1. கிறிஸ்தவ கொள்கைக் காப்புரை என்பது என்ன? கிறிஸ்தவ கொள்கைக் காப்புரை என்பது எதுவல்ல?
கிறிஸ்தவ கொள்கைக் காப்புரை என்பது கிறிஸ்தவ கல்வியில் ஒரு துறையாகும். இது விவிலியம் “விடையளித்தல்” (“ἀπολογία”) என்று அழைக்கும் பணியாகிய கிறிஸ்தவ நம்பிக்கைக்கு காரண விளக்கமளித்தலைக் குறிக்கிறது. இது “நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்” என்று கேட்பதைக் குறிக்கவில்லை (ஆங்கிலத்தில் காப்புரையைக் குறிக்கும்படி பயன்படுத்தப்படும் சொல் (apologetics) மன்னிப்புக் கேட்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லுக்கு (apologize) இணையாக இருக்கிறது. ஆனால் இரண்டும் ஒன்றல்ல). இதைப் பேதுரு இவ்வாறு விளக்குகிறார்: “நீங்கள் எதிர்நோக்கியிருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க எப்போதும் ஆயத்தமாயிருங்கள்” (1 பேதுரு 3:15).
முன்ஊகக் கிறிஸ்தவக் கொள்கைக் காப்புரையைக் குறித்து நான்கு விரிவுரைகளை வழங்கும் வண்ணம் இந்த குறிப்புகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. முதலாவது, இந்த பாடத்தைக் குறித்த பொதுவான அறிமுகம்; இரண்டாவது, முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையைச் செய்யும் முறை; மூன்று மற்றும் நான்காவது விரிவுரைகள் முரண்பட்ட உலகநோக்குகளை நாம் எப்படிக் கையாள்வது என்பதைப் பற்றிப் பேசுகின்றன. ஆயினும் இந்த குறிப்புகள் அந்தந்தப் பகுதிகளில் அந்தந்த காரியங்களை மட்டும் பேசாமல் ஒரு ஒருங்கிணைந்த முறையில் இந்த தலைப்புகளின் கீழ் விவாதிக்கின்றன.
நாம் இன்னும் முன்னேறிச் செல்வதற்கு முன்பாக நாம் என்ன பேசுகிறோம் என்பதை வரையறுத்து விளக்குவதன் மூலமாக நம்முடைய பாடத்தை ஆரம்பிக்கலாம். சொல்லாடல்களை வரையறை செய்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் காப்புரையில் தனி முக்கியத்துவம் அதற்குக் கொடுக்கப்பட வேண்டியுள்ளது. நாம் சொல்லாடல்களின் பொருளை புரிந்துகொண்டுவிட்டால் பாடப்பொருள் அத்துணை கடினமாக இருக்காது.
கிறிஸ்தவத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே கிறிஸ்தவர்கள் தங்கள் கொள்கைகளுக்கு காப்புரை வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். நமக்காக வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் முதல் காப்புரை நிகழ்வை நாம் மத்தேயு 22-ம் அத்தியாயத்தில் வாசிக்கிறோம். இங்கு இயேசு தம்முடைய போதனைகளின் உண்மைத் தன்மைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பல்வேறு தாக்குதல்களுக்குப் பதிலுரைப்பதைப் பார்க்கிறோம். பரிசேயர் அவரை வார்த்தையில் அகப்படுத்தும்படி முயற்சிப்பதைப் பார்க்கிறோம் (வ.15), பின்பு சதுசேயர்களும் அதையே செய்கிறார்கள் (வ. 23), இறுதியில் வேதபாரகர் தங்கள் பங்கிற்கு கேள்வி எழுப்புகிறார்கள் (வ. 35). இத்தருணத்தில் இயேசு அவர்களைத் தாக்கும் விதமாக அவர்களிடம் மேசியாவைப் பற்றிய ஒரு கேள்வியைக் கேட்கிறார்: “கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய மகன்?”(மத்தேயு 22:42). இந்த அதிகாரம் ஒரு வல்லமையான வசனத்துடன் முடிவடைகிறது: “அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.” (மத்தேயு 22:46)
இந்த அதிகாரம் கிறிஸ்தவக் கொள்கைக் காப்புரை என்ன என்பதையும், எது காப்புரையல்ல என்பதையும் காண்பிப்பதன் மூலமாக கிறிஸ்தவக் கொள்கைக் காப்புரைக்கான தெளிவான உதாரணமாக விளங்குகிறது. இங்கு இயேசு கேள்விகளுக்கு பணிவாகவும், நியாயமாகவும், துல்லியமாகவும், மறுக்க முடியாத முறையிலும் பதிலளித்து தம்முடைய எதிராளிகள் மீது பாரத்தை ஏற்றுகிறார். இயேசுவின் பதில்கள் என்ன விளைவை ஏற்படுத்தியது என்பது கவனிக்கத்தக்கது: அதற்குப் பிறகு அவர்கள் அவரோடு பேசத்துணியவில்லை. அது அவர்கள் கேள்விகளுக்கு பதில் தேடுவதை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. அவர்கள் பதில்களை உண்மையில் தேடியிருந்தால் அவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்திருப்பார்கள்! அவர்கள் இறுதியாகத் தங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதிலுரைக்கக்கூடிய ஒருவரைக் கண்டுகொண்டார்கள்! ஆனால் அது அவர்களுடைய நோக்கம் அல்ல என்பதை நாம் அறிவோம்.
இதில் பல்வேறு காரியங்கள் இருந்தாலும் இயேசு என்ன செய்யவில்லை என்பது நமக்கு அதிக போதனையைக் கொடுக்கக்கூடிய ஒன்றாகும்:
- அவர் கோபப்படவில்லை.அவர்களுடைய மாய்மாலத்தையும் (வ18) வேதாகமம் பேசப்படும் காரியத்தைக் குறித்து என்ன போதிக்கிறது என்பதைக் குறித்த அவர்களுடைய அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பதிலுரைக்காமல் இயேசு விலகிச் செல்லவில்லை (வ.29)அவர்களுடைய கேள்விகளுக்கு மறைமுகமாக பதிலுரைத்தாரே தவிர கேள்விகளை அவர் தவிர்த்துவிடவில்லை.அவர் தம்முடைய சாட்சியை அவர்களோடு பகிர்ந்துகொள்ளவில்லை.அகவயப்பட்ட பதில்களை அவர் கொடுக்கவில்லை.அவர் தம்முடைய கருத்துக்களை வலியுறுத்தும்படியான கேள்விகளையே கேட்டார் (வ.41-45).
வேதாகம கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையில் நாம் கிறிஸ்தவத்தை ஒருவேளை உண்மையாக இருக்கலாம் என்ற போக்கில் முன்வைப்பதில்லை. கிறிஸ்தவமே உண்மை என்ற உறுதியில் முன்வைக்கிறோம். வேதாகமம் கடவுளைக் குறித்து நிச்சயத்துடன் பேசுகிறது. அப்போஸ்தலனாகிய பேதுரு அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தில் காப்புரை வாதத்தில் ஈடுபடுவதைக் கவனியுங்கள்.
”ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்” (அப். 2:36).
தான் சொல்வது உண்மையாக இருக்கலாம் என்று பேதுரு சொல்லவில்லை; மாறாக அது நிச்சயமானது என்று குறிப்பிடுகிறார். இந்த இடத்தில் “ἀσφαλῶς.” என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. புதிய ஏற்பாட்டின் மற்ற இடங்களில் இந்த சொல் ஒருவரைப் பத்திரமாகப் பிடித்து வைத்திருப்பது என்று பொருள் தரும் வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது (அப். 16:23, மாற்கு 14:44). நமக்குப் போதிக்கப்பட்டவை நிச்சயம் என்று அறிந்துகொள்ளத்தக்க வகையில் அது கடவுளுடைய வார்த்தையாக வந்திருக்கிறது என்பதே லூக்காவின் நிலைப்பாடு (லூக்கா 1:4). “எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள்நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே.” (1தெசலோனிக்கெயர் 1:5).