Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 021 (“A Muslim could equally presuppose the truth of the Quran. Unless something outside of the Quran could be used to falsify the Quran, then there would be no way to disprove it. The Christian and the Muslim could only state their beliefs against the other.” (Jürgen Habermas))
This page in: -- Chinese -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian

Previous Chapter -- Next Chapter

11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 3 – ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையின் செயல்முறைகள்
15. முன்ஊகக் கொள்கைக் காப்புவாதத்தைக் குறித்த பொதுவான தப்பெண்ணங்கள்

ஈ) “ஒரு இஸ்லாமியரும் அவ்வாறே குரானின் உண்மையை முன்ஊகிக்கலாம். குரானுக்கு வெளியே இருந்து அது தவறு என்பதை நிரூபிக்க வேறு காரியம் எதுவும் பயன்படுத்தப்படாதவரை இந்நிலையே தொடரும். இந்நிலையில் கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் தங்களுடைய நம்பிக்கையை மற்றவர்களுடைய நம்பிக்கை எதிராக கூறமட்டுமே முடியும்” (Jürgen Habermas)


முன்ஊகக் கிறிஸ்தவ காப்புரை இஸ்லாத்திற்கு முன்பாக நிற்க முடியாது என்று பலர் நம்புகிறார்கள். இவ்வாறு நம்புகிறவர்களில் பலருக்கு இஸ்லாத்தைப் பற்றி நன்றாகத் தெரியாது அல்லது முற்றிலும் தெரியாது என்று சொல்லாம். இஸ்லாத்தின் முன்ஊகங்களை நாம் எடுத்து அவை முஸ்லிம்கள் கிறிஸ்தவத்திற்கு எதிராக முன்வைக்கும் எதிர்ப்புகளை நியாயப்படுத்துகிறதா என்பதைப் பார்ப்போம்.

கீழ்க் காண்பவை முஸ்லிம்களின் முன்ஊகங்கள்:

அ) முஸ்லிம்கள் தனித் தன்மை வாய்ந்த, ஒப்பற்ற, ஒரே இறைவனை நம்புகிறார்கள். அவருக்கு மகனோ அல்லது பங்காளியோ யாரும் இல்லை.
ஆ) “அல்லாஹ் தன்னைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறானோ அல்லது நபிகள் அல்லாஹ்வைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறாரோ அந்த குணாதிசயங்களைத்தான் அல்லாஹ்விற்கு கொடுத்து அவரைப் பற்றி விவரிக்க வேண்டும். அல்லாஹ் தனக்கு எந்த பெயர்களை இட்டுக்கொண்டானோ அல்லது நபிகள் அல்லாஹ்விற்கு என்ன பெயர் இட்டிருக்கிறாரோ அந்த பெயர்களைக் கொண்டுதான் அல்லாஹ்வை விளிக்க வேண்டும்” என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அல்லாஹ்வின் குணாம்சங்களை சரியாக நம்புவது என்பது அவற்றையோ, அவற்றின் பொருளையோ (தாதீல் - ta’teel) மறுதலியாமல், அவற்றிற்கு விளக்கம் கொடுக்காமல் அல்லது அவற்றின் பொருளை (தஹ்றீஃப் - tahreef) மாற்றாமல், அவை என்ன என்றும் எப்படி (தக்யீஃப் - takyeef) என்றும் விளக்காமல் அல்லது படைப்புகளின் குணாம்சங்களை அல்லாஹ்விற்குக் கொடுக்காமல் இருப்பதே என்று முஸ்லிம் அறிஞர்கள் சொல்கிறார்கள் (தம்தீல் - tamtheel). (Al-Othaimeen, Allah’s names and attributes)
இ) “அல்லாஹ்வை நீங்கள் எந்த வகையிலும் சேர்க்கக் கூடாது” (The magazine of the University of Umm-Al-Qura, Vol. 6, p. 123)
ஈ) “எதுவும் அல்லாஹ்வைப் போல் இல்லை. அவன் எல்லாவற்றையும் பார்க்கிறான், எல்லாவற்றையும் கேட்கிறான்” என்று குர்ஆன் சொல்கிறது (நன்ழ்ஹ 42:11).
உ) கடவுள் மனுக்குலத்திற்கு ஆதாரமாக இருப்பதற்காகவும் அவர்களை வழிநடத்துவதற்காகவும் புத்தகங்களை தம்முடைய செய்தியாளர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.
ஊ) எத்தனை தீர்க்கதரிசிகள் இருந்தார்கள் என்ற கேள்வி முஹம்மதுவிடம் கேட்கப்பட்டது. அவர் “124000 என்றும் அவர்களில் ஒரு குழுவினர் 315 பேர்” என்றும் குறிப்பிட்டார். கடவுளிடம் இருந்து புதிய சட்டத்தைக் கொண்டு வருகிறவரே ஒரு செய்தியாளர் (Musnad Ibn Hanbal).
எ) 104 திருமறைகள் வெளிப்படுத்தப்பட்டதாக முஸ்லிம்கள் நம்புகிறார்கள் (al-Fath al-Rabbani – அல்-ஃபாத் அல்-ரபானி, al-Shawkani – அல்-ஷாகானி); இன்னொரு இடத்தில் 315 என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இப்போது, முஸ்லிம்களின் இந்த முன்ஊகங்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அவர்கள் முன்வைக்கும் எதிர்ப்புகளை நியாயப்படுத்துகின்றனவா என்பதைப் பார்ப்போம். பொதுவான முஸ்லிம்கள் கிறிஸ்தவத்திற்கு எதிராக முன்வைக்கும் மறுப்புரைகள் யாவை?

அ) கடவுளின் மனுவுருவாதல்: கடவுள் எப்படி மனிதனாக முடியும்?
ஆ) மூவொருமைக் கோட்பாடு: புரிந்துகொள்வதற்கு கடினமான கோட்பாடாகிய மூவொருமைக் கோட்பாட்டை முஸ்லிம்கள் நிராகரிப்பது, அந்த நம்பிக்கை மூன்று கடவுள்களை நம்புகிறது என்ற குற்றச்சாட்டின் மீது உறுதியாகக் கட்டப்பட்டுள்ளது.
இ) வேதாகமம் திருத்தப்பட்டது: இயேசு, தாவீது மற்றும் மோசே போன்ற தீர்க்கதரிசிகளுக்கு கடவுளிடம் இருந்து நேரடியாக வானத்திலிருந்து இறக்கிக் கொடுக்கப்பட்ட நூல்களை கிறிஸ்தவர்களும் யூதர்களும் திருத்தி எழுதிவிட்டார்கள் என்று முஸ்லிம்களுக்குத் தொடர்ந்து போதிக்கப்படுகிறது. இந்த நிலைப்பாடு உண்மையில் குர்ஆன் தெளிவாக ஆதரிக்காத ஒன்று. ஆயினும் இன்றைய முஸ்லிம்கள் நடுவில் இந்த நம்பிக்கை பொதுவாகக் காணப்படுகிறது, போதிக்கப்படுகிறது.
ஈ) கிறிஸ்துவின் சிலுவை மரணம்: இன்று பரவலாகக் காணப்படும் குர்ஆன் விளக்கத்தின்படி இயேசு சிலுவையில் அறையப்படவில்லை. மேலும், இஸ்லாத்தைப் பொறுத்தவரை அரசியல் மற்றும் இராணுவ மேன்மை என்பது கடவுளுடைய அருள் மற்றும் ஆதரவுக்கான அடையாளங்கள். ஆகவே, கடவுளுடைய நபிகளில் அல்லது செய்தியாளர்களில் ஒருவர் இப்படிப்பட்ட ஈனமான மரணத்தை ஏற்றுக்கொள்வார் என்பது முஸ்லிம்களால் புறக்கணிக்கப்படுகிறது.

இப்போது முஸ்லிம்களின் இந்த முன்ஊகங்களின் அடிப்படையில் அவர்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பொருளுள்ளவையா என்பதைப் பார்ப்போம்.

மனுவுருவாதல்: “மூடனுக்கு அவனுடைய மூடத்தனத்தின்படியே பதில் சொல்வோம்”, அது நம்மை எங்கே இட்டுச் செல்கிறது என்பதைப் பார்ப்போம். நாம் ஏற்கனவே பார்த்தபடி அல்லாஹ்வை நீங்கள் எந்த வகையிலும் வைத்து விளக்க முடியாது (இங்கே வகை என்பது தத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். அது ஒரு பொருளை அனுபவிப்பதற்கு முன்பாக அதன் தோற்றத்தின் தன்மையை பொதுவாக குறிப்பிடும் சொல்லாகும்). மேலும் அது குர்ஆனில் அல்லாஹ் எப்படி விளக்கப்பட்டிருக்கிறாரோ அதைத் தவிர வேறு வழிகளில் அவரை விளக்குவதையும் தடை செய்கிறது – முக்கியமாக – குர்ஆனில் நிராகரிக்கப்பட்டிராவிடில் எந்த குணாம்சத்தையும் நிராகரிக்கக்கூடாது. முஸ்லிம் அறிஞர்கள் பின்வரும் வாக்கியத்தைச் சொல்லும் அளவுக்கு இதை நம்புகிறார்கள்: “உங்கள் மனதில் என்னவெல்லாம் தோன்றுகிறதோ, அதிலிருந்து அல்லாஹ் மாறுபட்டவன்”.

இது அல்லாஹ்வைக் குறித்த அனைத்துப் பேச்சையும் பொருளற்றதாக்குகிறது; மேலும் இது சுய ஒப்பியல் முரண்பாடாக இருக்கிறது. அதாவது அல்லாஹ்வை எந்த வகையை வைத்தும் விளக்கக்கூடாது என்று சொல்லப்படுகிறது. ஆனால் அல்லாஹ் எந்த கலப்பும் இல்லாத, முற்றிலும் ஒருவராக இருக்கும் ஒரு வகையாகவே விளக்கப்படுகிறார். அல்லது அவர் எந்த வகையையும் சேராத ஒரு வகையாக இருக்கிறார். அல்லது அல்லாஹ் விளக்கிக்கூற முடியாத ஒரு உயிராக விளக்கப்பட வேண்டும்.

இஸ்லாத்தின் முன்ஊகங்களின் அடிப்படையில் அல்லாஹ்வை விளக்கும் எந்த வார்த்தையும் உண்மையில் புரிந்துகொள்ளப்பட முடியாதது. ஒருவேளை அல்லாஹ் “அனைத்தையும் கேட்பவன், அனைத்தையும் பார்ப்பவன்” என்று விளக்கப்படுகிறதே அதன் பொருள் என்ன என்று நாம் கேட்டால், அதற்குரிய பதில், அதன் பொருள் “அனைத்தையும் கேட்பவன், அனைத்தையும் பார்ப்பவன்” என்றே சொல்லப்பட வேண்டும். ஆயினும், முஸ்லிம்களைப் பொறுத்தவரை மனித அறிவினால் புரிந்துகொள்ளப்படக் கூடிய எந்த பொருளும் அதற்குப் பொருளாக இருக்க முடியாது. உண்மையில் அவர்களுடைய அறிஞர்கள் கீழ்க் காணுமாறு அதை வலியுறுத்துகிறார்கள்: “மகிமையும் வல்லமையும் நிறைந்த அல்லாஹ் மனிதர்களால் கற்பனை செய்யக்கூடிய புரிந்துகொள்ளக்கூடிய குணாம்சங்களைத் தம்மில் கொண்டிருப்பது இயலாத காரியம், ஏனெனில் அல்லாஹ் நீங்கள் சிந்திக்கக்கூடிய அனைத்துக் காரியங்களில் இருந்தும் வேறுபட்டிருக்கிறான். (Saleh Al al-Sheikh, The Explanation of the Tahawi’s belief, a lecture on Saturday, 13 Thee Al Kaadeh, 1417 H, quoted from the Comprehensive Encyclopaedia on Islam). இது வேறுபாட்டுக் கொள்கை (the doctrine of dissimilarity) என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், அல்லாஹ் இவ்வுலகத்தில் உள்ள எந்த பொருளுக்கும் ஒப்பிடத்தக்கவன் அல்ல என்பதாகும். அப்படி அல்லாஹ் எந்த கற்பனையாலும் விவரிக்கப்பட முடியாதவரெனில், அவரை மனித வார்த்தைகளைக் கொண்டு விவரிக்க முடியாது என்று பொருள். அல்லாஹ்வை நீங்கள் மனித மொழியில் விளக்க முடியாதெனில் குர்ஆன் என்பது என்ன? அது அல்லாஹ்வின் வார்த்தையாகவோ அல்லது அல்லாஹ்வைப் பற்றிய வார்த்தையாகவோ இருக்க முடியாது, ஏனெனில் அல்லாஹ்வை மனித மொழியில் விளக்க முடியாது!

இப்படிப்படிப்பட்ட கொள்கைகள் முஸ்லிம்கள் மனுவுருவாதலுக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை முற்றிலும் பொருளற்றதாக்குகின்றன. ஏன்? இரண்டு காரணங்கள் உண்டு:

1. குர்ஆன் ஒருபோதும் மனுவுருவாதலை மறுதலிக்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை. குர்ஆன்தான் அவர்களுடைய இறுதி அதிகாரமாக இருக்கிற காரணத்தினால் முஸ்லிம்கள் மனுவுருவாதனை மறுக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ முடியாது.
2. குர்ஆன் முழுவதும் அல்லாஹ்வின் “மனித” குணாம்சங்களைப் பற்றி வாசிக்கிறோம். உதாரணமாக, அவருக்கு முகம் இருக்கிறது (55:26-27), கரங்கள் இருக்கின்றன (90:17-19), பக்கம் இருக்கிறது (39:56), கண்கள் அல்ல, ஒரு கண் இருக்கிறது (20:39), அவர் தூதர்களுடன் உயர்ந்த நிலையில் வருகிறார் (89:23). ஹதீஸில் பார்க்கும் போது (இது முகம்மதுவின் பேச்சுக்கள் என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது) அல்லாஹ்விற்கு வீடு இருக்கிறது, அவர் தனது பாதத்தை நரகத்தில் வைக்கிறார், சிரிக்கிறார் என்று வாசிக்கிறோம். முஸ்லிம்கள் இந்த குணாதிசயங்களைப் பற்றிப் பேசுவதில்லை. அது உண்மைதான் ஆனால் அவை எப்படி என்று எங்களுக்குத் தெரியவில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். இவ்வாறு இஸ்லாத்தின் போதனையைக் குறித்த தங்கள் அறியாமையை அவர்கள் ஏற்றுக்கொண்டு, அது இரகசியம் என்று சொல்வார்களானால், நம்மைப் பார்த்து மனுவுருவாதலை விளக்குங்கள் என்று அவர்கள் எப்படிக் கேட்க முடியும்!

வேதாகமம்: முஸ்லிம்களின் இன்னொரு குற்றச்சாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அதாவது, யூதர்களும் கிறிஸ்தவர்களும் வேதாகமத்தைத் திருத்தி எழுதி விட்டார்கள் என்பதே அந்த குற்றச்சாட்டு. ஒரு தறவற்ற வெளிப்பாட்டின் தேவை இருக்கிறது என்பதை முஸ்லிம்கள் அனுமானிக்கிறார்கள். ஒரு கிறிஸ்தவனாக, கடவுளிடம் இருந்து வரும் வெளிப்பாடு நம்முடைய கோரிக்கைகளையும் செயல்களையும் நியாயந்தீர்க்கும் அதிகாரமாக இருப்பதுடன் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளை நினைவுபடுத்துவதாகவும் இருக்கின்றது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் ஒரு முஸ்லிமால் “தவறற்ற வெளிப்பாடு” என்பதைப் புரிந்துகொள்ள முடியுமா? முஸ்லிம் நம்பிக்கையின்படி குர்ஆனுக்கு முன்பாக வெளிப்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒவ்வொரு புத்தகத்தின் மூலக் கையெழுத்துப் பிரதிகளும் நம்மிடம் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்வோம் (104 அல்லது 315 திருமறைகள் குர்ஆனுக்கு முன்பாகக் கொடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது). அப்படியிருந்தால் என்ன நடக்கும்? அது நம்முடைய விவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்து விடுமா? இல்லை. ஒரு போதும் இல்லை. அப்போதும் முஸ்லிம்கள் இவ்வாறு சொல்வார்கள்: “ஆம் இப்போது உங்களிடம் மூலப்பிரதிகள் இருக்கின்றன. ஆனால் குர்ஆன் அவற்றை செல்லாததாக ஆக்கிவிட்டது” என்பார்கள். ஒரு சமயத்திற்குள் அல்லது சமயங்கள் கடந்து ஒரு புதிய வெளிப்பாடு பழைய வெளிப்பாட்டை செல்லாமல் ஆக்கிவிடும் என்ற இந்த இஸ்லாத்தின் கொள்கை “தவற்ற வெளிப்பாடு” என்னும் கொள்கையையே பயனற்றதாக மாற்றி விடுகிறது.

எங்களிடம் குர்ஆன் இருக்கிறது. இதுதான் உண்மையாக வெளிப்பாடு. கிறிஸ்தவர்களாகிய நீங்கள் உங்கள் வேதாகமத்தை இலக்கிய விமர்சனத்திற்கு உட்படுத்தி ஆரம்பத்தில் வேதாகமத்தில் என்ன இருந்தது என்பதைக் கண்டு பிடியுங்கள் என்று முஸ்லிம்கள் நம்மிடத்தில் சொல்வார்கள். ஆனால், ஒரு பக்கம் நம்மிடத்தில் இருக்கின்ற குர்ஆன் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட நிலையில் இருக்கிறதா? ஒருவேளை அப்படி இருந்தாலும் என்ன? இன்னொருவர் இன்னொரு புத்தகத்துடன் வந்து அந்த புத்தகம் குர்ஆனை செல்லாமல் ஆக்கிவிட்டது என்பரே (இவ்வாறு பல குழுக்களால் வரலாற்றில் பல முறை உரிமை கோரப்பட்டிருக்கிறது).

ஏன் முஸ்லிம்கள் குர்ஆன் வெளிப்படுத்தப்பட்டபடியே தங்களிடம் இருக்கின்றது என்று நம்புகிறார்கள் என்பதை கருத்தில் கொள்வதும் முக்கியமானது. கையெழுத்துப் பிரதிகள் நிமித்தமாகவோ அல்லது இலக்கிய விமர்சனத்தின் விளைவாகவோ அவர்கள் அப்படி நம்பாமல், குர்ஆன் அப்படிச் சொல்வதால் நம்புகிறார்கள். “உண்மையில் நாங்கள்தான் குர்ஆனை கீழே அனுப்புகிறோம், நாமே அதற்குக் காவலாளிகளாக இருப்போம்” என்று அல்லாஹ் வாக்களித்தார். (15:9). இதைப் பற்றி சற்று சிந்தித்துப் பார்ப்போம். இஸ்லாத்தின் நம்பிக்கையின்படி அல்லாஹ் குர்ஆனைக் கொடுப்பதற்கு முன்பாக 104 அல்லது 315 வேறுபட்ட நூல்களைக் கொடுத்திருக்கிறார். அந்த புத்தகங்களில் பெரும்பான்மையானவை இப்போது இல்லை. இப்போது இருக்கும் சில புத்தகங்களும் திருத்தப்பட்டிருக்கின்றன. அப்படியானால் இந்த கடைசி புத்தகத்தை நாம் நம்புவதற்கு சரியான காரணம் ஏதேனும் உண்டா? இதே காரியம் இன்னொரு சூழ்நிலையில் சரிவருமா என்று கவனிப்போம். நீங்கள் ஒரு அறுவை சிகிட்சைக்காக மருத்துவரிடம் போகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். மருத்துவர் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று சொல்கிறார், ஏனெனில் இப்போது அவர் உங்களுக்குச் செய்யப்போகும் அறுவை சிகிட்சையை 104 முறை அல்லது 315 முறை செய்திருப்பதாகக் குறிப்பிடுகிறார். அப்போது நீங்கள் அந்த அறுவை சிகிட்சைகளின் முடிவு என்ன என்று நியாயமான கேள்வியைக் கேட்பீர்கள். அவை அனைத்துமே தோல்வியடைந்து விட்டன என்பாராகில், நீங்கள் எவ்வளவு நேரம் அந்த மருத்துவரிடத்தில் இருப்பீர்கள்?

தம்முடைய வெளிப்பாடுகளைக் காப்பாற்றுவதில் இஸ்லாத்தின் அல்லாஹ் 0% வெற்றியுள்ளவராக இருந்தால் நீங்கள் அவரை நம்புவதற்கு எந்த நியாயமும் இல்லை. “பொறுங்கள். அல்லாஹ் குர்ஆனைக் காப்பதாக வாக்களித்திருக்கிறாரே” (15:9) என்று ஒரு முஸ்லிம் நம்மிடத்தில் கேட்கலாம். இதிலுள்ள பிரச்சனை என்ன என்று உங்களுக்கு உடனடியாகத் தெரியும் என்று நினைக்கிறேன். இந்த குறிப்பிட்ட வசனம்கூட பிற்காலத்தில் சேர்க்கப்படவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அனைத்தையும் தாண்டி, நம்மிடத்தில் எந்த கையெழுத்துப் பிரதிகளும் இல்லை என்ற உண்மையின் வெளிச்சத்தில் பார்க்கும்போது இப்போது இருக்கும் வெளிப்பாடுகள் அனைத்தும் திருத்தி எழுதப்பட்டிருக்கிறது என்ற முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி குர்ஆனைப் பொருத்தவரையிலும் இதே தவறு நடைபெற்றிருக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இதைத்தானே நாமும் செய்கிறோம் என்று சிலர் ஒருவேளை கேட்கலாம். வேதாகமம்தான் வேதாகமத்தின் மெய்த்தன்மையை நிறுவுகிறது என்றுதானே நாம் சொல்கிறோம் எனலாம். உண்மை அதுவல்ல! நாம் வேதாகமத்தை வேதாகமத்தினால் நிறுவுவதில்லை. மாறாக, முதலில் ஆதாரம் என்பதைப் பொருளுள்ளதாக்குவதே வேதாகம முன்ஊகங்கள்தான் என்றுதான் நாம் சொல்கிறோம். வேதாகமம் தன்னை நம்ப வேண்டும் என்று கூறுவதால் நீங்கள் வேதாகமத்தை நம்ப வேண்டும் என்று நாம் கூறுவதில்லை. இல்லை. நாம் இரண்டு வெவ்வேறு உலக நோக்குகளை ஆராய்ந்து அவற்றின் போதனைகளை ஒப்பிட்டுப் பார்க்கிறோம். இஸ்லாமிய உலக நோக்கு சுய முரண்பாடு உள்ளதாக தன்னுடைய நியாயத்தையே பேசுகிறது. ஒரு முஸ்லிம் சொல்வது சரியாக இருந்தாலும் அவருடைய வாதம் தோல்வியடையும். ஆனால், கிறிஸ்தவ உலக நோக்கு மட்டுமே சுய-முரண்பாடற்றதும் தன்னுடைய சொந்த முன்ஊகத்தையே அடிப்படையாகக் கொண்டதுமாக இருக்கிறது.

மேலும் குர்ஆன் வேதாகமத்தைப் போல் அல்லாது ஒருபோதும் தன்னை இறுதி அதிகாரமாகக் கோருவதில்லை. முஸ்லிம்கள் உங்களிடம் இப்படிச் சொல்வார்கள்: “குர்ஆனில் இருக்கின்றன இப்படிப்பட்ட அத்தியாயங்களுக்கு ஒத்த அத்தியாயத்தை மக்கள் கொண்டுவர வேண்டும் என்று குர்ஆன் சவால் விடுகிறது, ஆனால் மக்களால் அப்படிக் கொண்டுவர முடியவில்லை,” “குர்ஆன் முழுவதும் விஞ்ஞான ரீதியான அற்புதங்கள் இருக்கின்றன,” “இஸ்லாம் வேகமாக வளர்ந்துவரும் சமயமாகும்,” ர்ழ் “வேதாகமம் முகம்மதுவின் வருகையை முன்னுரைத்திருப்பதால் நீங்கள் முஸ்லிமாக மாற வேண்டும்.” இவை அனைத்தும் குர்ஆன் இறுதி அதிகாரமுள்ளதல்ல என்பதை உண்மையில் ஒத்துக்கொள்வதாகவே இருக்கின்றன:

-- ஏற்கனவே குர்ஆனில் இருக்கின்ற அத்தியாயங்களுக்கு இணையான ஒரு அத்தியாயத்தை உருவாக்க வேண்டும் என்பது குர்ஆனில் மொழியியல் அழகைத்தான் முன்ஊகம் செய்கிறதே தவிர குர்ஆன் இறுதியான அதிகாரம் உடையது என்பது முன்ஊகம் செய்யப்படவில்லை.
-- குர்ஆனில் இருப்பதாகக் கூறப்படும் விஞ்ஞான அற்புதங்கள் என்பவை குர்ஆனுக்கு அல்ல விஞ்ஞானத்திற்கே இறுதி அதிகாரம் இருக்கிறது என்ற முடிவுக்குத்தான் நம்மை இட்டுச் செல்கிறது.
-- தலைகளை எண்ணி அதிக எண்ணிக்கையில் மக்கள் பின்பற்றும் மார்க்கம் என்று கூறும்போது இறுதி அதிகாரம் மக்களிடத்தில் கொடுக்கப்படுகிறது. “அதிகமான மக்கள் எதைத் தெரிவு செய்கிறார்களோ அதுதான் சரியானது” என்று சொல்வதாகிறது. அதுமட்டுமன்றி, பல்வேறு காரியங்களை இறுதி அதிகாரமாக ஒப்புக்கொள்வது, மிகவும் மோசமான தர்க்கவியல் பிழையாகும்.
-- வேதாகமம் முகம்மதுவின் வருகையை முன்னறிவிக்கிறது என்று அவர்கள் கோரும்போதும் குர்ஆன் அல்ல வேதாகமமே இறுதி அதிகாரமுள்ளது என்றே அவர்கள் ஏற்கிறார்கள்.

அவநம்பிக்கையாளர்களுடன் ஒரு கிறிஸ்தவர் பேசும்போது அவர்களுடைய முன்ஊகங்கள் அல்லது அனுமானங்களை கவனமாக ஆராய்ந்து அவர்களுடைய வாதங்கள் நியாயமானதுதானா என்று பார்க்க வேண்டும். நாம் ஏற்கனவே பார்த்தபடி அவநம்பிக்கையாளர்களுக்கும் நமக்கும் இடையில் பொதுவான காரியங்கள் எதுவும் இருக்கக் கூடாது. ஆயினும் நடைமுறையில் பார்க்கும்போது இரு தரப்பும் ஏற்றுக்கொள்வது போல காணப்படும் காரியங்கள் இருக்கின்றன. இந்த காரியங்களை நாம் கவனமாகப் பார்த்து அவற்றை அவர்கள் நம்ப வேண்டுமாயின் கிறிஸ்தவ உலக நோக்கு உண்மையாக இருந்தால் மட்டுமே அது முடியும். இந்த உண்மையை அவர்கள் ஏற்றுக்கொள்ளச் செய்வதே நம்முடைய பணியாகும் (அல்லது அவர்கள் தங்கள் மூடத்தனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்!)

நாம் வெளிப்படுத்தலைப் பற்றி இஸ்லாமியர்களிடம் பேசுவதற்கும் அல்லது இசைக் கச்சேரியைப் பற்றி நாத்திகர்களிடம் பேசுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. முஸ்லிம் ஒருவரிடம் அவருடைய முன்ஊகத்தைக் நம்மிடம் சொல்லும்படி கேட்கலாம். அல்லாஹ்வை எந்த மனித மொழியை வைத்தும் விளக்க முடியாது என்றால் எப்படி அவர் தன்னை வெளிப்படுத்த முடியும் என்று கேட்கலாம். எல்லாம் தற்செயலாக நடைபெறும் அண்டத்தில் இசையும் அழகும் எவ்வாறு விளக்கப்படும் என்று நாத்திகரிடம் நாம் கேட்கலாம். இவ்வாறு நாம் செயல்படும்போது கிறிஸ்தவ கொள்கைக் காப்புவாதம் என்பது அத்துணை கடினமான காரியம் அல்ல என்று கண்டுகொள்வோம். நாம் புதிய தகவல்களைக் கொடுப்பதில்லை. அவநம்பிக்கையாளர் ஏற்கனவே அறிந்திருக்கிற காரியத்தை, கடவுள் அவருக்கு ஏற்கனவே தெரியப்படுத்தியிருக்கிற காரியத்தை அவர் கண்டு பிடிக்கும்படி அல்லது நிதானிக்கும்படி அவருக்கு உதவுகிறோம். நாம் அவர்களை சிலுவையினிடத்தில் வழிநடத்தி அவர்களுக்குக் கடவுள் மனந்திரும்புதலைத் தர வேண்டும் என்று கடவுளிடம் விண்ணஞ் செய்கிறோம். காப்புவாதத்தில் ஈடுபட்டிருக்கும் யாரும் சோர்ந்துபோக வேண்டிய தேவையில்லை என்று இங்கு நான் கேட்டுக்கொள்கிறேன். இங்கு முன்வைக்கப்படும் வாதம் வலிமையானது நியாயமானது, ஆனால் ஏற்றுக்கொள்ள கடினமானது. ஒரு அவநம்பிக்கையாளர் அதை ஏற்றுக்கொண்டால் அவர் மனந்திரும்ப வேண்டும். கிறிஸ்தவம் மட்டுமே ஒரே நியாயமான தெரிவு என்று அவர்கள் ஏற்றுக்கொள்ளும்போது அவர்கள் எப்படிப்பட்ட எதிர்ப்புகளைச் சந்திப்பார்கள் என்பதை நாம் அறிவோம்.

www.Grace-and-Truth.net

Page last modified on April 19, 2023, at 01:04 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)