Home -- Tamil -- 08. Good News -- 12 Is the Trinity a lie?
Previous lesson -- Next lesson
08. இஸ்லாமியருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்
12 - இறைவனுடைய திரியேகத்துவம் ஒரு பொய்யா?
சவால்: கிறிஸ்தவர்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய இறைவனை நம்புகிறார்கள். ஆனால் நற்செய்தியின் இந்தத் திரித்துவ இறைவனை முஸ்லிம்கள் குரானின் அடிப்படையில் தீவிரமான எதிர்க்கிறார்கள். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் இந்தத் திரியேத்துவம் என்பது ஒரு பொய்யா? குரான் கிறிஸ்தவர்களுடைய கூற்றுப்படியான திரியேகத்துவத்தை நிராகரிக்கிறதா?
பதில்: பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய இறைவனைக் குறித்த கிறிஸ்தவ விசுவாசத்தை மறுதலிக்கும் முப்பதிற்கும் மேற்பட்ட பகுதிகள் குரானில் காணப்படுகின்றன. அவற்றின் போதனைகளை நாம் 13 வாக்கியங்களில் சுருக்கிக் கூறலாம். ஆயினும் அவற்றில் எதுவும் கிறிஸ்தவ திரித்துவத்தின் போதனைகளைப் பற்றி சரியான எதையும் மறுதலிப்பதாக இல்லை.
1. மற்ற உயிரினங்கள் எதையும் இறைவனோடு இணைவைப்பதற்கு மனிதர்களுக்கு அதிகாரம் இல்லை. மற்ற உயிர்களை (சர்க்) இறைவனோடு சேர்த்தல் அல்லது இணைவைத்தலைக் குறித்த குற்றச்சாட்டு குரானில் அடிக்கடி கூறப்படுகிறது. கீழ்க்காணும் கூற்று அவற்றில் ஒன்றாகும்: “…எனவே, அவர்கள் (அவனுக்கு) இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிகவும் உயர்ந்தவன்” (சுரா அல் முஃமினூன் 23:92). இந்தக் கட்டளை மக்கள் மற்ற உயிரினங்களை இறைவனுக்கு இணையாக வைத்து வழிபடுவதைத் தடைசெய்கிறது. கிறிஸ்தவர்களும் அத்தகு செய்கையை முற்றிலும் நிராகரிக்கிறார்கள். குமாரனும், பரிசுத்த ஆவியானவரும் பிதாவாகிய இறைவனுக்கு வேறுபட்ட பிற உயிர்கள் அல்ல, அவர்கள் இறைவனோடு ஒன்றாயிருக்கிறார்கள்.
2. இறைவனைத் தவிர எந்த மனிதனும் இறைவனாக முடியாது. “இன்னும், அவர்களில் எவரேனும் (அல்லாஹ்வாகிய) அவனன்றி நிச்சயமாக நான்தான் இறைவன்” என்று கூறுவாரேயானால், அத்தகையவர்களுக்கு நாம் நரகத்தையே கூலியாகக் கொடுப்போம்” (சுரா அல் அன்பியா 21:29). கிறிஸ்தவர்களும் இதை விசுவாசிக்கிறார்கள். எந்தவொரு மனிதனோ அல்லது தேவதூதுவனோ “நான்தான் இறைவன்” என்று சொல்ல முடியாது. காரணம் அவர்கள் அனைவரும் விழுந்துபோன படைப்புகள்.
3. மூன்று தெய்வங்கள் அல்ல, ஒரே இறைவன். “…இன்னும் (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் – இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக்கொள்ளுங்கள்; இது உங்களுக்கு நன்மையாகும் - நிச்சயமாக அல்லாஹ் ஒரே இறைவன்தான்.” (சுரா அன்னிஸôவு 4:171). இதையும் கிறிஸ்தவர்கள் விசுவாசித்து அறிக்கை செய்கிறார்கள். கிறிஸ்தவர்கள் மூன்று தனித்தனி தெய்வங்களை நம்பவில்லை. அவர்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாயிருக்கிற ஒரே இறைவனையே வணங்குகிறார்கள்.
4. இறைவன் மூன்று பேரில் ஒருவரல்ல. “நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் நிராகரிப்பவர்களாக ஆகிவிட்டார்கள்;..” (சுரா அல் மாயிதா 5:73). இதுவும் கிறிஸ்தவர்களால் உறுதிசெய்யப்படுகிற ஒரு விசுவாசம்தான். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் மூன்று தெய்வங்களில் இறைவன் ஒருவரல்ல. மாறாக பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய ஒரே இறைவன் தனிச்சிறப்புள்ள இறைவனாயிருக்கிறார்.
5. கிறிஸ்து இறைவன் அல்ல. “எவர்கள் நிச்சயமாக மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸô)தான் அல்லாஹ் என்று கூறுகிறார்களோ, அத்தகையோர் திட்டமாக (அல்லாஹ்வை) நிராகரித்துவிட்டனர்.” (சுரா அல் மாயிதா 5:17, 72). “கிறிஸ்துவைத் தவிர இறைவன் ஒருவரும் இல்லை. நாங்கள் அவருக்கு எங்களைச் சரணாகதியாக்குகிறோம்” என்று எந்தக் கிறிஸ்தவனும் சொல்ல மாட்டான். மாறாக, அவர்களும் கிறிஸ்து மாம்சத்தில் வந்த இறைவனுடைய வார்த்தை என்றே விசுவாசிக்கிறார்கள்.
6. பிறந்த ஒருவரை (வலாத்) அல்லாஹ் தன்னுடன் சேர்த்துக்கொள்ளவில்லை. இந்தக் கூற்று குரானில் 13 முறை இடம் பெறுகிறது. உதாரணமாக : “இன்னும் கூறுகிறார்கள்: அல்லாஹ் ஒரு குமாரனை (வலாத்) ஏற்படுத்திக்கொண்டான் என்று… (சுரா அல் பகரா 2:116 மேலும் 10:68; 17:111; 18:4; 19:35; 19:88-92 (மூன்று முறை); 21:26; 23:91; 25:2; 39:4 மற்றும் 72:3). கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களைப் போலவே ஒரு உலக தகப்பனால் கருவுருவாகி, அவனுடைய மனைவியினால் இயற்கையான முறையில் பெற்றெடுக்கபட்ட (வலாத்) ஒரு மகனை இறைவன் தம்முடன் சேர்த்துக்கொண்டார் என்று நம்புவதில்லை. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய இறைவன் வரலாற்றின் ஒரு காலப்பகுதியில் ஒன்றாக இணைந்தவர்கள் அல்ல. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய இறைவன் நித்திய காலமாக ஒன்றான மெய் இறைவனாக தனித்தன்மையுடன் இருந்து வருகிறார். மனிதனாகப் பிறந்த ஒருவரை பிதா தன்னுடன் இறைவனாகச் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனால் பிதாவுடன் நித்திய காலமாக வாழ்ந்த குமாரன் கன்னியாகிய மர்யமுடைய வயிற்றில் பிறந்தபோது மனித வடிவில் பிறந்தார் (வலாத்).
7. மனிதனுக்குள்ள பாலின வேறுபாடு இறைவனிடத்தில் கிடையாது. “அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன்; அவனுக்கு மனைவி எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளைகள் இருக்க முடியும்?..” (சுரா அல் ஆன்அம் 6:101 மற்றும் 5:116-ஐயும் பார்க்க). கிறிஸ்தவர்கள் இதையும் புறக்கணிக்கிறார்கள். இவ்வுலகிலுள்ள ஒரு பெண்ணிடம் உறவுகொண்டு பிள்ளையைப் பெறும்படியாக இறைவன் ஆணாக மாறவில்லை. மாறாக, குமாரன் பிதாவிடமிருந்து சரீரப்பிரகாரமாக வராமல், ஆவிக்குரிய பிரகாரமாக நேரடியாக வந்தார். பரிசுத்த ஆவியானவருடன் குமாரன் பிதாவோடு ஒன்றாயிருக்கிறார். இந்த நித்திய குமாரன் கன்னி மர்யமிடத்தில் பிறந்ததன் மூலமாக மனிதனானார்.
8. இறைவன் பிள்ளை பெறவில்லை. “அவன் (எவரையும்) பெறவில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.” (சுரா அல் இஃக்லாஸ் 112:3). குரான் இந்தக் கூற்றை பாலின ரீதியாக முன்வைக்கிறது. இறைவனாகிய தாயிடமிருந்து கிறிஸ்து பாலியல் ரீதியாகப் பிறந்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புவதில்லை. மாறாக, குமாரன் பிதாவினிடத்திலிருந்து வரும் ஆவிக்குரிய சந்ததியாக, முற்றிலும் அவரோடு ஒன்றாயிருக்கிறார்.
9. இறைவன் பிறக்கவில்லை. “அவன் (எவரையும்) பெறவில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.” (சுரா அல் இஃக்லாஸ் 112:3). அதே காரியம் தான் இங்கும் கூறப்பட வேண்டும். குமாரன் இறைவனைத் தாயாகக் கொண்டு இயற்கையாகப் பிறப்பதுபோல பாலின ரீதியாகப் பிறக்கவில்லை. அவர் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டுவரும் நித்திய குமாரனாகவும் தனித்துவம் வாய்ந்தவராகவும் இருக்கிறார். கன்னியாகிய மர்யம் அவரைப் பெற்றெடுத்தபோது அவர் மாம்சத்தில் வெளிப்பட்டார்.
10. இறைவனுக்குப் பெற்றெடுத்த பிள்ளை (வலாத்) இல்லை. “நபியே! அளவற்ற அருளாளனுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால் (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாயிருந்திருப்பேன்.” (சுரா அஜ் ஜுக்ருஃப் 43:81 மற்றும் சுரா 4:171ஈ). இந்த இடத்திலும் ஒரு மனைவியின் மூலமாக பாலியல் ரீதியாகப் பிறப்பதைப் பற்றியே குரான் பேசுகிறது. கிறிஸ்தவர்களும் இதை விசுவாசிக்கிறார்கள். அனைத்து மனிதர்களும் இறைவனுக்குரியவர்கள். இந்தவகையில் இறைவன் அவர்களைப் பெற்றிருக்கிறார். ஆனால் அவர்களில் ஒருவரும் பாலியல் ரீதியான பிறப்பின் மூலமாக தெய்வீகத் தன்மையுடையவர்கள் அல்ல.
11. கிறிஸ்து இறைவனுடைய குமாரன் (இபின்) அல்ல. “…கிறிஸ்தவர்கள் (ஈ ஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் (இபின்) என்று கூறுகிறார்கள், இது அவர்கள் தங்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; (இவர்களுக்கு) முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! அவர்கள் எவ்வளவு முறைகேடானவர்கள்” (சுரா அத் தவ்பா 9:30). இந்த இடத்தில் குரான் மொழியளவிலாவது கிறிஸ்தவர்களுடைய விசுவாசத்திற்கு நெருங்கி வருகிறது. கிறிஸ்து இறைவனுடைய மகன் என்று புதிய ஏற்பாட்டில் நேரடியாக 43 முறையும் மறைமுகமாக 25 முறையும் அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் பாலியல் தொடர்பற்ற நிலையில் கிறிஸ்துவின் தெய்வீக குமாரத்துவத்தை முஸ்லிம்கள் ஒருபோதும் புரிந்துகொள்வதில்லை. இந்த வசனம்கூட கிறிஸ்து பிதாவின் பாலியல் ரீதியான மகனல்ல, ஆவிக்குரிய மகன் என்ற உண்மையை அறிந்துகொள்ளத் தவறுகிறது.
12. மனிதர்கள் இறைவனுடைய மகன்கள் அல்ல. “… யூதர்களும், கிறிஸ்தவர்களும், “நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் (அப்னா-இது இபினுடைய பன்மைப் பதமாகும்); அவனுடைய நேசர்கள்” என்று கூறுகிறார்கள்; அப்படியாயின், உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைசெய்கிறான்? அப்படியல்ல! நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள்தாம்!” (சுரா அல் மாயிதா 5:18). இறைமகனாகிய இயேசுவைக் குறித்து மேலே சொல்லப்பட்ட அதே காரியத்தைத்தான் இதிலும் சொல்ல வேண்டியுள்ளது. கிறிஸ்தவர்கள் தாங்கள் இறைவனுடைய பாலியல் ரீதியான பிள்ளைகள் என்று ஒருபோதும் தங்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை. ஆனால் அப்படிப்பட்ட சிந்தனையில்தான் இந்த வசனம் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் இறைவனுடைய தெய்வீக ஐக்கியத்திறகுள் வரவேற்கப்படும் ஆவிக்குரிய பிள்ளைகளாகவே அவர்கள் இருக்கிறார்கள்.
13. கிறிஸ்து இறைவனுக்குப் பதிலான ஆண்டவர் அல்ல. “அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிமார்களையும் (ஆ பார் - ஹட்க்ஷஹழ்), தம் சந்நியாசிகளையும், மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக ஆக்கிக்கொண்டனர்; ஆனால், அவர்களோ ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளைபெற்றிருக்கிறார்கள்;” (சுரா அல் தவ்பா 9:31 மேலும் சுரா 7:111-ஐயும் காண்க). கிறிஸ்து அல்லாஹ்வின் இடத்தை எடுத்துக்கொண்ட ஆண்டவர் என்று கிறிஸ்தவர்கள் நம்புவதில்லை. அவர் நித்திய காலமாக பிதாவோடும் பரிசுத்த ஆவியானவரோடும் ஒன்றாயிருப்பதால் இறைவனாயிருக்கிறார்.
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய இறைவனைக் குறித்த கிறிஸ்தவர்களுடைய நம்பிக்கையை மறுதலிப்பதைப் போல காணப்படும் மேற்கண்ட குரான் பகுதிகளோடு, கிறிஸ்தவர்களின் திரித்துவ விசுவாசத்தை உறுதிசெய்யும் சில பகுதிகளும் குரானில் இருக்கின்றன.
1. அல்லாஹ் கிறிஸ்துவை பரிசுத்த ஆவியானவரினால் உறுதிப்படுத்தியிருக்கிறார்: “இன்னும் மர்யமின் குமாரர் ஈஸôவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் (அதாவது அற்புதங்கள்) கொடுத்து, ரூஹுல் குதுஸ் (பரிசுத்த ஆவியின்) மூலம் அவரை நாம் பெலப்படுத்தினோம்” (சுரா அல் பகரா 2:87, 253; மேலும் சுரா 5:110-ல் கிறிஸ்துவின் அற்புதங்களில் சில கொடுக்கப்பட்டுள்ளது). மர்யமுடைய மகன் அற்புதங்களைச் செய்யும்படி பரிசுத்த ஆவியினால் அவரை உறுதிப்படுத்தினார். இங்கு இறைவனும், கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியானவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவதைப் பார்க்கிறோம். இவ்வாறு செயல்படும் திரித்துவ இறைவனைத்தான் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள்.
2. கிறிஸ்து அல்லாஹ்வினிடத்திலிருந்து வரும் ஆவி. “நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸô மஸீஹ் அல்லாஹ்வின் தூதர்தான்; அவர் மர்யமிடத்தில் போடப்பட்ட வார்த்தை, அல்லாஹ்விடமிருந்து வரும் ஆவி…” (சுரா அன்னிஸôவு 4:171 மற்றும் சுரா 21:91; 66:12 ஆகியவற்றையும் காணவும்). இங்கு குரான் இறைவனும் கிறிஸ்துவும் ஆவியானவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவதைப் பற்றிப் பேசுவதுடன், இறைவனுக்கும், அவருடைய ஆவியானவருக்கும், கிறிஸ்துவுக்கும் இடையிலுள்ள ஐக்கியத்தைப் பற்றியும் பேசுகிறது. இது திரித்துவ இறைவனைக் குறித்த கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படையில் மட்டுமே புரிந்துகொள்ளப்பட முடியும்.
துக்க செய்தி: திரியேகத்துவ இறைவனைக் குறித்த சத்தியம் பொய் என்று முஸ்லிம்கள் நம்பவேண்டிய அவசியம் இல்லை. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரைக் குறித்த நற்செய்தியின் வெளிப்பாட்டை குரான் உண்மையில் நிராகரிப்பதில்லை.
நல்ல செய்தி: குரானுடைய போதனைகளின் அடிப்படையில் கிறிஸ்துவிலும் கிறிஸ்துவுடனும் இறைவன் வாழ்கிறார் என்றும், அவர் ஆவிக்குரிய திரியேக நபராக இருக்கிறார் என்றும் முஸ்லிம்கள் நம்பலாம். ஆகவே கிறிஸ்து அற்புதங்களைச் செய்தார் (படைத்தல், மரித்தோரை உயிரோடு எழுப்புதல் – சுரா 3:49); இறைவனுடைய பெயர்களைக் கொண்டிருக்கிறார் (இறைவனுடைய வார்த்தை – சுரா 3:45; இறைவனுடைய ஆவியானவர் – 4:171).
சாட்சி: என்னுடைய பெயர் உதுமான், என்னுடைய மனைவியின் பெயர் மொதீனா. நாங்கள் வங்கதேசத்தின் எல்லைகளுக்கு அருகான இந்தியாவின் வடக்கு மாநிலத்தில் வாழ்கிறோம். நாங்கள் இருவரும் முஸ்லிம்களாக இருந்தோம். நான் ஒரு மீனவன். அதோடு நானும் என்னுடைய மனைவியும் சேர்ந்து சிறிதளவு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு நாள் நானும் பதினாறு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது மிகப்பெரிய புயல் காற்று வீசியது. நாங்கள் நடுக்கடலில், ஆபத்தில் சிக்கிக்கொண்டிருந்தோம். அப்போது அந்தப் படகில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது இந்துக்களும் இருந்த காரணத்தினால், அவரவர் தங்கள் தெய்வங்களை நோக்கி வேண்டிக்கொண்டார்கள். அத்தருணத்தில் திருமதி. அன்வாரா சொல்லியிருந்த ஒரு நற்செய்தியுள்ள கதை எனக்கு நினைவுக்கு வந்தது. அது கிறிஸ்து புயலை அமைதியாக்குவதைப் பற்றிய கதையாகும். என்னுடன் இருந்தவர்களும் கிறிஸ்துவிடம் வேண்டிக்கொள்ள வேண்டும் என்று நான் அவர்களை உற்சாகப்படுத்தினேன். நாங்கள் அனைவரும் கிறிஸ்துவிடம் பிரார்த்தனை செய்தோம். புயல் அடங்கி அமைதியானது. நான் வீடு திரும்பியபோது கடலில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை திருமதி. அன்வாராவிடம் எடுத்துக் சொன்னேன். அந்த ஆழத்தில் கிறிஸ்து எவ்வாறு என்னுடைய உயிரைக் காத்தார் என்று விளக்கினேன். என்னுடைய பாவங்களை அறிக்கை செய்து, திருச்சபைக்குச் சென்று திருமுழுக்குப் பெற்றுக்கொண்டேன். அதன் பிறகு கிறிஸ்துவிலுள்ள என்னுடைய விசுவாசத்திற்கு நான் சாட்சிபகர்ந்தேன். ஏற்கனவே இரகசியமாக கிறிஸ்துவைப் பின்பற்றி வந்த என்னுடைய மனைவி, நான் கிறிஸ்துவை அறிக்கையிட்டபோது, தைரியமாக முன்வந்து திருமுழுக்குப் பெற்றுக்கொண்டார். இன்று நாங்கள் ஒழுங்காக திருச்சபைக்குச் சென்று, புயலில் என்னைக் காத்த கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்திற்கு சாட்சிபகர்ந்து வருகிறேன்.
விண்ணப்பம்: உண்மையும் நேர்மையுமுள்ள இறைவனே, உம்முடைய மகிமையான நாமத்தைத் துதிக்கிறோம். கிறிஸ்துவோடும் ஆவியானவரோடுமுள்ள முழுமையான ஐக்கியத்தில் நீர் அற்புதங்களைச் செய்தவராகவும் இன்றும் அற்புதங்களைச் செய்கிறவராகவும் இருக்கிறபடியால் உமக்கு நன்றி. மனிதர்களாகிய எங்களுக்கு உதவி செய்வதற்காக மட்டுமல்ல, உம்மை எங்களுக்கு வெளிப்படுத்துவதற்காகவும் நீர் அற்புதங்களைச் செய்கிறபடியால் உமக்கு நன்றி. நீர் இருக்கிற வண்ணமாகவே நான் உம்மைப் பெற்றுக்கொள்ளும்படி என் காதுகளையும் இதயத்தையும் திறந்தருளும்.
கேள்விகள்: குரான் நிராகரிக்கும் மூன்று கடவுள் வழிபாட்டிற்கும் நற்செய்தியின் வெளிப்பாடாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய திரியேக இறைவனுடைய வெளிப்பாட்டிற்கும் இடையிலுள்ள வித்தியாசம் என்ன? குரானிலுள்ள எந்த பகுதிகள் கிறிஸ்தவ திரியேகத்துவ விசுவாசத்தை உறுதிசெய்கிறது?
மனப்பாடம்: ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (மத்தேயு 28:19-20 - கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு கூறிய வார்த்தைகள்).