Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 012 (Know your audience)
This page in: -- Chinese -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian

Previous Chapter -- Next Chapter

11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 2 – ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையின் அடிப்படை அணுகுமுறை

10. யாருடன் பேசுகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்


நீங்கள் ஒரு சிறந்த கொள்கைக் காப்புரையாளராக இருக்க வேண்டுமாயின் முதலில் நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள் என்பதையும், எதைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். நம்மில் பலர் சில சாதனங்களை முதலில் பயன்படுத்தும்போது, நம்முடைய முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போன பிறகுதான் அந்த சாதனத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை எழுதியிருக்கும் கையேட்டை எடுத்துப் பார்ப்போம். ஆனால், ஏன் நாம் முதலிலேயே அதைப் பயன்படுத்தக் கூடாது. அப்படியே முதலிலேயே நாம் யாருடன் பேசுகிறோம், என்ன பேசுகிறோம் போன்ற காரியங்களை கவனமாகச் சிந்தித்துவிடுவது நல்லது. அதாவது, நாம் முதலிலேயே வேதாகமத்திடம் சென்று நம்பிக்கையற்றவர்களின் தன்மை என்ன, அவர்களுடைய பிரச்சனை என்ன போன்ற காரியங்களை அறிந்துகொள்ள வேண்டும்:

ரோமர் 1:18-22 -- “சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,…”
1 கொரி. 1:18-19 -- “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேனென்று எழுதியிருக்கிறது.”
எபே. 4:17-18 -- “ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள். அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதய கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து;…”
கொலோ. 2:2,3,8 --“அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன். அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயேல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல..”
நீதி. 26:4-5 -- “மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய். மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான். ”

நம்மிடத்தில் கேள்வி கேட்கிறவர்களுக்கு நாம் எவ்வாறு பதிலுரைப்பது என்பதில் இந்த வேதாகமப் பகுதிகள் நமக்கு வழிகாட்டுகின்றன. -- முதலில் நாம் கவனிக்க வேண்டியது, நாம் எதையும் அவநம்பிக்கையாளர்களுக்கு புதிதாகக் கொடுக்கப்போவதில்லை. அவர்களுடைய பிரச்சனை சில தகவல்களை அவர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள் என்பதே. கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை மாற்று நம்பிக்கையாளர்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள் (ரோமர் 1:18), ஆனால் அவருடைய மீட்பைப் பெறும்படி அவர்கள் அவரை அறிந்திருக்கவில்லை. கடவுளுடைய கோபத்தைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள். கடவுள் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிற காரணத்தினால் அவரை அறிந்தவர்களாகவே அவர்கள் இந்த உலகத்திற்குள் வருகிறார்கள் (ரோமர் 1:19). கடவுளைக் குறித்த அறிவுக்குரிய ஆதாரம் அவர்களுக்குள்ளேயே இருக்கிறது.

-- இரண்டாவது, அவநம்பிக்கை என்னும் பிரச்சனை அடிப்படையில் ஆன்மீகப் பிரச்சனை மட்டுமல்ல, அறிவு சார்ந்த பிரச்சனையாகவும் இருக்கிறது. அவநம்பிக்கையாளர்களை வேதாகமம் பின்வருமாறு சித்தரிக்கிறது:

1. அவர்களுடைய சிந்தனையில் அவர்கள் வீணர்கள் (ரோமர் 1:21)
2. அவர்கள் தங்களை ஞானிகள் என்று நினைத்து மூடரானார்கள் (ரோமர் 1:22)
3. அவர்கள் தங்கள் வீணான சிந்தையில் நடக்கிறார்கள் (எபே. 4:17)
4. அவர்களுடைய புத்தி இருளடைந்திருக்கிறது (எபே. 4:18)
5. அறியாமை அவர்களுக்குள் இருக்கிறது (எபே. 4:18)
6. அவர்களுடைய இருதயம் கடினமாயிருக்கிறது (எபே. 4:18)

இந்த உண்மைகள் அவர்களைப் புகழவில்லை. நம்மில் பலர் இப்படி மற்றவர்களைச் சித்தரிப்பதற்குத் தயங்குவோம். உண்மையில் வேதாகமம் அவநம்பிக்கையாளர்கள் என்று சிலரை அழைப்பது கடுமையானது என்று கருதும் இறையியலாளர்களும் காப்புரையாளர்களும் அவர்களை அவநம்பிக்கையாளர்கள் என்று எந்த பிரச்சனையும் இல்லாமல் அழைக்கிறார்கள் என்பது ஒரு நகைமுரணாகும். வேதாகமம் அவநம்பிக்கையாளர்கள் என்று சொல்லும்போது யாரைக் குறிப்பிடுகிறது? நம்பிக்கையில்லாதவர்களை, தண்டிக்கப்பட்டவர்களை, கடவுளுடைய நித்திய தண்டனையைப் பெறப்போகிறவர்களையே அப்படி அழைக்கிறது. ஆனால், இவ்வளவு கடினமாக சொல்லாடலை வேதாகமம் பயன்படுத்துவதற்கு ஒரு நல்ல காரணம் இருக்கிறது. கிறிஸ்துவைப் பற்றி வேதாகமம் இவ்வாறு பேசுகிறது, “அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.” (கொலோ. 2:3). அவருக்குள் ஞானத்தின் பொக்கிஷங்கள் அனைத்தும் அடங்கியிருந்தால் அவருக்கு வெளியே ஞானம் இல்லை. மற்ற காரியங்கள் அனைத்தும் தவறான முறையில் ஞானம் என்று அழைக்கப்படுகிறது (1 தீமோ. 6:20). ஆகவே, வேதாகமம் இப்படிப் பட்ட மொழிநடையைப் பயன்படுத்தும்போது, நாம் மற்றவர்களுக்கு பெயரிட்டு அழைக்க வேண்டும் என்பதற்காகப் பேசாமல், பிடிவாதமுள்ளவர்களும், தங்கள் தவறுகளை உணரத் தவறுகிறவர்களும், அறிவையும் புரிதலையும் பற்றி எந்த கவலையும் அற்றவர்களையும், தங்களுடைய சத்தத்தை மட்டுமே கேட்க விரும்புகிறவர்களையும் (நீதி. 18:2), தங்கள் மூடத்தனத்தின் விளைவுகளுக்கு மீண்டும் மீண்டும் திரும்புகிறவர்களையும் (நீதி. 26:11) குறிக்கும்படியே பயன்படுத்துகிறது. அவர்கள் அறிவுத் திறன் இல்லாதவர்கள் அல்ல. ஆனால், மூடத்தனத்தினால் மகிழ்ச்சியடைபவர்கள் (நீதி. 15:14), அவர்கள் என்ன செய்தாலும் அவர்களுடைய மூடத்தனம் அவர்களைவிட்டு நீங்காது (நீதி. 27:22).

-- அதனால்தான், மூன்றாவதாக, பஞ்சபூதக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த உலகத்தின் தத்துவங்களைப் பின்பற்ற வேண்டாம் என்று வேதாகமம் நமக்கு எச்சரிக்கிறது. (கொலோ. 2:8). நம்முடைய தத்துவத்தை கிறிஸ்துவின் மீது கட்ட வேண்டும், நம்முடைய செயல்கள் கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், இதிலுள்ள பிரச்சனை என்னவென்றால் அவநம்பிக்கையாளர்கள் இதற்கு செவிமடுக்க மாட்டார்கள். ஏனெனில், வேதாகமம் சொல்கிறபடி அவர்களுக்கு அறிவில் அதிக ஆர்வம் இல்லை. கிறிஸ்தவ நம்பிக்கை தவறானது என்று அவர்கள் ஏற்கனவே தங்கள் மனதில் தீர்மானித்திருக்கிறார்கள். அப்படியானால் அப்படிப்பட்ட மக்களோடு நாம் எவ்வாறு நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வது? நாம் ஒருவகையில் இங்கு ஒரு சிக்கலான நிலையில் இருக்கிறோம்:

அ) நாம் அவநம்பிக்கையாளர்களின் முன்ஊகங்களை நாம் பின்பற்றினால் அவர்களுடைய முடிவுதான் நமக்கும் நேரிடும். குருடர்களை வழிநடத்தும் குருடர்களாக இருவரும் குழியில் விழ வேண்டியதுதான்.
ஆ) நாம் கிறிஸ்துவின் முன்ஊகங்களைப் பின்பற்றினால் அவநம்பிக்கையாளர்கள் நமக்குச் செவிகொடுக்க மாட்டார்கள்.

இந்தப் பிரச்சனையிலேயே அதற்குரிய பதிலுக்குரிய வழிகாட்டியும் இருக்கிறது. அவநம்பிக்கையாளர்களுடன் நாம் ஒன்று அல்லது இரண்டு காரியங்களில் நாம் வேறுபடுவதில்லை, அவர்களுடைய உலக நோக்கும் நம்முடைய உலக நோக்கும் முற்றிலும் வேறுபட்டதாக இருப்பதுதான் இங்கு பிரச்சனையாக இருக்கிறது. இரண்டு தரப்பினரும் ஒரே காரியத்தை முற்றிலும் இரு வேறு கண்ணோட்டத்திலிருந்து பார்க்கிறார்கள். உதாரணமாக, சிலுவையின் போதனை நமக்கு கடவுளுடைய வல்லமையாகத் தெரிகிறது, அவர்களுக்கோ முட்டாள்தனமாகத் தோன்றுகிறது. சிலுவை மரணம் நடைபெற்றதா இல்லையா என்பதைப் பற்றி நாம் இங்கு பேசவில்லை. சிலுவையைப் பற்றிய முற்றிலும் வேறுபட்ட இருவேறு கண்ணோட்டங்களைப் பற்றிப் பேசுகிறோம்!

நம்முடைய நம்பிக்கைகளில் நாம் தொடர்ச்சியாக நிலைத்திருக்கும்போது, அவநம்பிக்கையாளர்களும் தங்களுடைய நம்பிக்கை எதுவாக இருந்தாலும் அதில் நிலைத்திருக்கும்போது இந்த இரு தரப்புக்கிடையில் எந்த காரியத்திலும் உடன்பாடு ஏற்பட முடியாது!

கிறிஸ்தவ காப்புரையாளராக கொர்நேலியஸ் வான் டில் என்பார் இதை இவ்வாறு விளக்குகிறார்: “கடவுளை நம்புகிற நாம் நம்முடைய இந்த நிலைப்பாட்டை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. பல தருணங்களில் நாங்கள் அவநம்பிக்கையாளர்களாகிய உங்களுடன் பேசும்போது, உண்மைகளைப் பற்றியும் நியாயமான காரணங்களைப் பற்றியும் நம்மிடையே உடன்பாடு இருப்பதைப் போல பேசிக்கொண்டிருக்கிறோம். கடவுளுடைய இருப்பைக் குறித்த வாதப் பிரதிவாதங்களில் நமக்குள் உடன்பாடுள்ளது போல பேசிக்கொண்டிருக்கிறோம். ஆகிலும் நீங்கள் வாழ்வின் எந்த பரிமாணத்தையும் உண்மையாகப் பார்க்கிறீர்கள் என்று நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. உண்மையில் நீங்கள் மரணத்துக்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றி மட்டுமல்ல கோழிக் குஞ்சுகளையும் பசுக்களையும் பற்றி பேசும்போதுகூட வண்ணக் கண்ணாடி அணிந்துகொண்டுதான் அவற்றைப் பார்த்து சிந்திக்கிறீர்கள் பேசுகிறார்கள் என்று நாங்கள் சிந்திக்கிறோம். இதை நாங்கள் இதுவரை உங்களுக்கு சொன்னதைவிட தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அப்படிச் சொல்லும் எங்கள் மாறுபட்ட தீவிர நிலைப்பாட்டை எப்படி நீங்கள் புரிந்துகொள்வீர்களோ என்று நாங்கள் சற்று பயந்து அப்படிச் சொல்லவில்லை. உங்களைக் காயப்படுத்திவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் எங்கள் கடவுளைக் காயப்படுத்திவிட்டோம்” (Cornelius Van Til,Why I believe in God).

-- நான்காவதாக, இப்படிப்பட்ட சிக்கலை நாம் எப்படி மேற்கொள்ள முடியும்? இதற்குரிய பதிலை நாம் நீதி. 26:4-5 –ல் வாசிக்கிறோம். நாம் அவநம்பிக்கையாளர்களிடத்தில் நேரடியாகப் பேச வேண்டும்.

அ) நாம் அவர்களுடைய முன்ஊகங்களைப் பயன்படுத்தி அவை அவர்களை எங்கே இட்டுச் செல்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும். அதாவது மூடன் தன்னுடைய பார்வையில் ஞானியாக இராதபடிக்கு மூடர்களுக்கு அவர்களுடைய மூடத்தனத்தின்படி பதில் சொல்ல வேண்டும் (நீதி. 26:5). வேறு வார்த்தைகளில் சொன்னால் மூடர்களுடைய முன்ஊகங்களை எடுத்துக்கொண்டு, அவற்றின் தர்க்கரீதியான முடிவுகளுக்கு அவர்களை அழைத்துச் செல்வதன் மூலம் அவர்களை வீழ்த்துங்கள்.
ஆ) இரண்டாவது படி என்னவென்றால், நாமும் அவர்களைப் போல மூடராகாதபடி அவர்களுடைய மூடத்தனத்தின்படி அவர்களுக்கு நாம் பதிலுரைக்கக் கூடாது. அதாவது, அவர்களுடைய முன்ஊகத்தின் அடிப்படையில் எழும் பிரச்சனைக்கு நம்முடைய முன்ஊகங்களின் தர்க்கரீதியாக முடிவுகளைக் கொண்டு விடை கொடுங்கள்.

பலருக்கு இது நெருடலாக இருக்கலாம். மிகவும் நல்லவர்களும், இரக்கமுள்ளவர்களும் அறிவாளிகளுமான அவநம்பிக்கையாளர்கள் பலரை தங்களுக்குத் தெரியும் என்று அவர்கள் கருதலாம். ஒன்றை நீங்கள் இந்த இடத்தில் கவனிக்க வேண்டும். அவநம்பிக்கையாளர்கள் ஒழுக்கமில்லாதவர்கள் என்றோ, இரக்கமில்லாதவர்கள் என்றோ, அறிவில்லாதவர்கள் என்றோ நாம் இங்கே குறிப்பிடவில்லை என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறோம். அவர்கள் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டவர்களாக இருப்பதால் அவர்கள் எப்படி ஒழுக்கமில்லாதவர்களாகவும், இரக்கமில்லாதவர்களாகவும், அறிவில்லாதவர்களாகவும் இருக்க முடியும்! நாம் இந்த இடத்தில் சொல்ல வருவதெல்லாம் அவநம்பிக்கையாளர்கள் தாங்கள் நம்புகிற காரியத்தில் முரண்பாடற்றவர்களாக இருக்கவில்லை என்றால் அவர்களுடைய ஒழுக்கமும் அறிவும் எந்தப் பயனுமற்றது என்பதைத்தான். இதைப் பற்றி நாம் மீண்டும் சிந்திப்போம்.

www.Grace-and-Truth.net

Page last modified on April 12, 2023, at 02:46 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)