Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 010 (Paul's use of apologetics)
This page in: -- Chinese -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian

Previous Chapter -- Next Chapter

11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 2 – ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையின் அடிப்படை அணுகுமுறை
8. முன்ஊகக் கிறிஸ்தவ காப்புரைக்கான விவிலிய உதாரணங்கள்

ஆ) பவுல் கொள்கைக் காப்புரையைப் பயன்படுத்துதல்


அப்போஸ்தலர் நடபடிகள் நூலில் பவுல் எவ்வாறு காப்புவாதத்தைப் பயன்படுத்துகிறார் என்பதற்கு இரண்டு முக்கியமான உதாரணங்களைப் பார்க்கலாம். இவற்றில் முதலாவது அப். 17:16-34-ல் இடம் பெறுகிறது. இங்கு பவுல் அத்தேனே நகரத்தின் தத்துவ அறிஞர்களுக்குத் தன்னைப் பற்றிய விளக்கத்தைக் கொடுக்கிறார். அங்கிருந்த கிரேக்கர்களுக்கு சத்தியத்தைப் பிரசங்கிக்க அவர் நடுநிலையான தளத்தில் இருந்து ஆரம்பிக்கவில்லை. ஆரம்பத்திலிருந்தே முழுவதும் வேதாகமத்தின் செய்தியை மட்டுமே சொல்கிறார். ஆனால் அதற்குரிய உதாரணங்களை அவர்களுடைய கிரேக்க இலக்கியத்திலிருந்து எடுத்தாளுகிறார். வேதாகமத்தில் இருந்து பிரசங்கிக்கும் வரை அவர் மூடர்களுக்கு அவர்களுடைய மூடத்தனத்தின்படி நற்செய்தி அறிவிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு கிரேக்கர்களுடைய கலாச்சாரத்திலும் இலக்கியத்திலும் இருந்து மேற்கோள் காண்பித்துப் பேசும்போது அவர்களுடைய மூடத்தனத்தின்படி பேசுகிறார்.

அத்தேனே நகரத்தில் வியாபித்திருந்த சிலைவழிபாட்டைக் கண்டபோது மனம் நொந்த பவுல் தன்னுடைய பேச்சுக்கு செவிகொடுத்தவர்களோடு அதைப் பற்றி பேசுவதற்கு நேரம் எடுத்துக்கொண்டார் (வ. 16). அப்போது “அப்பொழுது எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் சிலர் அவனுடனே வாக்குவாதம்பண்ணினார்கள். சிலர்: ” (ஸ். 18) என்று வாசிக்கிறோம். இந்த இடத்தில் தத்துவ ஞானிகள் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இச் சொல்லை ஒரு நோக்கமின்றி லூக்கா இந்த இடத்தில் பயன்படுத்தவில்லை.

எப்பிக்கூரிய தத்துவத்தைப் பின்பற்றுகிறவர்கள் “பொருள்முதல்வாத அணுத்துவம்” என்ற கொள்கையை நம்புகிறவர்கள். இந்த தத்துவத்தின்படி மெய்மை என்பது வெற்றிடத்தில் அசைந்தாடிக்கொண்டிருக்கும் அணுக்கள் என்று அழைக்கப்படும் அழிக்க முடியாத பொருள் தன்மை வாய்ந்த தனிமங்களால் ஆனது. மனிதர்களும் அப்படிப்பட்ட அணுக்களின் இராட்சத கூட்டுத் தொகுப்பாக இருப்பதால், இந்த பொருள் சார்ந்த அணுக்களுக்கிடையில் ஏற்படும் மோதல்கள் மூலமாகவே ஒன்றுடன் ஒன்று தொடர்பாடல் புரிகிறது. எப்பிக்கூரியர்களைப் பொருத்தவரை அறிவு என்பது வெறும் உணர்வுதான். இந்த உணர்வு என்பது அணுக்களின் அல்லது மனிதர்களின் உணர்வுகளுக்குரிய உறுப்புகளிடையில் ஏற்படும் மோதல்கள்தான். ஆகவே, எப்பிக்கூரியர்களுடைய ஒழுக்கவிதி என்பது மனிதர்களுடைய உணர்வுகளுக்கு அதிக மதிப்பளித்து அவற்றைத் திருப்பதி செய்ய நாடுவதாகும்.

ஸ்தோக்கியர் என்பவர்கள் இந்த அண்டம் அடிப்படையில் பகுத்தறிவு சார்ந்தது என்று நம்பினார்கள். இந்த நியாய தர்மத்தின்படி உருவாகும் விதியின் அடிப்படையில்தான் இயற்கை அனைத்தும் இயங்குகிறது என்றும் அவர்கள் நம்பினார்கள். அவர்களைப் பொருத்தவரை அண்டத்தில் இருப்பது பருப்பொருள் மட்டும்தான், ஆகவே அவை இயங்கும் விதிமுறைகளையும் கணிதத்தையும் படிப்பது இன்றியமையாதது. அவர்களுக்குரிய மிக உயர்வான வாழ்வியல் ஒழுக்க விதி என்பது இயற்கையில் விதிகளுக்கு உட்பட்ட வாழ்க்கை வாழ்வதாகும்.

இங்கு பவுலுக்கும் கிரேக்க தத்துவ ஞானிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு என்பது ஒரு நட்பிணக்கமான சந்திப்பல்ல என்பதைக் கவனியுங்கள். ஞானிகள் பவுல் ஒரு “வாயாடி” என்று கருதினார்கள்( “σπερμολόγος”- என்ற கிரேக்கச் சொல்லின் எழுத்தின்படியான பொருள் “விதை பொறுக்கி”, அதற்கு அங்குமிங்கும் கிடைக்கும் அறிவு விதைகளைப் பொறுக்குகிறவன், புறம் பேசுகிறவன், அல்லது வீணாக அலம்புகிறவன் என்பதாகும் (வ.19). பவுல் அவர்களோடு உரையாடும்போது கண்ணியமாக உரையாடிய போதிலும் அவர்களுடைய தத்துவங்களை ஏற்பதாக அவர் ஒருபோதும் கூறவில்லை. அவர்கள் தொழுகை செய்துவரும் காரியங்களின் பொருள் என்ன என்பதைக் குறித்த அறிவற்ற நிலையில் அவர்கள் காணப்படுகிறார்கள் என்பதை மிகவும் தைரியமாக அவர் அங்கு குறிப்பிட்டார். அங்கு அவர் “அறியப்படாத கடவுளுக்கு” என்று எழுதப்பட்ட ஒரு பலிபீடத்தைக் கண்டு அப்படிப் பேசினார் (வ.23). இங்கே பவுலோடு பேசிக்கொண்டிருந்தவர்கள் தங்களை பெரிய தத்துவ ஞானிகளாகவும் தர்க்கவாதத்தில் வல்லுநர்களாகவும் கருதிக்கொண்டிருந்தவர்கள் என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள். அவர்கள் நினைத்தபடி அவர்கள் ஞானிகளாக இருந்திருந்தால், தங்களுக்குரிய கடவுள்களைப் பற்றி பேசும்போது, அத்தெய்வங்களில் ஒன்றுக்கு அவர்களே “அறியப்படாத தெய்வம்” என்று பெயரிட்டதன் மூலம், தாங்கள் பேசும் கடவுளைப் பற்றி தங்களுக்கே தெரியவில்லை என்பதை அறிந்திருப்பார்கள்.

பவுல், தொடர்ந்து வேதாகம சத்தியமாகிய படைப்பைப் பற்றிப் பேசினார் (வ.24). எப்பிக்கூரியர் மற்றும் ஸ்தோக்கியர் ஆகிய இரு சாராரும் படைப்பை நம்புவதில்லை. கடவுள்களும் மனிதர்களும் ஒரே பொருளினால் உருவாக்கப்பட்ட காரணத்தினால் ஒன்று மற்றொன்றைப் படைக்க முடியாது என்று எப்பிக்கூரியர் நம்பினார்கள். ஸ்தோக்கியரைப் பொருத்தவரை கடவுளுக்கும் இவ்வுலகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை, ஏனெனில் கடவுள்கள் என்று யாரும் இல்லை. இருக்கும் ஒரே கடவுள் இந்த உலகம் மட்டும்தான்.

அடுத்து மனிதக் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் கடவுள் வாழ்வதில்லை என்பதை பவுல் சொல்லும்போது (வ.24), எந்த இடத்தில் நின்று கொண்டு இதைச் சொல்கிறார் என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அத்தேனே நகரத்தில் இருந்த ஏரோபேகஸ் என்ற இடத்தில் நின்றுகொண்டுதான் பவுல் அதைக் குறிப்பிடுகிறார். அவர் நின்று கொண்டிருந்த மேடைக்குப் பின்னால் இருந்த மலையில்தான் அவர்கள் பார்த்தனான் என்ற வழிபாட்டிடத்தைக் கட்டி தங்கள் தேவர்களையும் தேவியர்களையும் வழிபட்டு வந்தார்கள். ஆகவே, இந்தக் கூற்றின் மூலமாக பவுல் கிரேக்கர்களுடைய வழிபாட்டுத் தளங்களில் நடைபெறும் காரியங்களை விமர்சித்துப் பேசுகிறார்.

வேதாகம ரீதியான பவுலுடைய கூற்றுகள் ஒவ்வொன்றும் இந்த ஞானிகளுடைய போதனைகளுக்கு எதிரானவையாகவே இருந்தன. கிரேக்க சிலைவழிபாட்டு நம்பிக்கையின் முன்னுக்குப்பின் முரணான தன்மையை அவர்களுடைய புலவர்களில் ஒருவருடைய எழுத்துக்களைப் பயன்படுத்தியே பவுல் எடுத்துரைக்கிறார். அந்த புலவருடைய பெயர் எபிமினைட்ஸ் என்பதாகும். அறியப்படாத கடவுளுக்கு ஒரு தேவாலயத்தைக் கட்டும் முயற்சிக்குப் பின்னால் இருந்தவர் இவர்தான். (Diogenes Laertios, Life and Teachings of the Philosophers, 1,110). இந்த இடத்தில் பவுல் ஒரு நடுநிலையான தளத்தைப் பயன்படுத்தி அங்கிருந்து நற்செய்தியை அறிவிக்க முயற்சிக்கிறார் என்று பல கிறிஸ்தவ கொள்கைக் காப்பாளர்கள் சிந்திக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. பவுல் மேற்கோள் காட்டும் எபிமினைட்ஸின் பாட்டு (வ.28) சீயஸ் என்ற தெய்வத்தை நோக்கிப் பாடப்பட்டது.

“பரிசுத்தமும் உன்னதமுமான உனக்கு அவர்கள் ஒரு கல்லறையைக் கட்டினார்கள்,
கிரேத்தாத் தீவார் ஓயாப் பொய்யர் கொடிய மிருகங்கள் பெருவயிற்றுச் சோம்பேறிகள்.
ஆனால் நீ மரணமடையவில்லை, நீ வாழ்கிறாய், என்றும் நிலைத்திருப்பாய்,
ஏனெனில், உன்னில் நாங்கள் வாழ்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்”

இந்த பாடலின் கடைசிப் பகுதியை மேற்கோள் காட்டும்போது பவுல் சீயஸ் என்ற தெய்வத்தை ஆராதிக்கவில்லை அல்லது அந்த பாடல் நம்பத் தகுந்தது என்று கூறவும் இல்லை. அங்கு அவர் செய்வதெல்லாம் அவர்களுடைய புலவர்கள் கூட கடவுளைக் குறித்த அறிவைப் பெற்றிருக்கிறார்கள் என்பதைக் காண்பித்தது மட்டுமே.

கிறிஸ்தவ இறையியலாளரான நெட் ஸ்டோன்ஹவுஸ் (Ned Stonehouse) என்பார் இவ்வாறு எழுதுகிறார்: “இவ்வாறு இவர்கள் பெற்றுக்கொண்டுள்ள தெய்வீக வெளிப்பாடு பயனற்றதாக இருக்கவில்லை, ஏனெனில் அது அவர்களுக்கு உண்மையுடன் தொடர்பு ஏற்படும்படி செய்தது. ஆனால் அவர்கள் அடிப்படையில் உண்மையை வெறுப்பவர்களாக இருந்த காரணத்தினால் அதை அநியாயத்தினால் அடக்கி வைத்தார்கள் (ரோமர் 1:18). இவ்வாறு மீட்கப்பட்ட கடவுளின் பிள்ளைகள் அனுபவிக்கும் கடவுளின் அறிவுக்கும் மற்றவர்களுக்கிருக்கிற அறியாமைக்கும் இடையில் உள்ள பாரிய வேறுபாட்டை பவுல் வலியுறுத்துகிறார். அதே வேளையில் பவுல், பிற நம்பிக்கையைச் சேர்ந்தவர்கள் கடவுளின் படைப்புகளாக இருப்பதால், அவர்கள் இறைவனுடைய வெளிப்பாட்டிற்கு முன்பாக வரும்போது, அவர்கள் பிற நம்பிக்கை அமைப்புகளுக்கு விலகி நிற்கும்போது, எவ்வளவு தூரம் அவர்கள் விலகி நிற்கிறார்களோ அவ்வளவு தூரம் இறை வெளிப்பாட்டிற்கு உகந்தவாறு மறுசெயல் புரியக் கூடியவர்களாக இருப்பார்கள் என்பதையும் முரண்பாடின்றி முழுமையாகக் குறிப்பிடுகிறார். இவ்வாறு, அவர்களுடைய நம்பிக்கையின் சூழமைவில் முற்றிலும் கிறிஸ்தவத்திற்கு ஒவ்வாததும் எதிரானதுமான சிந்தனைகள், ஒரு குறிப்பிட்ட தூரம் வரை கடவுளுடைய வெளிப்பாட்டின் புரிதலாக ஏற்றுக்கொள்ளப்பட முடியும். பாவத்தில் வாழ்ந்தாலும், அறியாமையினால் உண்மையை அடக்கிப் போட்டாலும், கடவுளுடைய படைப்புகளாக அவர்கள் ஒரே கடவுள் குறித்த உணர்வைத் தங்களில் சுமந்து திரிவதால், கடவுளைப் பற்றியும் தாங்கள் கடவுளுடைய படைப்புகள் என்பதைப் பற்றியும் ஒரு வகையான விழிப்புணர்வு அவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் உண்மையை அறியாமல் அதற்கு எதிரானவர்களாக இருப்பதால், கடவுளையும் தாங்கள் கடவுளின் படைப்புகள் என்பதையும் குறித்த அவர்களுடைய விழிப்புணர்வு, அவர்களுடைய நம்பிக்கையின் பின்னணியில் தங்கள் வாழ்க்கையையும் சிந்தனைகளையும் புரிந்துகொள்வதற்கு சரியான வழிகாட்டுதலைக் கொடுக்க முடியாத நிலை காணப்படுகிறது. ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல், அவர்கள் கடவுளுடைய படைப்புகள் என்பதையும், அவர்களுடைய நம்பிக்கை மற்றும் நடைமுறைகளையும் பற்றி கவனமாகச் சிந்தித்துப் பார்த்த போது, அவர்களுடைய இறை நம்பிக்கையில் அவர்கள் உண்மையை அடக்கினாலும் திரித்துக் கூறினாலும் உண்மையைக் குறித்த ஒரு குறிப்பிட்ட அளவிலான முன்ஊகத்தைக் அந்த புலவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை கண்டு கொள்கிறார். இவ்வாறு அவர்கள் அறியாதிருக்கிற ஒருவரை அவர்களுக்கு அறிவிப்பதுதான் அவருடைய முதன்மையான பணியாக இருந்தபோதிலும், அவ்வாறு அறிவிப்பதற்கு ஏகாதியபத்யமுள்ள கடவுளுக்கும் அவருடைய படைப்புகளுக்கும் இடையில் உள்ள உறவைக் குறித்த பிறநம்பிக்கையாளர்களின் சிந்தனைகளுக்கு அவர்களுடைய கவனத்தைத் திருப்புகிறார்.” (The Areopagus Address, N. B. Stonehouse P38)

கிரேக்க தத்துவ ஞானிகளுக்கு வேதாகமச் செய்தியைச் சொல்லும் பவுல் (வ.28), தொடர்ந்து கிரேக்க கல்வியியல் கவிஞரான அரேடஸ் என்பவரை மேற்கோள் காட்டுகிறார்: அவர் சீயஸ் என்ற தெய்வத்தைக் குறித்து, “நாங்கள் கடவுளுடைய சந்ததியாயிருக்கிறோம்” என்று சொல்லியிருக்கிறார் (Aratus, Phaenomena, line 5). பவுல் இந்த சொற்றொடரை வேதாகமத்தின் கடவுளுக்கு உரியதாக கோருகிறார். ஆனால், இங்கு பவுல் பேசிக்கொண்டிருக்கும் ஞானிகளில் சிலர் பொருள்முதல்வாத நாத்திகர்கள், சிலர் பகுத்தறிவுவாத தத்துவத்தை நம்புகிறவர்கள். அப்படியிருக்க, இந்த கவிஞர் சொல்லும் காரியம் அவர்களுடைய உலகப் பார்வைக்கு எந்தப் பொருளையும் கொடுத்திருக்க முடியாது. எப்பிக்கூரியர்களுடைய உலகத்தில் யாரும் கடவுளுக்கு சந்ததியாக இருக்க முடியாது, ஏனெனில் கடவுள்களும் மனிதர்களும் வெறும் பொருட்கள்தான். ஸ்தோக்கியரும் இந்த அண்டம் முழுமையுமே வெறும் பொருட்களால் ஆனது என்றுதான் நம்பினார்கள். மேலும் அவர்கள் நம்பியது: “அண்டமே கடவுளாக இருப்பதுடன் அவரே அண்டத்தின் ஆத்துமாவாக ஊற்றப்படுகிறார்; அவரே உலகத்தை வழிநடத்தும் விதியாக இருக்கிறார். அதற்காக அவர் மனங்களிலும் அறிவிலும் செயல்படுகிறார். அனைத்தின் தன்மைகளும் இருப்பும் இந்த விதியினால்தான் இயங்குகிறது. மேலும் கடவுள் எதிர்காலத்தின் வல்லமை மற்றும் தேவையின் முன்நிர்ணயமாகவும் இருக்கிறார். அவர் காற்று மற்றும் ஆகாயத்தின் விதியாகவும், அந்த தனிமங்களாகவும், நீர், நிலம், காற்று ஆகியவற்றின் ஒரு நிலையில் இருந்து மறு நிலைக்குமாறும் தன்மையாகவும் இருக்கிறார். அவரே சூரியனாக, சந்திரனாக, அனைத்துப் பொருட்களையும் உள்ளடக்கியிருக்கிற அண்டத்தின் இருப்பாகவும் இருக்கிறார்” (Cicero, De Natura Deorum, i. 39, ridiculing the Stoic philosopher Chrysippus).

இதே பாடத்தை இன்னொரு மொழி பெயர்ப்பு இவ்விதமாகத் தருகிறது: “கிறிசிபஸ் (ஒரு ஸ்தோக்கிய தத்துவஞானி) ... உலகத்தைத்தான் கடவுள் என்று அழைப்பதோடு, அவர் உலகம் அனைத்தையும் ஊடுருவிப் போகும் ஆத்துமா என்றும் அறிவையும் பகுத்தறியும் திறனையும் அனைத்தையும் உள்ளடக்கிய இயற்கையின் காரியங்களையும் வழிநடத்திச் செல்லும் அந்த ஆத்துமாவின் தத்துவம் என்றும் அழைக்கிறார். மேலும் விதியின் வல்லமை என்றும் எதிர்கால நிகழ்வுகளை அவசியமாக்குவது என்றும் அழைக்கிறார். அதையும் தாண்டி முன்பு நான் ஆகாயம் என்று அழைத்த நெருப்பையும் தண்ணீர், காற்று, பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகிய கரைக்கின்ற அல்லது கரைந்து போகக்கூடிய பொருட்களையும் அனைத்துப் பொருட்களையும் உள்ளடக்கிய பொருட்களின் ஒற்றுமையையும் கடவுள் என்று அழைக்கிறார் (Cicero, De Natura Deorum. i. 39, translated by H. Reackham, Harvard University Press, 1967, p. 41)

ஸ்தோக்கிய தத்துவத்தின் அடிப்படையில் பார்த்தால் முழு அண்டமும் உள்ளடங்கிய கடவுளுக்கு சாதாரண பொருளாகிய மனிதன் எப்படி சந்ததி ஆக முடியும்? எப்பிக்கூரியருடைய உலக நோக்கை எடுத்துக்கொண்டால், அனைத்துமே அணுக்களால் உருவாக்கப்பட்டது என்றால் கடவுள்களுக்கும் மனிதர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன? ஆகவே, இந்த இடத்தில் பவுல் நடுநிலையான உண்மை என்ற ஒரு தளத்தைக் கண்டுபிடிக்காமல், வேதாகமம் போதிக்கும் உண்மைகளை அவர்களுடைய புலவர்கள் பயன்படுத்திய சொற்களைப் பயன்படுத்தி முன்வைக்கிறார். அது அவர்களுடைய உபதேசங்களுக்கு முற்றிலும் எதிரிடையாகவே இருக்கிறது.

பவுல் உயிர்த்தெழுதலைப் பற்றி பேச ஆரம்பித்தவுடன் அவர்களால் தொடர்ந்து பொறுமையாகக் கேட்க முடியவில்லை (வ.31). அத்தேனே நகரத்தாருடைய அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று என்னவென்றால் மரணம்தான் மனிதனுடைய முடிவு என்பது. இது ஏஸிலஸ் என்பவர் எழுதிய யூமெனைட்ஸ் என்ற நூலில் காணப்படுகிறது (Aeschylus, The Eumenides, 649-651) : “தாகமுள்ள மண் மனிதனின் உயிர் இரத்தத்தைக் குடிக்கும்போது, அவன் ஒரு முறை மரணமடைந்துவிட்டால், அதன் பிறகு அவனுக்கு உயிர்த்தெழுதல் என்பது கிடையாது. இந்த தருணத்தில் பவுல் அவர்களுடைய போதனைகள் அனைத்துக்கும் எதிராகப் போதித்துக்கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு அவர்களால் பதிலுரைக்க முடியவில்லை. அவர்கள் வணங்குகிற ஒரு கடவுளைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது என்று அவர்கள் ஏற்கனவே ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் பவுலை இகழ்வதை மட்டுமே நாம் பார்க்கிறோம் (வ.32). அவரை இகழாதவர்கள் இன்னொரு முறை அவருடைய பேச்சைக் கேட்க விரும்பினார்கள் (ஒரு வேளை அவர்கள் பவுலுடைய கேள்விகளுக்கு அப்போது பதிலுரைக்கலாம் என்று கருதியிருக்கலாம்). மத்தேயு 22-ம் அதிகாரத்தில் இயேசுவிடம் யாரும் எதுவும் கேட்கத் துணியாதது போலவே பவுலுடைய இந்த பேச்சைக் கேட்ட பிறகும் மக்கள் அப்படித்தான் அமைதியானார்கள். இங்கு வேற்று நம்பிக்கையாளர்கள் கேள்விகளுக்கு பதில்களைப் பெற்றுக்கொள்வதைவிட, தங்களுடைய நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் இந்த இடத்தில் பார்க்கிறோம்.

ஆகவே, பவுல் வேதாகம சத்தியங்களை ஒரு நடுநிலையான தளத்தில் இருந்து நிரூபிக்க விளையாமல், வேதாகமத்தின் சத்தியங்களை அத்தேனர்கள் தங்கள் வேதாகமத்திற்கு முரணான அவர்களுடைய சூழமைவில் அந்த தத்துவ ஞானிகள் அறிவித்த காரியங்களுக்கு எதிரான வேதாகம சத்தியங்களை தைரியமாக அதே வேளையில் அவர்களுடைய புலவர்களுடைய முன்ஊகங்களின் அடிப்படையில் அறிவித்துக்கொண்டிருந்தார். இங்கு பவுல் வேதாகம வசனங்கள் எதையும் மேற்கோள் காட்டாவிட்டாலும் அவர் பேசிய காரியங்கள் அனைத்தும் வேதாகமத்தின் போதனைகளாயிருந்தன.

இரண்டாவது உதாரணத்தை நாம் அப்போஸ்தலர் 26:1-32-ல் வாசிக்கிறோம். இங்கு பவுலை ரோம ஆளுனராகிய பெஸ்து என்பவரும் யூத வம்சத்தோடு தொடர்புள்ள ஏதோமிய மன்னாக இருந்த ஏரோது அகிரிப்பா என்பவரும் சேர்ந்து நியாயம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசனாகிய அகிரிப்பா யூதர்களுடைய சமய சடங்குகளுக்குக் கொஞ்சம் மதிப்பளிப்பவர். அகிரிப்பா அரசனுடைய யூதப் பின்னணியை அறிந்திருப்பதால், அவர் பவுலோடு என்ன விவாதித்திருப்பார் என்பதை நாம் இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும். அடிப்படையான ஒரு கேள்வியைக் கேட்பதன் மூலமாகவே பவுல் தன்னுடைய பேச்சை ஆரம்பிக்கிறார்: “தேவன் மரித்தோரை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன?” (அப். 26:8)

இதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்! மரணமடைந்தவர்கள் உயிரோடு எழுந்து வருவதில்லை என்று சொல்வதற்கு அரசனாகிய அகிரிப்பாவுக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும்? இதுவரை மரணமடைந்தவர்களில் ஒருவரும் ஒருபோதும் உயிரோடு எழும்பவில்லை என்று அவர் அறிந்திருக்க வேண்டும். அவர் ஆய்வு செய்து அறியக்கூடிய கடந்த காலத்தில் மரணமடைந்தவர்களைப் பற்றி மட்டுமல்ல, அவர் ஆராய்ந்து அறிய முடியாத கடந்த காலத்தில் மரணமடைந்தவர்கள் மற்றும் ஆய்வு செய்து அறியப்படாத நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திலும் மரணமடைந்தவர்கள் அனைவரைப் பற்றியும் அவர் அறிந்திருக்க வேண்டும். அதாவது, அரசனாகிய அகிரிப்பா சொல்லின்படி அனைத்தையும் அறிந்தவராக இருந்தால் மட்டும்தான் மரணமடைந்தவர்கள் உயிரோடு எழுந்து வருவதில்லை என்பதை உறுதியாகக் கூறமுடியும். அடிப்படையில் அவ்வாறு கூறுவதற்கு அவர் கடவுளாயிருக்க வேண்டும். ஆனால், அவர் ஒருவேளை கடவுளாக இருந்தால், உயிர்த்தெழுதல் என்பது ஒரு பிரச்சனையாகவே இருக்காது. பவுலுடைய கேள்வி அற்புதங்களைப் பற்றி அரசனாகிய அகிரிப்பாவுக்கு இருந்த அவநம்பிக்கையை வெளிப்படுத்தியது.

அதே அதிகாரத்தின் பிற்பகுதியில் பவுல் அகிரிப்பாவைப் பார்த்து இவ்வாறு கேட்கிறார்: “அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா? விசுவாசிக்கிறீரென்று அறிவேன் என்றான்.”(அப். 26:27). இக்கேள்வி அரசரைச் சிக்கலுக்குள்ளாக்கியது. ஆம் என்று சொன்னால், தீர்க்கதரிசிகள் முன்னறிவித்த உயிர்த்தெழுதலை அல்லது மேசியாவாகிய நபரை நீர் ஏன் நம்பவில்லை என்று பவுல் கேட்பார். இல்லை என்று சொன்னால் அவரே யூதர்களுடைய பார்வையில் தனக்குப் பிரச்சனையை வரவழைப்பவராக இருப்பார். அகிரிப்பா பவுலுக்குக் கொடுத்த பதில் அத்தேனே நகரத்தார் பவுலுக்குக் கொடுத்த பதிலுக்கு ஒத்த பதிலாகவே இருந்தது. அவர் கேள்வியைத் தவிர்த்தார்! “அப்பொழுது அகிரிப்பா பவுலை நோக்கி: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றான்.” (அப். 26:28).

கடவுளுடைய வார்த்தையின் உண்மைத் தன்மையின் மீதுதான் இந்த விவாதம் முழுவதும் கட்டியெழுப்பப்படுகிறது. கடவுளுடைய வார்த்தையை பவுல் தைரியமாக அறிவித்ததைப் பார்த்த பெஸ்து கலக்கமடைகிறார்: “இவ்விதமாய் அவன் தனக்காக உத்தரவு சொல்லுகையில், பெஸ்து உரத்த சத்தமாய்: பவுலே, நீ பிதற்றுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான்.” (அப். 26:24). இந்த இடத்திலும் மார்ஸ் மேடையில் நடைபெற்றதைப் போல நடைபெறுகிறதைப் பார்க்கிறோம். அதாவது, வேற்று நம்பிக்கையாளர்கள் தாங்கள் தெளிவாக புரிந்துகொண்ட வேதாகமத்தின் உண்மைகளைப் பற்றி அசௌகரியம் அடைந்து, அதற்கு பதிலுரைக்க முடியாத நிலையில் பட்டப்பெயர் சூட்டி அழைப்பதில் தஞ்சமடைகிறார்கள்.

அரசரும், ஆளுநரும், அங்கு அமர்ந்திருந்த அனைவரும் அவ்விடத்தைவிட்டு எழுந்து செல்வதில்தான் அந்த கலந்துரையாடல் முடிவடைந்தது. விவாதம் முடிவுக்கு வந்துவிட்டது. பவுல் கேட்ட கேள்விகளுக்கு அவர்களிடத்தில் பதில் இல்லை. இன்னும் தொடர்ந்து பவுல் பேசுவதைக் கேட்பதற்கும் அவர்களுக்கு விருப்பம் இல்லை. வேற்று நம்பிக்கையாளர்கள் இவ்வாறு தங்கள் விவாதங்களை முடித்துக்கொள்ளவது அவர்களுக்கு வாடிக்கையானது (மத். 22, பிர. 7). அப்படிப்பட்டவர்களிடத்தில் கீழ்க்காணும் மூன்று எதிர்வினைகளில் ஒன்றைத்தான் நீங்கள் எதிர்பாக்க முடியும்:

1. சிலர் நீங்கள் சொல்வதைக் கேட்டு நகைத்து உங்களைக் கேலி செய்வார்கள்.
2. சிலர் தொடர்ந்து பேசுவதற்கு மறுப்புத் தெரிவிப்பார்கள் (மத். 22-ல் இயேசுவுக்கு நடைபெற்றது போல), அல்லது பேச்சை வளர்த்து, கால தாமதப்படுத்துவார்கள் (அப். 17-ல் பவுலுக்கு நடைபெற்றதைப் போல).
3. இறுதியில், கடவுள் யாருக்கு மனந்திரும்புதலைக் கொடுக்கிறாரோ அவர்கள் மனந்திரும்பி மீட்கப்படுவார்கள்.

அத்தேனே நகரத்தை விட்டுச் சென்று பவுல் கொரிந்துவில் திருச்சபையை நிறுவுகிறார் (அப். 18:1-17). அதன் பிறகு அவர் எபேசுவுக்குச் செல்கிறார் (அப். 19:8, 20:31) அங்கிருந்து அவர் கொரிந்தியருக்கு எழுதும் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?” (1கொரி. 1:20). அக்காலத்தில் தத்துவ ஞானிகளின் தலைநகரமாக விளங்கிய அத்தேனே பட்டணத்தில் சென்று பவுல் வாதிடுகிறார், கிரேக்க தத்துவ ஞானிகளை நேருக்கு நேராக எதிர்கொள்கிறார். அதன் பிறகு அவர் குறிப்பிடுகிறார், “ஞானி ஒருவனும் இல்லை. இவ்வுலகத்தின் ஞானத்தைக் கடவுள் மூடத்தனமாக்கினார்” என்று.

Iநம்பிக்கையற்றவர்களின் மூடத்தனத்தை வெளிப்படுத்துவது நாம் அல்ல, கடவுளே அதைச் செய்கிறார்: “அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேனென்று எழுதியிருக்கிறது.” (1 கொரி. 1:19). நாம் செய்ய வேண்டியதெல்லாம் உண்மையுள்ளவர்களாக இருப்பது மட்டுமே, மற்ற காரியங்களை அவரே செய்து முடிப்பார்!

www.Grace-and-Truth.net

Page last modified on April 12, 2023, at 02:33 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)