- Chinese -- English -- Farsi? -- French -- German -- Gujarati? -- Hebrew -- Indonesian -- Norwegian? -- Polish? -- Russian -- Serbian? -- Spanish? -- TAMIL -- Turkish? -- Uzbek -- Yiddish? -- Yoruba

Previous part -- Next part

09. இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் – ஒப்பாய்வு
Comparisosns 4 - பத்து கட்டளைகள்

4.07 - ஐந்தாவது கட்டளை: உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக



யாத்திராகமம் 20:12
12 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
(யாத்திராகமம் 20:12).


4.07.1 - குடும்பம்: இறைவனுடைய பரிசு.

குடும்பம் என்பது ஒரு விலையேறப்பெற்ற முத்தாகவும் பரதீஸின் மீதியான ஒன்றாகவும் இருக்கிறது. இறைவன் மனிதனை ஆணும் பெண்ணுமாகப் படைத்து தம்முடைய மகிமையையும் அன்பையும் பிரதிபலிக்கவும், பலுகிப் பெருகி பூமியை நிரப்பவும் அவர்களை இவ்வுலகத்தில் வைத்தார். ஆகவே, குடும்பம் என்பது மனித வாழ்வின் கருவாகவும், அனைத்துக் கலாச்சாரங்களின் அஸ்திவாரமாகவும் இருக்கிறது. அது பாதுகாப்பையும், ஐக்கியத்தையும் கொடுக்கிறது. நவீன கருத்தாக்கங்கள் எதுவும் கொடுக்காத நம்பிக்கையையும் பாதுகாப்பையும் குடும்பம் கொடுக்கிறது.

அனைத்து மதங்களும் பெற்றோர் கனப்படுத்தபட வேண்டும் என்பதை பொதுவாக ஏற்றுக்கொள்கிறது. தங்கள் பெற்றோரைப் பிள்ளைகள் நேசித்து, கனப்படுத்துவது இயற்கையான ஒன்று. இறைவனை நம்பாத கருத்தியலாகிய பொதுவுடமைக் கோட்பாடு, பெற்றோருடைய நிலையைக் குறித்த கேள்வியை எழுப்பும்போது, இந்த கலகம் இறைவனுக்கும் அவருடைய படைப்பிற்கும், மனிதருடைய இயற்கையான உள்ளுணர்வுகளுக்கும் எதிராக முன்வைக்கப்படுகிறது. ஐந்தாவது கட்டளையின் மூலமாக இறைவன் குடும்பத்தைப் பாதுகாக்கிறார். குடும்பம் என்ற அமைப்பை இறைவன் ஏற்படுத்தியதற்காகவும், அது இன்றுவரை இருப்பதற்காகவும், அதிலுள்ள இரகசியமான அன்பு மற்றும் ஐக்கியத்தின் கட்டுக்காகவும் நாம் இறைவனைத் துதிக்க வேண்டியது தகுதியான ஒன்றாகும்.

ஐந்தாவது கட்டளையில், குடும்பத்தின் தலைவராக இருந்து, குடும்பத்தின் பொருளாதார தேவையைச் சந்திக்கும் தகப்பன் மட்டுமல்ல, தாயும் பொதுவாக பெண்களும் கனம்பண்ணப்பட வேண்டும் என்று கட்டளையிடுகிறது. ஆண்களைப் போலவே பெண்களும் இறைவனுடைய சாயலைப் பிரதிபலிக்கும்படியாகவும் கணவனுடன் இணையாக குடும்பப் பொறுப்புகளைக் கவனிக்கும்படியாகவும் படைக்கப்பட்டவள். அதனால் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் இரண்டும் தகப்பனும் தாயும் கனம்பண்ணப்பட வேண்டும் என்று கூறுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

குடும்பத்தைப் பாதுகாத்துப் போஷிக்க வேண்டும் என்பது இயற்கையானதாகவும் வெளிப்படையாக அனைவரும் அறிந்ததாகவும் இருக்கிறது. பறவை இனங்களில் கூட சிறியவைகள் தங்கள் தாய்ப்பறவையைப் பின்பற்றுகின்றன. ஆண் பறவையும் பெண் பறவையும் மாறி மாறி முட்டைகளை அடை காக்கின்றன. அவைகள் இரண்டுமே தங்கள் குஞ்சுகள் வளர்ந்து தாமாக இரைதேடும்வரை அவற்றுக்கு மாறி மாறி உணவளிக்கின்றன. அவற்றிற்கு இயற்கையாக இறைவன் கொடுத்த கட்டுப்பாடுகள் உண்டு. அவற்றை மீறுகிறவைகள் தண்டனையிலிருந்து தப்பமுடியாது. ஆயினும் இன்று சிறுவர்களுடைய இருயத்ததைக் கடினப்படுத்துகிற, பாவச் சோதனைக்குத் தூண்டுகிற, கலக வார்த்தைகளை நாம் கேள்விப்படுகிறோம்: “பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குச் செவிகொடுக்க வேண்டாம், அவர்களுக்குக் கீழ்ப்படியவும் வேண்டாம். உங்களைப் பற்றி நீங்களே முடிவு செய்யுங்கள். சிறுபிராயத்தில் இருந்தே உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளுங்கள், மனப்பூர்வமாக கலகம் செய்யுங்கள்.” அப்படிப்பட்ட பிள்ளைகளுடைய கண்களில் இருள் சூழ்ந்திருக்கிறது. அவர்களில் இருந்த சந்தோஷம் எடுபட்டுப் போயிற்று. அவர்களுடைய இருதயத்தின் முக்கிய பகுதி பயங்கரமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.


4.07.2 - பெற்றோர்களுடைய தியாகம்

தந்தையரும் தாய்மாரும் புதிய தலைமுறையில் பங்கெடுக்கும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் உருவாகி வளருவதே மகா மேன்மையான அற்புதமாக இருக்கிறது! குழந்தை உருவாகும்போது பெற்றோருடைய விருப்பமில்லாமல் ஒருவேளை உருவாகியிருக்கலாம். ஆயினும் அந்தக் குழந்தையின் தோற்றத்தில் தெய்வீக படைப்பின் செயலில்கூட தகப்பனும் தாயும் தங்கள் பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். தாய்க்குள் இருக்கும் குழந்தைக்குள் மரபுவழித் தன்மைகளைச் செலுத்தும் பணியைச் செய்ய பெற்றோரை அனுமதிக்கும் இறைவன் அவர்களைக் கனப்படுத்துகிறார். ஆகவே, மனிதர்கள் ஒவ்வொருவரும் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்காகவும் படைப்பளராகிய இறைவனுக்கு முன்பாக விழுந்து, அவரை ஆராதித்து, அவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.

இரவும் பகலும் தங்களுடைய கர்ப்பத்தில் சுமந்திருக்கிறார்கள். அங்கு நாம் பாதுகாப்பாக இருந்தோம், நம்முடைய தேவைகள் எல்லாம் சந்திக்கப்பட்டது. நாம் தாயினுடைய சந்தோஷத்திலும் கோபத்திலும், துயரத்திலும் களைப்பிலும் பங்கடைந்தோம். நம்முடைய தாய்மார் ஒருவேளை நாம் பிறப்பதற்கு முன்பாகவே நமக்காக விண்ணப்பித்திருப்பார்கள். நம்முடைய பிறப்பு அவளுக்கு மிகுந்த வலியையும் பயத்தையும் கொடுத்தது.

நம்முடைய தாயும் தந்தையும் நமது வாழ்நாட்களின் நீண்ட காலம் நம்முடன் வருகிறார்கள். நம்முடைய உடலில் ஏற்படும் வளர்ச்சியைக் கவனிக்கிறார்கள். நம்முடைய புன்முறுவலுக்கும் முனங்கல்களுக்கும் அவர்களுக்குப் பொருள் தெரியும். நமக்காகவும் நம்முடைய வளர்ச்சிக்காவும் அவர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறார்கள். நம்முடைய பெற்றோர் இயேசுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களாக இருந்தால், அவர்கள் நம்மைப் பரலோக பிதாவினுடைய கரத்தில் நிச்சயமாக ஒப்படைத்து, அவருடைய கற்பனைகளை நமக்குப் போதித்து, நம்மைப் படைத்த நல்ல மேய்ப்பராகிய அவரில் நம்பிக்கைகொள்ள வழிநடத்தியிருப்பார்கள். நாம் அறிந்திருப்பதைவிட, உணர்ந்திருப்பதைவிட அதிகமாகவே அவர்கள் நம்மை நேசித்திருக்கிறார்கள், வளர்த்திருக்கிறார்கள், ஆசீர்வதித்திருக்கிறார்கள். அவர்கள் இரவு பகலாக நம்மைக் கவனித்துக்கொண்டார்கள். நமக்கு உணவும் உறைவிடமும் தருவதற்காக அவர்கள் போராடியிருக்கிறார்கள். நம்முடைய படிப்புக்காகவும் நமது நட்புக்காவும் அவர்கள் அதிகம் கரிசனை கொண்டிருக்கிறார்கள். நாம் நோய்வாய்ப்பட்டு, காய்ச்சலில் விழும்போது அவர்கள் நமது படுக்கையருகிலேயே இருந்து நம்மைக் கவனித்துக்கொள்கிறார்கள். அவர்கள் நம்மோடு மகிழ்ந்திருக்கிறார்கள், நம்மோடு சேர்ந்து அழுதிருக்கிறார்கள்.


4.07.3 - குடும்பப் பிரச்சனைகள்

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் ஒரு நெருக்கமான உறவு இருக்கிறது. அவர்களுக்கிடையிலுள்ள அன்பு மற்றும் நம்பிக்கையின் பரிமாற்றம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆயினும் நாம் ஆதாம் ஏவாளைப் போல பாவமற்ற நிலையில் இப்போது வாழவில்லை. ஆகவே பாமில்லாத பிள்ளையோ, குற்றமில்லாத பெற்றோரோ இன்றில்லை. ஆகவே, பெரியவர்களும் வாலிபர்களும் இறைவனுடைய கிருபையினால் மட்டுமே வாழ்கிறோம். அதனால்தான் நாம் ஒருவர் ஒருவரை மன்னிக்கிறவர்களாகவும் நேசிக்கிறவர்களாகவும் இருக்கிறோம். பாவமன்னிப்பும் பொறுமையும் இல்லாமல் குடும்பத்தில் நிலையான அமைதி ஒருபோதும் ஏற்பட முடியாது. நம்முடைய பாவங்களை தாழ்மையோடு அறிக்கை செய்யவும் பாவமன்னிப்பு கேட்கவும் ஆயத்தமின்றி குடும்பத்தில் சமாதானத்தை நாம் புதுப்பித்துக்கொள்ள முடியாது. அன்பிலும் பாவமன்னிப்பிலும் வளர்க்கப்படும் பிள்ளைகள் பாக்கியவான்கள். அனைத்துப் பிள்ளைகளும் தன்னிடத்தில் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் தன்னால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்றும் இறைமகன் இயேசு விரும்புவதால், பிள்ளைகளைச் சரியான விசுவாசத்தில் வழிநடத்த வேண்டியது பெற்றோருடைய தெரிவு மட்டுமல்ல. பெற்றோர் இயேசுவின் குணாதிசயத்தையும், அவருடைய நேர்மையையும் பிள்ளைகளுக்கு முன்பாக செயலில் காண்பித்து, அவருடைய கற்பனையை அவர்கள் கைக்கொள்ளும்படியும், அவருடைய வாக்குறுதிகளை அவர்கள் மனதில் பதித்துக்கொள்ளும்படியும் அவர்களை வழிநடத்த வேண்டும். பிள்ளைகளுடைய ஆவிக்குரிய படிப்பினைக்குப் தாயும் தந்தையும் பொறுப்பாளிகளாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தங்கள் பிள்ளைகளுடைய இருதயத்தில் விசுவாசத்தை உண்டாக்கு முடியாது என்றும் தங்கள் விசுவாசத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும் அறிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு பிள்ளையும் தான் இறைவனுக்கு சார்பாக வாழப்போகிறானா அல்லது இறைவனுக்கு எதிராக வாழப்போகிறானா என்பதைத் தெரிவு செய்ய வேண்டும். ஆயினும் பெற்றோருடைய ஆசீர்வாதம் பல தலைமுறைகளுக்குத் தொடரும் என்பதை பிள்ளைகள் உணர்ந்துகொள்வது நல்லது.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் கெடுத்து, அவர்களைச் சோம்பேறிகளாக வளர்க்கக்கூடாது. பிள்ளைகளுடைய வயதுக்கு அதிகமான வேலையைச் செய்யும்படி அவர்களிடம் சொல்லக்கூடாது. ஒரு பிள்ளை தன்னுடைய பிள்ளைப் பருவத்தில் குறிப்பிடத்தக்க நேரத்தை பிள்ளையாகவே செலவுசெய்ய அனுமதிக்க வேண்டும்! பள்ளிக்கு அனுப்புவதோ, வேறு ஏதேனும் தொழில் அல்லது கலைப் பயிற்சிகளுக்கு அனுப்புவதோ முக்கியமானதாக இருந்தாலும், பிள்ளை வளர்ப்பில் அதிக நேரத்தை அது எடுத்துக்கொள்ளக்கூடாது. இறைவனைக்குப் பயப்படுதல், தங்களைப் படைத்தவரை நேசித்தல் போன்ற காரியங்களை அவர்களுடைய வாழ்வில் தூண்டிவிடுவதே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். ஏனெனில் அவைதான் மனசாட்சியையும், உண்மையையும், நேர்மையையும், விடாமுயற்சியையும், தூய்மையையும் அவர்களில் கட்டியெழுப்பும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளோடு போதிய அளவு நேரம் செலவு செய்து, அவர்களுடைய பிரச்சனைகளுக்கும் கேள்விகளுக்கும் செவிகொடுக்க வேண்டும். எல்லாவற்றையும்விட முக்கியமாக பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்றும் தங்களுடைய வாழ்க்கையை இயேசுவோடு செலவு செய்ய வேண்டும் என்றும் அவர்களுக்காக இடைவிடாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளைக் கெடுத்து, அவர்களைச் சோம்பேறிகளாக வளர்க்கக்கூடாது. பிள்ளைகளுடைய வயதுக்கு அதிகமான வேலையைச் செய்யும்படி அவர்களிடம் சொல்லக்கூடாது. ஒரு பிள்ளை தன்னுடைய பிள்ளைப் பருவத்தில் குறிப்பிடத்தக்க நேரத்தை பிள்ளையாகவே செலவுசெய்ய அனுமதிக்க வேண்டும்! பள்ளிக்கு அனுப்புவதோ, வேறு ஏதேனும் தொழில் அல்லது கலைப் பயிற்சிகளுக்கு அனுப்புவதோ முக்கியமானதாக இருந்தாலும், பிள்ளை வளர்ப்பில் அதிக நேரத்தை அது எடுத்துக்கொள்ளக்கூடாது. இறைவனைக்குப் பயப்படுதல், தங்களைப் படைத்தவரை நேசித்தல் போன்ற காரியங்களை அவர்களுடைய வாழ்வில் தூண்டிவிடுவதே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். ஏனெனில் அவைதான் மனசாட்சியையும், உண்மையையும், நேர்மையையும், விடாமுயற்சியையும், தூய்மையையும் அவர்களில் கட்டியெழுப்பும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளோடு போதிய அளவு நேரம் செலவு செய்து, அவர்களுடைய பிரச்சனைகளுக்கும் கேள்விகளுக்கும் செவிகொடுக்க வேண்டும். எல்லாவற்றையும்விட முக்கியமாக பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்றும் தங்களுடைய வாழ்க்கையை இயேசுவோடு செலவு செய்ய வேண்டும் என்றும் அவர்களுக்காக இடைவிடாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

பிள்ளைகள் வளர் இளம் பருவத்தில் தங்கள் பெற்றோரை விமர்சிக்க ஆரம்பிப்பார்கள். இவ்வாறு அவர்கள் சுயாதீனமாகச் செயல்படுவது அவர்களுடைய வளர்ச்சியில் ஏற்படும் ஒரு நிலை, இதைப் பார்த்து கோபம்கொள்ளக்கூடாது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆரம்பத்திலேயே திரியேக இறைவனுக்கு ஒப்புக்கொடுத்திருப்பார்கள் என்றால், இந்த முக்கியமான வயதுகளில் தவறான கட்டுப்பாடுகள் இன்றி அவர்களை வளர்க்க முடியும். அதேவேளையில் வளர் இளம் பருவத்துப் பிள்ளைகள் பயனுள்ள நூல்கள், உண்மையுள்ள நண்பர்கள், அவர்களைக் கறைப்படுத்தாத தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நல்ல வேதபாட வகுப்புகளில் கிடைக்கும் நல்ல வாலிபர் குழு ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பழைய வாழ்க்கை முறையை வாலிபர்கள் மேல் திணிப்பது, அவர்களுடைய மனதில் கலகத்தைக் குணத்தை உண்டாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களை நம்மை விட்டு விலக்கிவிடும்.

பெற்றோர்களாகிய நாம் எப்போதும் இயேசுவின் எச்சரிக்கையை நினைவில் கொள்ள வேண்டும்: “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்” (மத்தேயு 18:6). இடறல் உண்டாக்குவது என்பது எதிர்ப்புணர்வு அல்லது கோபத்தை உண்டுபண்ணுவது என்ற பொருளில் பயன்படுத்தப்படாமல் அவர்களைப் பொய்சொல்லவும், திருடவும் அல்லது கடுமையான எச்சரிப்பு எதுவுமின்றி குறிப்பிட்ட பாவத்தில் வாழவும் அனுமதித்தல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டவர் மீதுள்ள அன்பிலும் பயத்திலுமிருந்தே உண்மையான பிள்ளைவளர்ப்பு வரமுடியும்.

இன்றைய வளர்ச்சியடைந்த விஞ்ஞான உலகத்தில் பிள்ளைகளுக்கு அவர்களுடைய பெற்றோர்கள் “பின்தங்கியவர்களாக” தோன்றுவார்கள். சில மூன்றாம் உலக நாடுகளில் தாய் அல்லது தகப்பன் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இதனால் நன்றாகப் படித்த பிள்ளைகள் பெருமையுள்ளவர்களாகி, தங்களுடைய பெற்றோரை மதிக்காமல், அவர்களைப் பரியாசம் செய்யக்கூடாது. இது மரியாதையற்ற செயல் மட்டுமல்ல, அறிவற்ற முட்டாள்தனமாகவும் இருக்கிறது. ஏனெனில், ஒருவருக்கு எழுதப்படிக்கத் தெரிந்துவிட்டால் அவர் ஒரு அறிவாளி என்றோ மதிப்பிற்குரியவர் என்றோ பொருளாகாது. உயர்படிப்பு ஒரு மாணவனுடைய நற்குணத்தையோ பரிசுத்தத்தையோ உயர்த்துவதில்லை. பெற்றோர் எத்தனை பட்டங்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதோ அல்லது எவ்வளவு பணம் சேகரித்து வைத்திருக்கிறார்கள் என்பதோ அவர்களுடைய அதிகாரத்தை நிர்ணயிக்கிறதில்லை. அவர்களுடைய அதிகாரம் இறைவனுடைய சித்தத்தையும் அவர்கள் கிருபாசனத்திற்கு முன்பாக எவ்வாறு தங்கள் பிள்ளைகளுக்காகப் பரிந்து பேசுகிறார்கள் என்பதையும் பொறுத்திருக்கிறது. பெற்றோர்களுடைய இருதயங்களில் இறைவன் பெற்றோராகிய தம்முடைய குணாதிசயத்தைக் கொடுத்திருக்கிறார். கிறிஸ்துவினுடைய தியாகம் நிபந்தனையற்ற முறையில் சேவை செய்ய பெற்றோரையும் பிள்ளைகளையும் தூண்டுகிறது.


4.07.4 - ஐந்தாவது கட்டளையை நிறைவேற்றுதல்

பிள்ளைகள் எவ்வாறு தங்கள் பெற்றோரைக் கனம்பண்ணுவது? இவ்வுலகத்தில் நாம் பெற்றிருக்கிறதும் அறிந்திருக்கிறதுமானவைகளில் அவர்களே மிகவும் விலையேறப்பெற்றவர்கள் என்பதால் நம்முடைய மனசாட்சி அவர்களை நேசித்துக் கனப்படுத்தும்படி நமக்கு நினைப்பூட்டுகின்றது. அவர்களைக் கனப்படுத்துவதில் நாம் கீழ்ப்படிதலோடும், நல்எண்ணத்தோடும், சுயத்தை வெறுத்து, தீய நோக்கங்கள் எதுவும் இன்றி செயல்பட வேண்டும். ஒரு பிள்ளை தன்னுடைய தாயையோ தந்தையையோ தெரிந்தோ, தெரியாமலோ ஒருபோதும் அடிக்கக்கூடாது. பிள்ளை அந்தக் குடும்பத்தின் முக்கிய நபர் அல்ல, ஆண்டவரே அங்கு முக்கியமானவராக இருக்க வேண்டும். “மனுஷ குமாரனும் ஊழியம்கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்” என்று இயேசு சொன்னபோது (மத்தேயு 20:28), ஒரு சந்தோஷமான குடும்ப வாழ்வுக்கான வழியையும் நமக்குப் போதித்திருக்கிறார். பெற்றோரும் பிள்ளைகளும் தங்களுடைய அனுதின குடும்ப வாழ்வில் இந்த விதிமுறையைக் கவனமாகக் கைக்கொள்ள வேண்டும் என்று இறைமகன் நமக்கு அறிவுறுத்துகிறார்.

பிள்ளைகள் தங்களுக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக்கொண்ட பிறகு பெற்றோரைக் குறித்த அவர்களுடைய கடமை முடிவடைந்து விட்டதா? இல்லை! எப்போது பெற்றோர் வயது முதிர்ந்தவர்களாகி உடலிலும் மனதிலும் பெலவீனமடைகிறார்களோ அப்போதுதான் அவர்களைப் பிள்ளைகள் அதிகமாகப் பராமரிக்க வேண்டும். பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும்போது பெற்றோர் எப்படி அவர்களை வளர்த்தெடுப்பதற்காக தியாகத்தோடு தங்கள் நேரத்தைச் செலவு செய்தார்களோ, அவ்விதமாகவே பிள்ளைகளும் முதிர்ச்சயடையும் பெற்றோரைப் பராமரிக்க போதிய அளவு நேரத்தைத் தியாகத்தோடு ஒதுக்க வேண்டும். அவர்களைப் பராமரிப்பதற்கு வேலைக்காரர்களை வைத்துக்கொள்வதோ, அவர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியமோ பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குச் செலவு செய்ய வேண்டிய நேரத்திற்கும், பணத்திற்கும், முயற்சிக்கும் ஈடாகாது.

இறைவன் உடன்படிக்கையின் அடிப்படையில் நமக்குத் தகப்பனாயிருக்கிறார் என்ற உண்மையைக் கூறிய பிறகு, இந்த ஐந்தாவது கட்டளைதான் மிகவும் தெளிவான ஒரு வாக்குத்தத்தத்தை முன்வைக்கும் முதலாவது கட்டளையாயிருக்கிறது. தங்கள் பெற்றோரை நன்றாகக் கவனித்துக்கொள்கிறவர்கள் இவ்வுலகத்தில், முறைப்பாடுகள் குறைவாகவும் ஆசீர்வாதங்கள் நிறைவாகவும் உள்ள ஒரு நீண்ட வாழ்வை வாழ்வார்கள். பெற்றோருடைய கனம் எப்போதெல்லாம் பாதுகாக்கப்படுகிறதோ, பெற்றோரும் பிள்ளைகளும் எப்போது இறைவனுடைய வழிகளில் வாழ்கிறார்களோ அப்போது அவர்களுடைய வாழ்வில் இறைவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறுவதை அவர்கள் அனுபவிப்பார்கள்.

பெற்றோரையும் அதிகாரத்தில் இருக்கும் மக்களையும் அவமதிப்பை இறைவன் தடைசெய்கிறார். இது துஸ்பிரயோகம், அநியாயம், மாய்மாலம், வஞ்சனை ஆகிய காரியங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது. “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு 25:40) என்று இயேசு சொல்லவில்லையா? அப்சலோம் தன்னுடைய தகப்பனாகிய தாவீதுக்கு எதிராகக் கலகம் செய்து சந்தித்த விளைவுகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? அதில் அந்தக் கலகக்காரன் இறுதியில் மரணத்தைச் சந்திக்கிறான் (1 சாமுவேல் 15:1-12; 18:1-18).

யாத்திராகமம் 21:15-17-ல் நாம் வாசிப்பதாவது: “தன் தகப்பனையாவது தாயையாவது அடிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்… தன் தகப்பனையாவது தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்”. “தன்னுடைய தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோம்” என்று நீதிமொழிகள் 20:20 சொல்கிறது. உபாகமம் 21:18-21: “தன் தகப்பன் சொல்லையும், தன் தாயின் சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும் போகிற அடங்காத துஷ்ட பிள்ளை ஒருவனுக்கு இருந்தால்… அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதர் எல்லாரும் அவன்மேல் கல்லெறியக்கடவர்கள்…”. எந்தப் பிள்ளை மனந்திரும்பாமல் பெற்றோருக்கு எதிராகக் கலகம் செய்து அவர்களை எதிர்க்கிறதோ அந்தப் பிள்ளை முழுச் சமுதாயத்திற்குமே ஆபத்தானது. பிள்ளைகளுடைய அன்பிலும் கீழ்ப்படிதலிலும்தான் ஒரு சமுதாயத்தின் நிலையான தன்மை தங்கியிருக்கிறது. அன்றும் இன்றும் இது உண்மைதான்!

இறைவன் பிள்ளைகளுக்கு மட்டும் கட்டளை கொடுக்காமல் பெற்றோருக்கும் எச்சரிக்கை கொடுக்கிறார். பிள்ளைகள் நம்முடைய கரங்களில் கொடுக்கப்பட்ட இறைவனுடைய பொறுப்புகளாக இருக்கிற காரணத்தினால் நாம் அவர்களை “நம்முடைய நோக்கங்களுக்காகப்” பயன்படுத்திக்கொள்ளக்கூடாது. இந்த இடத்தில் “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு 25:40) என்று இயேசுவின் வாக்குத்தத்தம் வித்தியாசமான வழியில் நிறைவேறுகிறது. பிள்ளைகளுக்கு கோபமூட்டி அவர்களைப் பாரப்படுத்துவதைக் குறித்த எச்சரிக்கையைப் பவுல் கொடுக்கிறார் (கொலோசெயர் 3:21; எபேசியர் 6:4). பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அதிக இடம் கொடுக்கிறவர்களாகவும் அவர்களைக் குறித்து கரிசனை அற்றவர்களாகவும் இருக்கக்கூடாது. அதற்காக அவர்கள் தங்கள் பிள்ளைகளிடத்தில் தேவையின்றி கொடூரமாகவும் கடினமாகவும் நடந்துகொள்ளத் தேவையில்லை. பிள்ளைகள் தங்கள் பிறக்குணங்களைக் காண்பிப்பார்கள் என்பதை பெற்றோர் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். பிள்ளைகள் இயற்கையாகவே தங்கள் பெற்றோரிடத்தில் இருந்து பெற்றிருக்கும் பெலவீனமான பாவமான குணாதிசயங்களைப் பார்த்து, பெற்றோர்களைப் போலதான் பிள்ளைகள் இருப்பார்கள் என்று அந்தப் பாவங்களைக் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. மாறாக, அந்த உண்மை நம்மைத் தாழ்த்த வேண்டும். பெற்றோரிடத்தில் வெளிப்படும் இந்தத் தாழ்மை பிள்ளைகளுடைய வாழ்வில் நல்நடத்தையை உண்டுபண்ணும். ஆகவே, பெற்றோரும் பிள்ளைகளும் இயேசுவிடம் மனந்திரும்புதலையும் மறுரூபமாகுதலையும் வேண்டி எப்போதும் விண்ணப்பித்துக்கொண்டிருக்க வேண்டும்.


4.07.5 - இஸ்லாத்திலிருந்து மனந்திரும்பியவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும்

ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியாமல் இருக்க வேண்டிய தேவை ஏற்படும். அதாவது, பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இறைவனுடைய சித்தத்திற்கு எதிராகச் செயல்படும்படி கேட்கும்போது அவர்கள் கீழ்ப்படிய முடியாது. “மனுஷருக்குக் கீழ்ப்படிவதைக் காட்டிலும் இறைவனுக்குக் கீழ்ப்படிவதே அவசியமாயிருக்கிறது” (அப்போஸ்தலர் 5:29) என்று வேதாகமம் தெளிவாகச் சொல்கிறது. இன்று இஸ்லாமிய உலகத்திலும் யூதர்கள் நடுவிலும் பெரும்பான்மையான பிள்ளைகள் தங்கள் பெற்றோருடைய நம்பிக்கையைத் தொடர்ந்து பின்பற்றுவதில்லை. அவர்களில் பலர் இயேசுவை அறிந்து சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவரைப் பின்பற்றுகிறார்கள். பரிசுத்த ஆவியானவரினால் இறைவனுடைய அன்பு அவர்களுடைய உள்ளங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அவர்கள் ஒரு தீவிரமான ஆவிக்குரிய மற்றும் ஒழுக்க ரீதியான மாற்றத்தைப் பெற்றிருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும் இடையில் உள்ள உறவில் இறுக்கத்தை உண்டாக்குகிறது. இதனால் அவர்கள் தங்கள் பெற்றோரை எப்போதையும்விட இப்போது அதிகமாக நேசிக்கிறார்கள். அவர்கள் தங்கள் புதிய விசுவாசத்தைப் பற்றி தங்கள் பெற்றோரிடத்தில் பேசுவதைக் காட்டிலும் அவர்களுக்கு முன்பாக நற்செயல்களைச் செய்யவதில் அதிக கவனம் செலுத்துவதற்கு அதிக ஞானம் அவர்களுக்குத் தேவை. பொறுமை என்பது ஒரு நற்குணமாகும். கிறிஸ்தவர்கள் அல்லாத தங்களுடைய பெற்றோர் இறைவனுடைய கிருபையினால் மாற்றப்பட வேண்டும் என்று ஆர்வத்தோடு அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வுலகத்தில் நம்முடைய பெற்றோரைக் காட்டிலும் நம்மை அதிகமாக நேசிக்கிறவர்கள் யாருமில்லை என்ற காரணத்தினால் அவர்களை நாம் எவ்வளவு முறை சென்று சந்திக்க முடியுமோ அவ்வளவு முறை சென்று சந்திக்க வேண்டும்.

ஆனால், பெற்றோர் பிடிவாதமுள்ளவர்களா இருந்து, இயேசுவின் ஆவியைக் கடுமையாக எதிர்ப்பவர்களாகவும், பிள்ளைகள் தங்கள் விசுவாசத்தை மறுதலிக்காவிட்டால் இஸ்லாமிய ஷரியாத் சட்டப்படி அவர்களைக் கொலைசெய்து விடப் போவதாகவும் கூறுபவர்களாக இருந்தால், நாம் அவர்களை விட்டுப் பிரிய வேண்டிய தருணம் அதுதான். கிறிஸ்தவத்திற்காக பெற்றோர்களுடைய இப்படிப்பட்ட எண்ணங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும். ஆனால் பெற்றோரை நாம் கனப்படுத்தி தொடர்ந்து அன்பு செலுத்த வேண்டும். “தன் தகப்பனையாவது தாயையாவது என்னைக் காட்டிலும் அதிகமாக நேசிக்கிறவர்கள் எனக்குப் பாத்திரவான்கள் அல்ல” (மத்தேயு 10:37) என்று இயேசு நம்மை வழிநடத்துகிறார். சமய காரணங்களுக்காக பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடத்தில் நியாமற்ற முறையிலும் கொடூரமாகவும் நடந்துகொள்ளும்போது, அவர்களுடைய உறவில் உள்ள உணர்வுபூர்வமான காரியங்களையும், கலாச்சார கட்டுப்பாடுகளையும், பொருளாதார சார்பு நிலையையும் பயன்படுத்தி பிள்ளைகளுடைய இறுதி முடிவை மாற்ற நினைக்கிறார்கள். அதனால்தான் நம்முடைய விசுவாசத்தைவிட்டு நம்மை வழிவிலகச் செய்துவிடாதபடி நற்செய்திக்கு எதிராக இருக்கிற நம்முடைய உறவினர்களைவிட்டுப் பிரிய வேண்டும் என்று இயேசு கூறுகிறார். சிலருடைய வாழ்வில் தாங்கள் முழுமையாக இயேசுவுக்குத் தங்களை ஒப்படைத்து வாழ இவ்வாறு தற்காலிகமாக தங்கள் உறவினர்களைவிட்டுப் பிரிவது இன்றியமையாததாகிறது. அவ்விதமாகப் பிரிந்திருக்கும்போது அது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் மனதளவில் வேதனைக்குரியதாகத்தான் இருக்கும். ஆனால் இறைவனுடைய அன்பு இவ்வுலகத்திலுள்ளவர்களின் அன்பைக் காட்டிலும் பெரியதல்லவா?

திருச்சபையில் இருக்கும் விசுவாசிகள் இவ்விதமாக தங்கள் குடும்பங்களைவிட்டு வரும் புதிய விசுவாசிகளைச் சேர்த்துக்கொண்டு, அவர்களுக்குப் புதிய சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் தாய்களாகவும் தந்தையர்களாகவும் செயல்பட தங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும். அவர்களுக்கு கல்வி மற்றும் திருமண காரியங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் அளவிற்கு நாம் ஒப்புக்கொடுக்க வேண்டும். பெற்றோருடைய அன்பு எப்படி முடிவில்லாததாக இருக்கிறதோ, அப்படியே அவர்கள் சரியாக நடந்துகொள்ளாதபோதும் திருச்சபையினுடைய அன்பு நிலையானதாக அவர்கள் மீது செலுத்தப்பட வேண்டும். ஒரு புதிய விசுவாசியை தங்கள் பிள்ளையாகத் தத்தெடுத்த சபையார் கிறிஸ்துவினுடைய அன்பையும் பொறுமையையுமே பின்பற்ற வேண்டும்.


4.07.6 - முடிவுரை

குடும்பத்தில் இருக்கும் அன்பு இறைவனுடைய அன்பின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். நித்திய இறைவன் நம்முடைய பிதாவாக இருக்கிறார், அவர் இயேசு கிறிஸ்துவின் மூலமாக தம்முடைய குடும்பத்தில் இணையும்படி நம்மை அழைக்கிறார். அவரோடு நாம் ஐக்கியத்தைக் காத்துக்கொள்ளும்படியாகவும், பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையினால் நம்மை உயிர்ப்பிக்கும்படியாகவும் அவர் நம்மை தம்முடைய குமாரனுடைய இரத்தத்தினால் கழுவி சுத்திகரிக்கிறார். நாம் ஒரு விபத்திலோ அல்லது கலவரத்திலோ நம்முடைய பெற்றோரை இழந்துவிட்டாலும் நாம் உடைந்துபோகத் தேவையில்லை. தாவீதைப் போல, “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்வார்” (சங்கீதம் 27:10) என்று நம்பிக்கையுடன் நம்மால் கூற முடியும். அனைத்து மனித அன்புகளும் குறைவுள்ளது, ஆனால் இறைவன் தம்முடைய முழுமையான நிறைவான அன்பினால் நம்மை அரவணைத்துக்கொள்கிறார். உதாரி மகனுடைய கதை இறைவன் இழந்து போனவர்களை எவ்விதமாக ஏற்றுக்கொள்கிறார் என்பதைக் காண்பிக்கிறது. அது மட்டுல்ல பெருமையுள்ளவர்கள் எப்படி இரட்சிக்கப்பட்டவர்கள் மீது அன்பும் இரக்கமும் காண்பிக்க வேண்டும் என்றும் அது நமக்குப் போதிக்கிறது. அந்தத் தகப்பன் இந்த இரண்டு பிள்ளைகளையும் நேசித்து அவர்களை ஒன்றாகக் கொண்டுவர முயற்சித்தார். பிதாவாகிய இறைவனோடு நமக்கிருக்கும் ஐக்கியம் நம்முடைய வாழ்வில் அமைதியையும் சமாதானத்தையும் தருகிறது. சில தருணங்களில் இவ்வுலகத்திலிருக்கும் பரிசுத்தவான்களுடைய ஐக்கியத்தில் வாழும் சிலாக்கியத்தை இறைவன் நமக்குக் கொடுக்கிறார். ஆகவே இவ்வுலகத்தில் இருக்கும் நம்முடைய குடும்பத்திற்காகவும் பரலோக குடும்பத்தில் நாம் அங்கமாகும்படி அழைக்கப்பட்டதற்காகவும் பரலோகத்தில் இருக்கும் பிதாவுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.

www.Grace-and-Truth.net

Page last modified on March 16, 2015, at 02:06 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)