Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 049 (Conclusion)
This page in: -- Chinese -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian

Previous Chapter

11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 4 – செயலில் ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரை

34. முடிவுரை


பல கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்தவ கொள்கைக் காப்புரை என்பது ஒரு விருப்பமான பாடம் அல்ல. சில வேளைகள் சக நம்பிக்கையாளர்கள் கிறிஸ்தவ காப்புரையாளர்களுக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்குகிறார்கள். வாதப் பிரதி வாதங்களினால் நீங்கள் யாரையும் இரட்சிப்பிற்குள் நடத்திவிட முடியாது என்றும் வேதாகமத்தை நீங்கள் காப்பாற்றத் தேவையில்லை, அதை தன் பணியைச் செய்ய விட்டுவிடுங்கள் என்று என்னிடத்தில் பலர் சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறு மக்கள் பேசுவது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இந்த காரியத்தைக் குறித்த சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் நான் சங்கடப்படுகிறேனா அல்லது காப்புரையைப் பற்றி பேசுவதைவிட காப்புரையில் ஈடுபடுவது அதிக பலனளிக்கும் ஒன்று என்று சங்கடப்படுகிறேனா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. உண்மையில் காப்புரையாளர்கள் கீழ்க்காணும் இரண்டு கூற்றுகளை முழுவதுமாக ஏற்கிறார்கள். முதலாவது, நாம் யாரையும் வாதத்தினால் மீட்கப்பட வைக்க முடியாது. உண்மையில் வாதம் என்பதை வாய்ச்சண்டை என்பது போல பார்த்தால் நாங்கள் உண்மையில் வாதிடவே இல்லை. நாங்கள் வேதாகமம் சொல்கிறபடி எங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையைப் பற்றி எங்களிடம் கேட்கிறவர்களுக்கு நாங்கள் பதில் சொல்கிறோம் (1 பேதுரு 3:15). இது நற்செய்திப் பணியோ அல்லது மனமாற்றப் பணியோ அல்ல. அந்த பணியை பரிசுத்த ஆவியானவர் மட்டுமே செய்ய முடியும். மேலும் நாங்கள் காப்புரையின் மூலம் நம்பிக்கையாளர்களுடைய நம்பிக்கையைத் திடப்படுத்தி, அவர்கள் நம்பிக்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் மறுப்புகளுக்குப் பதிலுரைக்க அவர்களுக்கு உதவுகிறோம்.

இரண்டாவது, அவ்வாறு நாம் காப்புரையில் ஈடுபடுவது முற்றிலும் சரியானது. வேதாகமத்தை நாம் பாதுகாக்க வேண்டிய தேவையில்லை என்பது உண்மைதான்! வேதாகமத்தைப் பாதுகாக்க காப்புரை முயற்சிக்கவில்லை. வேதாகமம் தன்னில்தான் போதுமானதல்ல என்றோ அவநம்பிக்கையாளர்களைச் சந்திப்பதற்குக் கடவுளுக்கு நம்முடைய உதவி தேவை என்பதற்காகவோ நாம் காப்புரையில் ஈடுபடுவதும் இல்லை. நாம் அதைச் செய்வதற்குரிய எளிய ஒரே காரணம் கடவுள் அவ்வாறு செய்யச் சொல்லியிருக்கிறார்.

காப்புரைக்கு எதிராக முன்வைக்கப்படும் மூன்றாவது எதிர்ப்பு நாம் மக்களோடு வாதிடக் கூடாது. அவ்வாறு வாதிடுவது கிறிஸ்தவ தன்மை அல்ல என்பது. இந்த காரியத்தைப் பற்றி நான் இந்த நூலில் முழுவதுமாக பேசியிருக்கிறேன். இருப்பினும் அதைத் திரும்பச் சொல்வது பயனுள்ளதாக இருக்கும். கிறிஸ்தவர்கள் வாதிடக்கூடாது என்பது ஒரு நல்ல அறிவுரை போல தோன்றினாலும் அது முற்றிலும் தவறான கருத்தாகும். இங்கு வாதிடுதல் என்பது விதண்டாவாதத்தையோ வாய்ச்சண்டை பிடிப்பதையோ குறிப்பிடவில்லை. வாதிடுதல் என்றால் நம்முடைய நம்பிக்கைக்குரிய காரணத்தை விளக்குதல். (காப்புரை என்பதை காரண விளக்கம் என்றும் சொல்லலாம்). நாம் சண்டை பண்ணுகிறவர்களாக இருக்கக்கூடாது என்று சொல்கிற அதே பகுதியில் நம்பிக்கையை எதிர்க்கிறவர்களை கண்டிக்க வேண்டும் என்றும் சொல்கிறது. ஒரு நம்பிக்கையாளர் எப்படியிருக்க வேண்டும்: புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு. கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும். எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும், பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.” (2 தீமோத்தேயு 2:23-26).

சாத்தானுடைய தந்திரங்களில் ஒன்று வேதாகம சத்தியங்களின் நடுவில் தன்னுடைய சொந்த விளக்கத்தை சொருகி விடுதல் ஆகும். அது ஏதேன் தோட்டத்திலேயே ஆரம்பித்தது: “தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.?” (ஆதி. 3:1). கிறிஸ்துவிடமும் இதே தந்திரத்தைப் பயன்படுத்தினான்: “நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்” (மத். 4:6). இதுதான் இங்கும் நடைபெறுகிறது. வேதாகமத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வார்த்தைக்கு உலகரீதியான விளக்கம் கொடுக்கப்படுகிறது. அந்த விளக்கத்தின்படி கிறிஸ்தவர்கள் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேதாகம விளக்கம் வெறுக்கப்படுகிறது. கிறிஸ்தவர்கள் அதிக எதிர்ப்பில்லாத பாதையைத் தெரிவு செய்தால் சாத்தானுக்கு மிகுந்த சந்தோஷம்தானே? ஆனால் நாம் நம்முடைய வேதாகமத்தை சரியா அறிந்திருக்க வேண்டும். நாம் வெறுக்கப்படுவோம் என்று ஏற்கனவே வேதாகமம் சொல்லியிருக்கிறது (மத். 10:22, மத். 24:9). நாம் கடவுளின் பிள்ளைகளாக இருப்பதாலேயே வெறுக்கப்படுகிறோம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது: “உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது.” (யோவான் 7:7). கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் கட்டளைகளைப் பின்பற்றுவதை நிறுத்திவிட்டு, உலகத்தில் உள்ள தீமைகளுக்கு எதிராக குரல்கொடுப்பதையும் நிறுத்திவிட்டால் அவர்கள் உலகத்தினால் நேசிக்கப்படுவார்கள், கொண்டாடப்படுவார்கள். அதனால் அவர்கள் ஒவ்வொருவரிடமும் சென்று சண்டை இழுக்க வேண்டும் என்று பொருளல்ல. நாம் உண்மையைக் கண்டு விலகிச் செல்ல முடியாது என்று பொருள்.

நம்பிக்கையாளர்கள் இறைவார்த்தைக்கு எவ்வளவு உண்மையுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதே அவர்களுக்குரிய ஒரே அளவுகோல். ஆகவே உங்களுக்குச் சொல்லப்பட்டதை மட்டும் செய்யுங்கள் என்ற ஆலோசனையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். உங்களில் இருக்கும் நம்பிக்கையைக் குறித்து கேட்பவர்களுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள் (1 பேதுரு 3:15). இதற்கு நீங்கள் ஆயத்தப்பட வேண்டுமானால் இந்த விவரங்களை விளக்கும் ஒரு நல்ல புத்தகத்தை வாசியுங்கள் அல்லது நீங்கள் கடினமாக நினைக்கும் பகுதிகளைக் குறித்து கலந்துரையாடுங்கள். ஒரு மணி நேரம் தொலைக்காட்சிக்கு முன்பாக அல்லது கணனிக்கு முன்பாக செலவிடும் நேரத்தைவிட இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

முடிப்பதற்கு முன்பாக முன்ஊக கிறிஸ்தவ கொள்கைக் காப்புரை எதைச் சொல்லவில்லை என்பதைச் சொல்ல விரும்புகிறேன். அவநம்பிக்கையாளர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்றோ அறிவற்றவர்கள் என்றோ நாங்கள் சொல்ல முன்வரவில்லை. அதற்கு எதிரானதையே சொல்கிறோம்! அவநம்பிக்கையாளர்களின் உலக நோக்கு அவர்கள் செய்யும் காரியத்திற்கு எதிர்மறையாக இருக்கிறது என்றுதான் சொல்கிறோம். அவநம்பிக்கையாளர்கள் கீழ்காணும் அனுமானங்களைப் பெற்றிருக்கிறார்கள்: மனிதர்களின் மாண்பு, பகுத்தறிவு, சத்தியத்தை அறிதல், ஒழுக்க வாழ்வு, இயற்கை மற்றும் இசை போன்றவற்றில் உள்ள அழகு போன்ற பல்வேறு காரியங்களை அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் அவர்களுடைய உலக நோக்கு இவை அனைத்துக்கும் எதிராகச் செல்கிறது! நாம் அவநம்பிக்கையாளர்களிடம் கலந்துரையாட வரும்போது அவர்களுடைய உலக நோக்கின் சில குறிப்பிட்ட பகுதிகளைக் கொண்டு வருகிறோம். கிறிஸ்தவராக, ஒரு பொருளாக இராத, அனைத்தையும் அறிந்த, அண்டத்தைப் படைத்துப் பாதுகாக்கிற, மனிதனைத் தம்முடைய சாயலில் படைத்த எல்லாம் வல்ல ஏகாதிபத்திய கடவுளைக் குறித்த நம்பிக்கைகள் போன்றவை நம்முடைய உலக நோக்கின் முக்கிய பகுதிகளாக இருக்கின்றன. அவநம்பிக்கையாளர்களுடைய உலக நோக்கின் முக்கிய பகுதிகள் அணுக்கள், வெளி, உலகத்தைப் படைத்த ஆள் தன்மையற்ற சக்தி, அண்டத்திற்குப் பின்னால் இருக்கும் அறியப்படாத ஒன்று போன்ற காரியங்கள் ஆகும். இரு சாராரும் ஒரே உலகத்தில் வாழ்வதால் ஒரே மெய்மையைத்தான் எதிர்ககொள்ளகிறார்கள். ஆனால் கிறிஸ்தவ உலக நோக்கு மெய்மையைச் சரியாகப் புரிந்துகொண்டு விளக்குகிறது. கடவுளின் தன்மையை பிரதிபலிக்கும் ஒரு ஒழுக்கவிதியை நாம் நம்புகிறோம். கடவுள் இருக்கிறார் என்று நாம் நம்புவதால் இறுதியான அதிகாரம் ஒன்றிருக்கிறது என்று நம்புகிறோம். அவர் அனைத்தையும் அறிந்தவராகவும், நாம் வாழ்கின்ற உலகத்தைக் குறித்த சத்தியத்தை வெளிப்படுத்தியிருப்பதாலும், அவர் ஒருபோதும் பொய் சொல்லமாட்டார், தம்மையே மறுதலிக்க மாட்டார் என்பதாலும் அவரே அந்த இறுதி அதிகாரமாக இருக்கிறார் என்றும் நாம் நம்புகிறோம். ஆனால், ஒரு அவநம்பிக்கையாளர் அணுக்களால் ஆன உலகத்திலிருந்து, ஆள் தன்மையற்ற சக்தியிடமிருந்து அல்லது அறியப்படாத ஒன்றிடமிருந்து அவர் எந்த ஒழுக்கத்தைப் பெற்றுக்கொள்வார்?

அவநம்பிக்கையாளர்கள் ஒழுக்கமுள்ளவர்களாகவும், பகுத்தறிவுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். அவர்கள் அப்படியிருக்கிறார்கள் என்றும் அதே நேரத்தில் அவர்களால் அப்படியிருக்க முடியாது என்றும் நமக்குத் தெரியும். ஏனெனில் அவர்கள் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறார்கள் கடவுளை அடித்தளமாகக் கொள்ளாமல் அவர்களால் எதையும் செய்ய முடியாது. நிச்சயமாக அவர்கள் இதை மறுதலித்து, “உங்களுடைய உலக நோக்கை நாங்கள் நம்புவதில்லை. ஆனாலும் இந்த காரியங்களை நாங்கள் செய்கிறோம்” என்று அவர்கள் சொல்வார்கள். அவர்கள் சொல்ல மாட்டார்கள் என்று நான் சொல்லவில்லை. அவர்கள் தாங்கள் செய்யும் காரியங்களை தங்களுடைய உலக நோக்குக்கு ஒத்து அவர்கள் செய்வதில்லை என்றும் அவர்களுடைய உள்ளான மனதில் அவர்கள் கடவுளை அறிந்திருக்கிறார்கள் என்றும் அவரிடத்தில் இருந்து அவர்கள் தப்பி ஓடுகிறார்கள் என்றும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்றும் சொல்கிறேன். அவர்கள் தங்களையே ஏமாற்றிக்கொண்டு கடவுள் இல்லை என்று தாங்கள் நம்புவதாகச் சொல்லலாம். ஆனால், அவர்கள் அந்த நம்பிக்கையில் முரண்படாமல் அவர்களால் வாழ முடியாது.

அவநம்பிக்கையாளர்களுக்கு இரண்டு இறுதி புகலிடம்தான் இருக்கின்றன. முதலாவது, அவர்கள் “நீங்கள் இதுவரை கையாளாத எங்கள் உலக நோக்கின் இன்னின்ன காரியங்களைக் குறித்து நீங்கள் என்ன் சொல்கிறீர்கள்?” என்று கேட்கலாம். அடுத்து, இரண்டாவதாக, “எங்களுக்கு உங்கள் கடவுள் தேவையில்லை. அதன் விலை மூடத்தனமாக இருந்தாலும் அதை நாங்கள் மகிழ்வோடு செலுத்துகிறோம்” என்று அவர்கள் சொல்லலாம். முதலாவதில் அவர்கள் தங்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டு தாங்கள் தப்பிக்க ஏதாவது வழியிருக்கிறதா என்று கற்பனையான ஒரு உலக நோக்கை எதிர்பார்த்து ஓடுகிறார்கள். வெளிப்படுத்தின விசேஷத்தில் இப்படிப்பட்ட ஒரு காட்சியை நாம் வாசிக்கிறோம்: “பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;!” (வெளிப்படுத்தல் 6:16). இரண்டாவதைப் பொறுத்தமட்டில், அவர்கள் நிச்சயமாகவே கடவுளுக்குத் தங்களை ஒப்படைப்பதைவிட மூடத்தனத்தை ஏற்றுக்கொள்கிறார்களா என்பதைத் தெளிவாக நம்மிடத்தில் சொல்லும்படி கேட்க வேண்டும். அவர்கள் மூடத்தனத்தை அணைத்துக்கொள்வார்களானால் அவர்களுடைய தெரிவின்படி முரண்பாடு அனுமதிக்கப்பட்டுவிட்டது. ஆகவே அவர்கள் ஒரே நேரத்தில் மூடத்தனத்தை அரவணைக்கிறார்கள், புறம் தள்ளுகிறார்கள்! இது மிகப் பெரிய பயித்தியக்காரத் தனமாக தெரியலாம். ஆனால் கடவுள் பைத்தியமாகத் தோன்றுகிறவர்களையும் சந்திக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள் (மத். 17:14-18).

www.Grace-and-Truth.net

Page last modified on April 13, 2023, at 02:37 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)