Previous Chapter -- Next Chapter
அத்தியாயம் 11: முஸ்லீம்களோடு இறையியல் சம்பந்தமான உரையாடலில் ஈடுபடும்போது கவனிக்க வேண்டியவை பற்றிய அறிவுரை
பைபிளின் போதனைகளுக்கு எதிரான முஸ்லீம்களின் குறிப்பிட்ட ஆட்சேபனைகளைப் பற்றி விவாதிப்பதற்கு முன், கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களுடன் இறையியல் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கான பொதுவாக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி பார்க்க விரும்புகிறேன். தங்களிடம் பதில்கள் இருக்கின்றது என்ற காரணத்திற்காக கிறிஸ்தவர்கள் வாதத்தைத் தேட வேண்டாம். குர்ஆன் அல்லது வசனங்கள் பற்றிய கேள்விகள் எழுந்தால், அவற்றைத் தவிர்க்கவோ அல்லது பேச்சை மாற்றுவதற்கோ பதிலாக, அவற்றை நேரடியாகக் கையாள வேண்டும். இது இஸ்லாமியர்களுக்கு இந்தக் கேள்விகளுக்கு பதில் இல்லை என்ற தோற்றத்தைத் தவிர்க்கிறது. கிறிஸ்தவர் அல்லாதவர்களுடன் கலந்துரையாடல் செய்வதற்கான பைபிள் மாதிரி அப்போஸ்தலர் செயல்கள் 17 மற்றும் அப்போஸ்தலர் 25ல் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு, அப்போஸ்தலர் பவுல் எவ்வாறு தனது எதிராளியை எதிர்கொண்டார் என்பதை நாம் பார்க்கிறோம், கேள்வியைத் தவிர்க்காமல் மரியாதையுடனும் நேரடியாகவும் எந்தவித சமரசமும் இல்லாமல் விவாதம் செய்தார், மேலும் எப்போதும் கலந்துரையாடலில் கிறிஸ்துவை மையமாகக் கொண்டுவந்தார். இப்போது, நமது விவாதங்களில் நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே உள்ளன.
- இறையியல் வாதத்தில் வெற்றிபெறுவது உங்கள் நோக்கம் அல்ல; மாறாக, ஒருவரை கிறிஸ்துவை நோக்கி வழிநடத்துவதே ஆகும். பலனுக்காகக் காத்திராமல், முடிந்தவரை உங்கள் தொடர்புகளுடனான தடைகளை நீக்க முயற்சிசெய்யுங்கள். ஒருவரை சம்மதிக்கச் செய்வது உங்களது வேலை அல்ல, அது பரிசுத்த ஆவியானவரின் வேலை. கடவுள் எப்படி நம் உரையாடலை பயன்படுத்துவார் என்று நமக்கு தெரியாது. “கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம்.” என்பதே உண்மை (2 கொரிந்தியர் 2:16). உங்கள் கேள்விக்கான விடை பைபிளில் இருந்தால், பைபிளை வாசிக்க உங்கள் நண்பரை ஊக்குவியுங்கள். ஏனென்றால் உங்கள் வார்த்தைகளை விட பைபிளுக்கு மனதை சம்மதிக்க வைக்கும் ஆற்றல் அதிகம் உள்ளது.
- உரையாடலை ஒன்று அல்லது இரண்டு தலைப்புகளுக்குள் கட்டுப்படுத்துங்கள். சாத்தியமான இடங்களில், அவற்றை முன்னதாகவே நிலைநாட்ட முயற்சிக்கவும். நமது கலந்துரையாடல் முடிவுக்கு வராத நிலையில், உங்களிடம் தொடர்பு கொள்பவர் புதிய தலைப்பை அறிமுகப்படுத்தினால், அதைப் பற்றி பின்னர் விவாதிக்கலாம். எனவே, தற்போது கையாளும் விஷயத்தை முடித்த பின்னர் அதைப் பற்றி பேசலாம் என்று அவர்களிடம் தெரிவித்து, அந்தப் புதிய தலைப்பை குறித்து வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுங்கள். ஒரு விஷயத்திலிருந்து இன்னொரு விஷயத்திற்கு மாறுவது உண்மையான பதில்களுக்கான தேடலாக இருக்கலாம், ஆனால் பல "அவிசுவாசிகள்" முடிவெடுப்பதைத் தவிர்க்கப் பயன்படுத்தும் யுக்திகளில் இதுவும் ஒன்று. இது இரு தரப்பினருக்கும் நேரம் வீணாவதோடு, மெனக்கெடலாகவும் முடியும்.
- உங்களுக்குத் தெளிவாகத் தெரியாத விஷயத்தைப் பற்றி கேட்கப்பட்டால், "தெரியாது" என்று உண்மையைச் சொல்லுங்கள். தவறான தகவலை அளிக்க வேண்டாம். மாறாக, அந்தத் தலைப்பை ஆராய்ந்து பின்னர் விவகாரத்தைத் தெளிவுபடுத்துவேன் என்று உங்களிடம் தொடர்புகொள்பவரிடம் தெரிவியுங்கள். இருப்பினும், அவர்களிடம் மீண்டும் பேச மறக்காமலிருக்க மிகவும் கவனமாக இருங்கள். ஏனென்றால், இது மிகவும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும், மேலும் இது நேர்மையற்றத்தன்மை அல்லது தவிர்க்கும் செயல் என்று கருதப்படலாம்.
- நாம் எவ்வளவு மரியாதையுடன் கவனமாக இருந்தாலும், எதிர்பாராத விதமாக யாராவது ஒருவருடைய உணர்வுகளைப் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். முஸ்லீம்களிடம், நீங்கள் எவ்வளவு மரியாதைக் காட்டினாலும், அவர்கள் எப்போதும் அதிகமாக எதிர்பார்ப்பார்கள். இதுபோன்ற உரையாடலில் கருத்து வேறுபாடுகளை மதிப்பது மற்றும் பரஸ்பரம் புரிந்துகொள்வது அவசியம். இது உங்கள் தொடர்பை மேம்படுத்தும். உங்கள் இறையியல் கொள்கைகளில் சமரசம் செய்யாமல் உறுதியாக இருங்கள். ஒருமுறை நான் இஸ்லாத்திற்கு மதம் மாறிய அமெரிக்கரைச் சந்தித்ததை நினைவுபடுத்துகிறேன், நாங்கள் மதத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். உரையாடலின் ஒரு சமயத்தில், என் நண்பர் குர்ஆனின் ஒரு வசனத்திற்குத் தவறான மொழிபெயர்ப்பைக் கொடுத்தார். பணிவுடன் அவரை திருத்த முயற்சித்தேன். மூல அரபு மொழிக்கு உண்மையில் மிகவும் நெருக்கமான இன்னொரு மொழிபெயர்ப்பைச் சுட்டிக்காட்டினேன். அவர் அரபி மொழி சிறிதும் அறியாதவர். என் தாய்மொழியே அரபியாகும், அப்படியிருந்தும், அவர் மிகுந்த கோபமடைந்து சென்றுவிட்டார். அன்று மாலை வீட்டிற்குச் சென்ற பிறகு, எங்களைத் தங்க வைத்தவர் தொலைபேசி மூலம் அழைத்து, தனது நண்பரின் நடத்தைக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டார். அங்கு இருந்தவர்கள் இஸ்லாத்திற்கு மதம் மாறியவரின் எதிர்வினையாலும் போக்காலும் சங்கடப்பட்டார்கள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அவரது வாதங்கள் பலவீனமாக இருந்ததாலும், கேள்விகளுக்கு பதில்சொல்ல முடியாததால் தனது தோல்வியை ஏற்க மறுத்து பதட்டமடைந்து வெளியேறினார் என்று அவர்கள் சொன்னார்கள். பண்பான மற்றும் நிதானமான விவாதம், உங்களுடன் வாதிடும் நபரிடம் உடனடியாக விளைவை ஏற்படுத்தாவிட்டாலும், கவனிக்கும் மற்றவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், அது உங்களோடு வாதிட்ட நபரிடம் பின்னர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதே இதன் கருத்து. மரியாதை காட்டுவதன் மூலம் உங்கள் எதிராளி தாக்குதல்களை வெல்ல முடியும், பகைமையால் அல்ல. சில சமயங்களில், நீங்கள் உரையாடும் நபரிடம், நீங்கள் அவர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்வது போல் அவர்களும் உங்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று மென்மையாக சுட்டிக்காட்டுவது பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்காக நீங்கள் வாதிடவில்லை, மாறாக அவர்கள் இரட்சிக்கப்பட உதவ முயற்சிக்கிறீர்கள், என்பதை நீங்கள் மனதில் வைப்பது கூட பயனுள்ளதாக இருக்கும். மேலும் நீங்கள் உண்மையில் அவர்களுடன் மட்டும் வாதிடவில்லை, பின்னணியில் ஒரு ஆவிக்குரிய போர் நடந்துகொண்டிருக்கிறது.
- சில சமயங்களில், நீங்கள் பேசுவதைக் கேட்பவர் உங்களை வேண்டுமென்றே கோபப்படுத்த முயற்சிக்கலாம் என்பதை மனதில்வையுங்கள். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, அவர்களின் சந்தேகங்களுக்கு நீங்கள் பதிலளிக்க இயலாமை காரணமாக. மற்றொன்று, பதில் சொல்ல முடியாததால் நீங்கள் கோபப்படுகிறீர்கள் என்பதை கவனிப்பவர்களுக்குக் காட்ட வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாக இருக்கலாம். அவர்கள் தங்கள் கேள்விகளால் உங்களை கோபப்படுத்தி விட்டால், பின்னர் மன்னிப்பு கேட்டு, அதன் மூலம் மேலோங்கும் நிலையை அடைய முயற்சிப்பார்கள். மீண்டும், இது உங்கள் சுய கௌரவத்தைப் பற்றியது அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்; சில சமயங்களில், ஒருவரை வெல்ல, நீங்கள் வாதத்தில் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்.
- உங்கள் நண்பருக்கு இந்த விசயம் எவ்வளவு முக்கியமானது என்பதை சுட்டிக்காட்டுவது நல்லது. இது அவரது வாழ்வில் மிக முக்கியமான விசயம், ஏனென்றால் இது அவரது நித்திய வாழ்வைப் பற்றியது. எனவே, அவர் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ளும் விதத்தில் நீங்கள் பேச வேண்டும். நீங்கள் இதைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால், நீங்கள் சொல்வதைக் கேட்பவர் எப்படி இதைத் தீவிரமாக எடுத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கிறீர்கள்? இந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் முழு ஈடுபாட்டுடன் இருந்தால், நீங்கள் மதிக்கப்படுவீர்கள்.
- எந்தவிதமான விவாதத்திலும் சிக்காமலிருக்க முயற்சிக்கவும். உதாரணமாக, "முகமது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" அல்லது "குர்ஆன் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" போன்ற கேள்விகளைத் தவிர்க்கவும். இந்தக் கேள்விகள் சண்டையாக மாறிவிடவோ, அல்லது குறைந்தபட்சம், உரையாடலை முடித்துவிட எளிதாக வழிவகுக்கும். அப்படிப்பட்ட கேள்விகளுக்கு உங்கள் பதிலை சுருக்கமாகவும் தெளிவாகவும் வைத்துக்கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, "முகமது அல்லது குர்ஆன் பற்றி எனது கருத்து தேவையில்லை" அல்லது "நாம் கிறிஸ்துவைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம், முகமதுவைப் பற்றி இல்லை. பைபிளைப் படித்தால் நீங்கள் உங்கள் சொந்த கருத்தை உருவாக்கிக் கொள்ளலாம்". தெளிவாக இருக்க முயற்சிசெய்யுங்கள், முகமது நபியின் போதனைகளை விமர்சிக்காமல் இருங்கள், இல்லையென்றால் பேச்சு நன்றாகத் தொடராது.
- முகம்மது பற்றிய எந்த உரையாடலும் கவனமாக நடத்தப்பட வேண்டும். முஸ்லீம்கள் கடவுள் இல்லை என்று சொல்பவர்களிடம் கோபமாக எதிர்வினையாற்ற மாட்டார்கள். ஆனால், முகமது நபியை இழிவுபடுத்தும் யாரிடமும் நிச்சயமாக கோபமாக பதிலளிப்பார்கள். கிறிஸ்தவர்களாகிய நாம் நிச்சயமாக முகமது நபியை வணங்க முடியாது. ஆனால், அதே நேரத்தில் அவரை அவமதிக்கக்கூடாது. முகமது நபியின் பண்புகள் பற்றி கருத்துச் சொல்ல வேண்டும் என்ற தூண்டுதல் இருக்கலாம், ஆனால் அதை தவிர்க்க முயற்சிக்க வேண்டும்! முதலாவதாக, இதனால் எந்த பயனும் இல்லை; பதிலுக்கு, முகமது நபியை விட பைபிள் தீர்க்கதரிசிகள் யார் தார்மீக ரீதியாக சிறந்தவர் என்பது பற்றிய விவாதத்தில் சிக்கிக்கொள்வீர்கள். கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொரு மனிதரும் பாவிகள் என்று நம்புவதால், முகம்மது நபியும் ஒரு பாவியே என்று நிரூபிப்பது பயனுள்ளதாக இருக்காது. இயேசு கிறிஸ்துவை பற்றி விளக்குகிறபோது, முஸ்லீம்களுடைய மனதில் தானாகவே முகமது நபியுடனான ஒப்பீடு தோன்றும். எனவே, நாம் முகமது நபியை பற்றி பேச வேண்டியதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் சபையில் ஒரு திருமணம் நடந்தது எனக்கு நினைவிருக்கிறது. மணமகளின் தந்தை ஒரு முக்கிய இஸ்லாமிய நிறுவனத்தில் முதன்மை பொறியாளராக பணிபுரிந்து வந்தார், எனவே அவர் தனது பல முஸ்லீம் சக ஊழியர்களை அழைத்திருந்தார். எங்கள் சபை போதகர் முஸ்லீம்கள் நிறைந்த அறையில் ஒரு கிறிஸ்தவ செய்தியை சில நிமிடங்கள் வழங்க வேண்டியிருந்தது. கானாவில் நடந்த திருமணத்தைப் பற்றி பாதிரியார் பேசியது ஒரு முக்கியமான தருணம். அங்கு, கிறிஸ்து அதிசயம் செய்யும்படி கேட்கப்பட்டபோது, அவர் மறுக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இது எப்போதும் உதவ தயாராக இருக்கும் இயேசுவின் குணத்தை வெளிப்படுத்துகிறது. போதகர் மேலும் கூறினார், இயேசு எப்போதும் மக்களின் கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்க தயாராக இருந்தார். முகமது அல்லது இஸ்லாம் பற்றி போதகர் எந்த வார்த்தையும் பேசவில்லை என்றாலும், அவர் கூறியவை முகமதுவின் குணாதிசயங்களுடன் முரண்படுவதை அறையிலிருந்த முஸ்லீம்கள் உணர்ந்தனர். முகமது தேவைப்படுபவர்களுக்கு உதவத் தயங்குவார், தன்னை விமர்சிப்பவர்கள்மீது கோபப்படுவார், கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பார், தன்னை பின்பற்றுபவர்களும் கேள்வி கேட்பதைத் தடுப்பார் என்று அவர்கள் நினைத்தனர். போதகர் முகமதுவை நேரடியாக விமர்சிக்கவில்லை என்றாலும், முஸ்லீம்களே இருவரையும் ஒப்பிட்டுப் பார்ப்பது தவிர்க்க முடியததாய் காணப்பட்டது.
- நீங்கள் இறையியல் சொற்களை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் ஏனெனில்:
a) அவை கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அதே அர்த்தத்தை அரிதாகவே குறிக்கும்;b) சில சமயங்களில் அத்தகைய சொற்கள் முஸ்லீம்களுக்கு எதுவுமே பொருள் தராது, உதாரணமாக பரலோக ராஜ்ஜியம், பரிசுத்தம், அபிஷேகம் போன்றவை;c) சில சமயங்களில் நாம் பயன்படுத்தும் சொற்கள் முஸ்லீம்களால் தேவநிந்தனையாகக் கருதப்படலாம் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, "தேவனுடைய பிள்ளைகள்", "கடவுளின் சகோதரர்கள்", "கர்த்தருடைய இரத்தம்" போன்ற சொற்கள் அவர்களுக்கு தவறான கருத்தை தரக்கூடியவை. நாம் பயன்படுத்தும் சொற்களின் அர்த்தத்தை முஸ்லீம்கள் எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பதை அறிந்து, நாம் எந்த அர்த்தத்தில் அவற்றைப் பயன்படுத்துகிறோம் என்பதை விளக்க முடியுமானால் அது நல்லது. முடிந்தவரை தெளிவான, எந்தவித சமரசமும் இல்லாத சொற்களைப் பயன்படுத்துவது சிறந்தது. உதாரணமாக, "இயேசு" என்ற பெயரைப் பயன்படுத்தாமல் "கிறிஸ்து" என்ற பட்டத்தைப் பயன்படுத்தி முஸ்லீம் நபருடன் கிறிஸ்துவைப் பற்றி பேசுவது எளிதாக இருக்கும், ஏனென்றால் அவர் தீர்க்கதரிசியான "ஈஸா"வை மட்டுமே அறிந்திருக்கிறார், கடவுளின் மகனான இயேசுவை அவர் அறிந்திருக்க மாட்டார். நிச்சயமாக, இயேசுவை கிறிஸ்து என்று குறிப்பிடுவதில் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
- பைபிளை மேற்கோள் காட்டும்போது, எப்போதும் நினைவிலிருந்து மேற்கோள் காட்டுவதைத் தவிர்த்து, பைபிளிலிருந்து நேரடியாக மேற்கோள்காட்டுவது முக்கியம். படிப்பது பெரும்பாலும் நீங்கள் வாசிப்பதை தெளிவுபடுத்தும், மேலும் உங்கள் தொடர்பு பரிசுத்த வேதாகமத்திற்கு திரும்பிச் சென்று வசனத்தின் பின்னணியை அறிந்துகொள்ள வேண்டும் என்ற மனப்பான்மையை வளர்க்கும். இருப்பினும், நீங்கள் பரிசுத்த வேதாகமத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். கிறிஸ்தவர்களாக, நாம் அச்சிடப்பட்ட பைபிளின் காகிதத்தை வணங்குவதில்லை என்பதை நாம் அறிவோம். நமது பைபிளில் வசனங்களை குறித்துக்கொள்வதும், ஓரங்களில் குறிப்புகளை எழுதுவதும் நமக்கு வழக்கம். ஆனால், முஸ்லீம்கள் குர்ஆனை மிகவும் மதிப்புடன் கையாள்கிறார்கள். அதில் எந்தவிதமான குறிப்புகளையும் எழுத மாட்டார்கள். எனவே, குறிப்புகள் எழுதப்பட்டிராத வேதத்தின் ஒரு பிரதி இருப்பது பயனுள்ளதாக இருக்கும். அதேபோல், நீங்கள் படித்து முடித்த பிறகு, உங்கள் வேதத்தை தரையில் வைக்க வேண்டாம், ஆனால் மேசை அல்லது நாற்காலியில் வைக்கவும். இது நமக்கு விஷயமில்லை என்று தோன்றலாம், ஆனால் நீங்கள் வேதத்தை மதிக்காதது போல் முஸ்லீம்கள் உங்கள் நடத்தையைத் தவறாக புரிந்துகொள்ளக்கூடும். குர்ஆன் இருந்தால் அதில் உள்ள வசனத்தைப் பற்றி பேச வேண்டியிருந்தால், உங்கள் பிரதியை விவாதத்திற்கு கொண்டு வர வேண்டாம். மாறாக, நீங்கள் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறீர்களோ அவர் குர்ஆன் வைத்திருக்கிறாரா என்று பாருங்கள், அதைப் பயன்படுத்தலாமா என கேளுங்கள். இல்லையெனில் அவர் உங்களுக்காக அதைத் தேட விரும்பலாம். சில முஸ்லீம்கள் - முகமதுவின் போதனையின் அடிப்படையில் - குர்ஆனை முஸ்லீம் அல்லாதவர்கள் தொடக்கூடாது என்று நம்புகிறார்கள். நிச்சயமாக, குர்ஆன் இப்போது இணையத்தில் கிடைப்பது இணையதளத்தில் வசனத்தைத் தேட மிகவும் எளிதாக்குகிறது, மேலும் முஸ்லீம்கள் இதனை ஏற்றுக்கொள்வதாகத் தெரிகிறது.
- பைபிளுக்கும் குர்ஆனுக்கும் இடையேயுள்ள ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது எந்தவொரு உரையாடலுக்கும் முன் முக்கியமானது. ஒற்றுமைகள் பெரும்பாலும் கருத்து வேறுபாடுகளை விட முக்கியமானவை, ஏனெனில் அவை இஸ்லாமில் தனித்து புரிந்துகொள்ள முடியாமல் இருக்கும்போது, பைபிளின் வெளிச்சத்தில் மட்டுமே புரிந்துகொள்ளக் கூடியவை. (கீழே 12ம் அத்தியாயத்தைக் காண்க). நாம் என்ன நம்புகிறோம் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் சில சமயங்களில் எந்தவிதமான இறையியல் விளைவையும் ஏற்படுத்தாத தொடர்பில்லாத விவாதங்களில் ஈடுபடலாம், உதாரணமாக, ஒரு நபரின் (அல்லது உங்கள் சொந்த) பாவங்களை நீங்கள் நியாயப்படுத்துவதற்காக செலவழிக்கும் நேரம் போன்றவை. எல்லோரும் பாவிகளே (ரோமர் 3) என்று நாம் ஏற்கனவே நம்புகிறோம், எனவே போப் அல்லது சில போதகர் செய்ததை நியாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
- நீங்கள் உடன்படும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் - தற்போதைக்கு – அவற்றின் அடிப்படையில் தொடருங்கள். குர்ஆனில் பல வேதாகமக் கதைகள் மற்றும் கருத்துக்கள் விவரங்கள் இல்லாமல் துணுக்குகளாக உள்ளன. அதே நேரத்தில், வேதாகமம் இந்த விஷயங்களை ஆழமாகவும் தெளிவாகவும் விளக்குகிறது. இந்தக் குறிப்புகளில் கவனம் செலுத்துவது கிறிஸ்தவர்களுக்கு பைபிளைப் பற்றி சுதந்திரமாக பேச உதவும். குர்ஆனில் படித்த கதைகளைப் பற்றி கிறிஸ்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய உங்களுடன் பேசும் நபர் ஆர்வமாக இருக்கலாம் –கிறிஸ்துவின் பிறப்பு, யாத்திராகமம் இயேசு மற்றும் மோசேயின் அற்புதங்கள் போன்றவை. இந்தக் குறிப்புகளைப் பற்றி மேலும் அறிய, அடுத்த அதிகாரத்தைப் பாருங்கள்.
- உங்களுடன் தொடர்பிலிருக்கும் நபரின் பார்வையை எப்போதும் கவனத்தில் கொள்ளுங்கள். பொன்னான விதியை நினைத்துப் பாருங்கள்: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.” (மத்தேயு 7:12) நீங்கள் அவர்களுடைய நிலையில் இருந்தால், நீங்கள் எப்படி நடத்தப்பட விரும்புவீர்கள் என்பதை சிந்தியுங்கள். நீங்கள் யாருடன் உரையாடிக்கொண்டிருக்கிறீர்களோ அவர்களுக்கு எல்லா தகவல்களையும் வழங்குவது எப்போதும் நல்லது, பின்னர் அவர்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்கட்டும், அவர்களுக்காக நீங்கள் முடிவெடுக்க வேண்டாம். மக்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்கும்போது, அவர்கள் அதை தாங்களே செய்ததாக உணர்கிறார்கள். அதற்குப் பதிலாக, நீங்கள் அவர்களுக்கு என்ன சிந்திக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறீர்கள் என்று அவர்கள் உணர்ந்தால், அவர்கள் தங்கள் மனதை மாற்றுவது மிகவும் கடினம்.
- நீங்கள் எந்த பிரிவு முஸ்லீம் சகோதரருடன் உரையாடுகிறீர்கள் என்பதை நினைவில்கொள்வது மிகவும் முக்கியம். ஒரு பழமைவாத சுன்னி முஸ்லீமுடன் பேசும்போது, குர்ஆன் அல்லது ஹதீஸிலிருந்து மேற்கோள்களை பயன்படுத்துவது அவர்களுக்கு எளிதில் புரியும். ஏனெனில் அவர்கள் அந்த நூல்களில் நன்கு தேர்ச்சிபெற்றிருப்பார்கள். அவர்களை பைபிளைப் படிக்க ஊக்குவிப்பது கடினமாக இருக்கலாம். மறுபுறம், ஒரு பெயரளவு முஸ்லீமுடன் பேசும்போது, ஹதீஸ் அல்லது குர்-ஆனை மேற்கோள் காட்டுவது பெரும்பாலும் பயனளிக்காது. ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் அந்த நூல்களில் ஒன்றையும் படித்திருக்க வாய்ப்பில்லை.
- கிறிஸ்துவின் ஊழியராக, 18 ஆம் நூற்றாண்டின் ஜெர்மன் இறையியலாளர் ஜோஹன் ஆல்பிரெக்ட் பெங்கலின் ஆலோசனையை நினைவில்கொள்வது மிகவும் முக்கியம். அவர் கூறியது: "அறிவு இல்லாமல், அன்பு இல்லாமல், காரணம் இல்லாமல் ஒரு வாதத்தில் ஈடுபட வேண்டாம்." நான் இதில் "ஜெபம் இல்லாமல்" என்று மட்டுமே சேர்க்க விரும்புகிறேன்.