Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 17-Understanding Islam -- 014 (AXIOM 1: Belief in the existence and oneness of God (Allah))
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba

Previous Chapter -- Next Chapter

17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பகுதி இரண்டு:இஸ்லாத்தின் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 3: அடிப்படை நம்பிக்கைகள்

3.1. அடிப்படை நம்பிக்கை 1: அல்லா இருப்பதையும், அவன் ஒரே கடவுள் என்பதையும் நம்புவது


முந்தைய அத்தியாயத்தில் சுட்டிக்காட்டப்பட்டபடி, முகமதுவின் ஆரம்பகால போதனைகள் அவரது பகுதியிலிருந்த கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களின் போதனைகளுடன் முழுவதுமாக முரண்படவில்லை (அந்த நேரத்தில் அரேபிய தீபகற்பத்திலிருந்த பெரும்பாலான கிறிஸ்தவர்கள் முரண்பட்ட போதனைகளைப் பின்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது). உண்மையில், யூத மதம் இஸ்லாத்தின் ஆரம்பகால வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றும், இரண்டு மதங்களுக்கும் இடையே பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன, இருப்பினும் இந்தக் கருத்துக்களில் பல பழைய ஏற்பாட்டின் சூழலிலிருந்து எடுக்கப்பட்டவை இஸ்லாத்தின் சூழலில் ஒரே மாதிரியாகப் பொருந்தவில்லை. எனவே, இஸ்லாத்தில் கடவுளைப் பற்றிய இறுதிக் கருத்து பைபிளின் கடவுளிடமிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தாலும், முகமது ஆரம்பத்தில் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் போலவே ஒரே கடவுளைப் பின்பற்றுவதாகக் கூறினார். அவர் இன்னும் அவர்களை தன்னைப் பின்பற்றும்படி சமாதானப்படுத்த முயற்சித்தபோது, குர்ஆனில் பின்வருமாறு கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது:

““இன்னும், நீங்கள் வேதத்தையுடையவர்களுடன் - அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்; "எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே - மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு, நடப்போர் (முஸ்லீம்கள்) ஆவோம்" என்று கூறுவீர்களாக.” (குர்ஆன் 29:46)

முகமதுவின் புதிய மதம் மெக்காவிலிருந்த புறமத மக்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், அவர் அப்போது இருந்த பழைய நம்பிக்கைகளிலிருந்து சில கருத்துக்களை எடுத்திருந்தார்.

உதாரணமாக, அல்லா என்ற பெயர் இஸ்லாத்திற்கு முன்பே பயன்படுத்தப்பட்டு வந்தது. உண்மையில், அது முகமதுவின் தந்தையின் பெயரான அப்துல்லா (அல்லாவின் அடிமை) என்பதில் ஒரு பகுதியாக இருந்தது. அது எதைக் குறிக்கிறது அல்லது யாரைக் குறிக்கிறது என்பது குறித்து சில விவாதங்கள் உள்ளன; ஒரு கோட்பாடு அது சந்திரனை தெய்வமாகக் குறிக்கிறது என்று கூறுகிறது, மற்றொன்று அது ஒரு குறிப்பிட்ட புறஜாதி சிலையைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது என்று கூறுகிறது. இன்னும் ஒரு கோட்பாடு அது அனைத்து கற்பனை தெய்வங்களையும் விட உயர்ந்த ஒரு தலைமை படைப்பாளரான கடவுளை விவரிக்க பயன்படுத்தப்பட்டது என்பதாகும். ஆரம்ப காலத்தில், முகமது கூட அல்லா என்பது புதிய கடவுள் அல்ல, அவர்கள் ஏற்கனவே வணங்கி வந்தவரே தான் என்று உள்ளூர் மக்களை நம்ப வைக்க முயன்றார். இதற்கு முகமது தனக்கு முன்பு அரேபியர்களாலும், கிறிஸ்தவர்களாலும், யூதர்களாலும் பின்பற்றப்பட்ட அனைத்தையும் ஏற்றுக்கொண்டார் என்று அர்த்தம் இல்லை. அவர் சூழ்நிலைகளைப் பொறுத்து எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து பின்பற்றினார். நிச்சயமாக, குர்ஆனில் வழங்கப்படும் அல்லா என்ற கருத்து, பைபிளிலுள்ள கடவுளின் கருத்திலிருந்து மிகவும் வேறுபட்டது, ஆனால் முகமதுவின் ஆரம்ப கால கருத்துக்கள் அவரைச் சுற்றியிருந்தவர்களின் நம்பிக்கைகளால் ஓரளவு வடிவமைக்கப்பட்டன.

அல்லாவைப் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டத்தை புரிந்துகொள்ள, முதலில் குர்ஆனில் கற்பிக்கப்படும் இரண்டு அடிப்படை கொள்கைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்: அவரது கற்பனை கடந்த நிலை (transcendence) மற்றும் படைக்கப்பட்ட ஒழுங்குமுறைக்கு (created order) அவர் முரண்படுவது. இவை அனைத்தும் அல்லாவின் தன்மை பற்றிய ஒரு முஸ்லீமின் முழுமையான புரிதலுக்கு அடிப்படையாக அமைகின்றன.

இஸ்லாத்தில், அல்லா தனது படைப்பிலிருந்து மிகவும் அப்பாற்பட்டவர், அவருக்கு ஒப்பான எதுவும் இல்லை. முஸ்லீம் இறையியலாளர்கள், அல்லாவைப் பற்றி சிந்திக்கும்போது உங்கள் மனதில் எது வந்தாலும், அதிலிருந்து அவர் வேறுபட்டவர் என்று கூறுகின்றனர். இந்தக் கொள்கை தன்ஜீஹ் அல்லது கற்பனை கடந்த நிலை (transcendence) என்று அழைக்கப்படுகிறது. இது மிக முக்கியமானது, ஏனென்றால் அல்லாவைப் பற்றி எதையும் சொல்வது சாத்தியமற்றது, ஏனென்றால் அது அவரைப் பற்றி உண்மையாக இருக்காது, அவர் எப்போதும் வேறுபட்டவராக இருப்பார். இது அடிப்படையில் அல்லாவை முழுவதுமாக அறிய முடியாததாக ஆக்குகிறது. ஹதீஸ்களின் ஒரு தொகுப்பில், முகமது "அல்லாவின் படைப்பைப் பற்றி சிந்தியுங்கள், அல்லாவைப் பற்றி சிந்திக்காதீர்கள்" என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இது, நிச்சயமாக, பைபிள் கடவுளைப் பற்றி கற்பிப்பதற்கு முற்றிலும் மாறானது, அதாவது நாம் கடவுளுடன் ஒரு உறவுக்காக படைக்கப்பட்டிருக்கிறோம், அவரை அறிய வேண்டும் என்ற தெளிவான நோக்கத்துடன் படைக்கப்பட்டிருக்கிறோம்.

இரண்டாவது கொள்கை, படைக்கப்பட்ட ஒழுங்குமுறைக்கு முரண்படுதல் என்பது, அல்லாவுக்கும் அவனது படைப்புக்கும் இடையே எந்த வகையிலும் ஒற்றுமை இல்லை என்பதாகும். இது அல்லாவின் செயல்கள் உட்பட அனைத்திற்கும் பொருந்தும் என்பதா, அல்லது அல்லாவின் இயல்புக்கே இது பொருந்தும் என்பதா என்ற விஷயம் இஸ்லாமிய இறையியலில் தெளிவாக இல்லை. உதாரணமாக, அல்லா ஜெபங்களை கேட்கிறார் என்று சொன்னால், கேட்கிறார் என்ற வார்த்தையை நாம் வழக்கமாக புரிந்துகொள்வது போலவே புரிந்துகொள்ள வேண்டுமா? என்றால், இதைப் பற்றி முஸ்லீம் இறையியலாளர்கள் உடன்படவில்லை. எனவே, அல்லாவைப் பற்றி செய்யப்படும் எந்தக் கூற்றையும் புரிந்துகொள்வது இரட்டிப்பான கடினமாகிறது.

உதாரணமாக, குர்ஆன் அல்லாவின் கை பற்றி பேசும்போது, அல்லாவுக்கு உண்மையான கை இல்லை என்று முஸ்லீம் இறையியல் அறிஞர்கள் கூறுகின்றனர்; இருப்பினும், அது நாம் நினைப்பது போன்ற கை அல்ல, அது அவரது மாட்சிமைக்கு தகுதியானது எதுவோ அதுதான், அவர் எதை உத்தேசிக்கிறாரோ அதுதான். துரதிர்ஷ்டவசமாக, இது நமக்கு இதைத் தவிர வேறு எதையும் சொல்லவில்லை: அல்லா என்ன சொல்ல நினைக்கிறானோ அதையே சொல்லுகிறார் (ஆனால் அது என்னவென்று நமக்குத் தெரியாது).

அப்படியானால், இந்த இரண்டு முக்கிய கொள்கைகளின் விளைவாக, அல்லாவைப் பற்றிய வேறு எந்தக் கருத்தையும் நாம் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால், அவரைப் பற்றி எதையும் கூறுவது இந்த இரண்டு கொள்கைகளையும் மீறி, கூறப்பட்டவற்றைத் தவறாகக் கருதுவதாக ஆக்கிவிடும்.

இந்த இரண்டு கொள்கைகளையும் மனதில் வைத்துக்கொண்டு, அல்லா பற்றிய வேறு சில போதனைகளைப் பார்ப்போம். அல்லாவைப் பற்றிய புரிதலில் முக்கியமான விஷயங்களில் ஒன்று அவனது பெயர்கள். குர்ஆனில் அல்லாவின் "மிகச் சிறந்த பெயர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது (குர்ஆன் 7:180). பொதுவாக முஸ்லீம்கள் அல்லாவுக்கு 99 பெயர்கள் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், இந்த 99 பெயர்கள் எவை என்பது குறித்து கருத்து வேறுபாடுகள் உள்ளன. உண்மையில், சில அறிஞர்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் அல்லாவுக்கு 276 பெயர்கள் வரை கண்டறிந்துள்ளனர். இந்த வேறுபாடுகளுக்கான ஒரு காரணம், ஹதீஸ்களின் நம்பகத்தன்மை குறித்த கருத்து வேறுபாடுகளே ஆகும். மேலே குறிப்பிட்டுள்ளபடி, சில தொகுப்புகள் அனைத்து சுன்னி முஸ்லீம்களாலும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஏற்றுக்கொள்ளப்படுகின்றன (எ.கா. முஸ்லீம் அல்லது புகாரியால் சேகரிக்கப்பட்டவை), ஆனால் மற்றவை பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அல்லாவின் பெயர்கள் குர்ஆன் அல்லது ஹதீஸ்களில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும், ஒரு செயல் அல்லது வினையிலிருந்து பெறப்படக்கூடாது. உதாரணமாக, முஸ்லீம்கள் அல்லாவை "அல்-கஹார்" - கட்டுப்படுத்துபவர் - என்று அழைக்க முடியும், ஏனெனில் இந்த பெயர் குர்ஆனில் உள்ளது (குர்ஆன் 39:5), ஆனால் அல்லாவை "அல்-அதீ" - கொடையாளி - என்று அழைக்க முடியாது, ஏனெனில் இந்த குறிப்பிட்ட பெயர் குர்ஆன் அல்லது ஹதீஸ்களில் இல்லை, இருப்பினும் அல்லா பல இடங்களில் கொடுப்பவராக விவரிக்கப்படுகிறார். அல்லாவின் பெயர்கள் செயல்களிலிருந்து பெற முடியாது என்று முஸ்லீம்கள் கூறுவதற்கான ஒரு காரணம், குர்ஆனில் அல்லாவின் சில செயல்கள் அவரை மாறாத தன்மையுடன் பிரதிநிதித்துவப்படுத்தாது, ஏனெனில் அவை நடைபெற்ற சூழல்களுக்கு மட்டுமே பொருந்தும். உதாரணமாக, குர்ஆனில் (குர்ஆன் 4:142) அல்லா வஞ்சகர்களை ஏமாற்றுவதாகக் கூறப்பட்டிருந்தாலும், அல்லாவை "ஏமாற்றுபவர்" என்று சொல்ல முடியாது.

இன்னொரு சிரமம் என்னவென்றால் (இஸ்லாத்தில் கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் இருப்பது போல) அல்லாவின் தன்மை பற்றியோ அல்லது விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் பற்றியோ அறிஞர்களிடையே ஒற்றுமை இல்லை; சில அறிஞர்கள் அல்லாவின் தன்மை பற்றி விவாதிக்கக் கூடாது என்கிறார்கள், மற்றவர்கள் விவாதிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்கிறார்கள்.

இதன் விளைவாக, முரண்பாடுகள் மற்றும் தெரியாதவை என பல விஷயங்கள் எஞ்சியிருக்கின்றன. அல்லாவுக்கு உருவமில்லை என்றாலும், சொர்கத்தில் அவரை நேரடியாகக் காண முடியும் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள். மேலும், அவர் உண்மையான சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதாகவும் முஸ்லீம்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர் அவதாரம் இல்லையென்றாலும், அவருக்கு கை, முகம், கண், கால், பக்கம் போன்றவை இருப்பதாக முஸ்லீம்கள் நம்புகிறார்கள் - இவை அனைத்தும் உண்மையான உடல் பாகங்கள் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள். அவர் எங்கும் இருக்கிறார், ஆனால் அவர் வருகிறார் மற்றும் போகிறார். இத்தகைய நம்பிக்கைகள் இதனை ஒரு ஒழுங்கான முறையாகக் கருத முயற்சிக்கும் எவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக, பல முஸ்லீம்கள் முரண்பாடுகளை விளக்கப்பட முடியாத ஒன்றாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

அல்லாவைப் பற்றிய இத்தகைய புரிதலின் நடைமுறைப் பயன்பாட்டைப் பொறுத்தவரை, அனைத்தும் அல்லாவினால் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது என்றும், மனிதனால் அதை மாற்ற எதுவும் செய்ய முடியாது என்றும் முஸ்லீம்கள் நம்புவதால், அவர்களின் செயல்கள் அல்லாவினால் திட்டமிடப்பட்டவை என்று கருதப்படுகிறது. இதன் விளைவாக, இஸ்லாம் வரலாற்றில் மிகவும் முன் தீர்மானிக்கப்பட்ட நம்பிக்கை கொண்டுள்ள அமைப்புகளில் ஒன்றாகும். இது மனிதனின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது, ஏனென்றால் முஸ்லீம்கள் தாங்கள் என்ன செய்தாலும், தங்களுக்கு விதிக்கப்பட்டதை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எதையும் சாதிக்க முடியாது என்று முழுமையாக நம்புகிறார்கள்.

www.Grace-and-Truth.net

Page last modified on April 11, 2026, at 08:58 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)