Previous Chapter -- Next Chapter
4.5. தூண் 5: ஹஜ் (புனிதப்பயணம்)
ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்தாவது தூண். சவுதி அரேபியாவில் அமைந்துள்ள புனித நகரங்களான மெக்கா மற்றும் மதீனாவிலுள்ள புனித தலங்களுக்கு செய்யப்படும் யாத்திரையே ஹஜ் ஆகும். இது இஸ்லாமிய நாட்காட்டியின்படி ஒவ்வொரு ஆண்டும் அதே காலத்தில் நடைபெறுகிறது. சகல தடைகளும் நீங்கிய, வயது வந்த, ஆரோக்கியமான மற்றும் செலவு செய்யும் நிலையிலுள்ள ஒவ்வொரு சுதந்திர முஸ்லீமும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறை ஹஜ் பயணம் செய்வது கடமையாகும். இஸ்லாமிய நம்பிக்கையின்படி, ஹஜ் கடமைகள் இப்ராஹிம் (ஆபிரகாம்) நபியின் காலத்திற்கு சென்றடைகின்றன. ஆதம் அவர்களால் முதன் முதலில் கட்டப்பட்ட பின்னர், அதனை மீண்டும் கட்டியெழுப்பித்தவர் இப்ராஹிம் நபி என்று கூறப்படுகிறது. ஹஜ் துல்ஹஜ் மாதத்தின் (இஸ்லாமிய காலண்டரின்படி கடைசி மாதம்) எட்டாவது நாளில் தொடங்கி, அதே மாதத்தின் பதின்மூன்றாம் நாளில் முடிவடைகிறது.
ஹஜ் என்பது பல்வேறு சடங்குகளை உள்ளடக்கியது. ஹஜ், இஹ்ராம் என்று அழைக்கப்படும் ஆயத்தங்களுடன் தொடங்குகிறது. ஆண்களுக்கு, இது இரண்டு வெள்ளை அங்கிகளை அணிவதை உள்ளடக்கியது. ஒன்று இடுப்பைச் சுற்றி முழங்கால் கீழே வரை இருக்கும், மற்றொன்று இடது தோளில் போர்த்தப்பட்டு வலது பக்கத்தில் கட்டப்படும். பெண்கள் எந்த நிறத்திலும் சாதாரண ஆடையை அணிந்து, தலையை மூட வேண்டும், ஆனால் கைகள் மற்றும் முகம் மூடப்படாமல் இருக்க வேண்டும். இஹ்ராம் கட்டிய பின்னர், யாத்திரிகர் உடலுறவு கொள்வதிலிருந்தும், முடி வெட்டுவதிலிருந்து, நகங்களை வெட்டுவதிலிருந்தும், மணம் தரும் எண்ணெய்களைப் பயன்படுத்துவதிலிருந்தும், விலங்குகளைக் கொல்வதிலிருந்தும், சண்டையிடுவதிலிருந்தும் விலக வேண்டும். இஹ்ராம் கட்டிய பின்னர், பெண்கள் தங்கள் முகங்களை மறைத்துக் கொள்ளக்கூடாது, தங்கள் சொந்த நாட்டில் அவ்வாறு செய்ய வேண்டியிருந்தாலும் கூட. ஆண்கள் தைக்கப்பட்ட ஆடைகளை அணியக்கூடாது. குளிப்பது அனுமதிக்கப்படுகிறது, ஆனால் வாசனை சோப்புகளை தவிர்ப்பது நல்லது.
இஹ்ராம் கட்டிய பின்னர், முஸ்லீம்கள் தங்கள் நோக்கத்தை அல்லது நியாவை (Niyah) தெரிவிக்க வேண்டும். ஹஜ் கடமைகள் துவங்குவதற்கு முன்னதாக, முஸ்லீம்கள் துல்ஹஜ் மாதத்தின் எட்டாவது நாளில் மெக்காவிலுள்ள மினா பகுதிக்குச் சென்று மறுநாள் விடியும் வரை அங்கே தங்கியிருப்பார்கள். முன்னதாக மினா பகுதியில் தங்கியிருந்த பின்னர், ஹஜ் யாத்திரிகர்கள் அரபாத் என்ற பள்ளத்தாக்குக்குச் சென்று அங்கு திறந்த வெளியில் நின்று அல்லாவைப் போற்றுகிறார்கள். அன்றைய நாள் முடிவில், அருகிலுள்ள முஜ்தாலிபா என்ற பகுதிக்கு இரவு தங்கச் செல்கிறார்கள். அங்கு அடுத்த நாள் பயன்படுத்த சிறிய கற்களை சேகரிக்கிறார்கள். காலை நேரத்தில் மீண்டும் மினா பகுதிக்கு திரும்பி, ஜமாராத் எனும் தூண்களை நோக்கி சேகரித்த கற்களை எறிகிறார்கள். இந்தக் கல் தூண்கள் ஷைத்தானைக் (சாத்தானைக்) குறிக்கின்றன. அவர்கள் இப்ராஹிம் நபியின் கதையையும், அவரது மகனையும் நினைவுகூர்ந்து ஒரு பலி செலுத்துகிறார்கள். அவரது மகன் இஸ்மாயில் அல்லது இஸ்மவேல் என்று அவர்கள் நம்புகிறார்கள். இது பைபிள் கதையில் குறிப்பிடப்படும் ஈசாக்கைப் பற்றிய கதையிலிருந்து வேறுபடுகிறது. இதற்காக, பாரம்பரிய முறையில் ஆடு அல்லது செம்மறி ஆடு பலியிடப்படுகிறது. இருப்பினும், இன்று பல யாத்திரிகர்கள் ஹஜ் தொடங்குவதற்கு முன்பே மெக்காவில் பலிக்காக ஒரு கூப்பனை வாங்குகிறார்கள். இதன் மூலம், ஹஜ்ஜின் 10ம் நாளில், யாத்திரிகர் நேரில் இல்லாமலேயே, அல்லாவின் பெயரில் அங்கு ஒரு விலங்கு பலியிடப்படுகிறது. எவ்வாறாயினும், இறைச்சி ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்குப் பிறகு, ஆண்களுக்கு மொட்டையடித்து, பெண்கள் தலைமுடியில் ஒரு ஜடைப்பிரிவை எடுத்து வெட்டிக்கொள்கிறார்கள். பின்னர், ஹஜ்ஜின் ஒரு முக்கியமான சடங்கான தவாஃப் (Tawaaf) செய்வதற்காக மெக்காவுக்கு திரும்புகிறார்கள். இது காபாவை ஏழு தடவை சுற்றி வருவது ஆகும். அதைத் தொடர்ந்து, மீண்டும் மினா பகுதிக்குச் சென்று அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு சாத்தானைக் குறிக்கும் ஜம்ராத் தூண்கள்மேல் கல்லெறிகிறார்கள்.
துல்ஹஜ் மாதத்தின் பன்னிரண்டாம் நாளில் காபாவைச் சுற்றி விடைபெறும் தவாஃப் (Farewell Tawaf) செய்து, இதுவரை தாங்கள் செய்த அனைத்து பாவங்களுக்கும் அல்லாவிடம் மன்னிப்பு கேட்டு, இதன் மூலம் ஹஜ் முடிவடைகிறது. ஹஜ் முடிந்த பின்னர், பல முஸ்லீம்கள் மதீனாவில் நபிகள் நாயகம் அடக்கம் செய்யப்பட்ட பள்ளிவாசலை சென்று தரிசனம் செய்கிறார்கள். ஆனால், இது ஹஜ்ஜின் கட்டாயமான பகுதியாக இல்லை.
சில முஸ்லீம்கள் இன்று தங்கள் வாழ்நாளில் பல முறை ஹஜ் செல்கிறார்கள், சிலர் தேவை இல்லாவிட்டாலும் கூட ஒவ்வொரு ஆண்டும் செல்கிறார்கள். சில நாடுகளில் ஹஜ் செல்வது என்பது சமூக மற்றும் மத அந்தஸ்துக்கான அடையாளமாக கருதப்படுகிறது; ஒருவர் எத்தனை முறை ஹஜ் செல்கிறாரோ, அவரது அந்தஸ்து அத்தனை உயர்வாக மதிக்கப்படுகிறது.