Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 17-Understanding Islam -- 004 (Jews)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba

Previous Chapter -- Next Chapter

17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பாகம் ஒன்று: இஸ்லாத்தின் தொடக்கத்தைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 1: இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பிருந்த பிராந்தியம்

1.2. யூதர்கள்


முகம்மது நபியின் காலத்தில் யூதர்கள் நிறைய பேர் அரேபியாவில் வேரூன்றி இருந்தார்கள். அந்தச் சமயத்தில் சில நகரங்களை (யத்ரிப் - இன்றைய மதீனா போன்றவை) யூதர்கள் ஆட்சி செய்து வந்தார்கள். இது இன்றைய நிலைக்கு முற்றிலும் மாறுபட்டது. இது பல நூற்றாண்டுகளாக நடந்த பல குடியேற்ற அலைகளின் விளைவாகும்; யூதேயா மற்றும் சமாரியாவில் எப்போதெல்லாம் கொந்தளிப்பு அல்லது துன்புறுத்தல் ஏற்பட்டதோ, அதற்குப் பிறகெல்லாம், அதிக யூதர்கள் தெற்கே அரேபிய தீபகற்பத்திற்கு தப்பிச் செல்வார்கள். இதன் விளைவாக, கி.பி 7ஆம் நூற்றாண்டளவில், யூத சமூகங்கள் அந்தப் பகுதி முழுவதும் குடியேறி இருந்தன. யூத மக்கள் அரேபிய பழங்குடி மக்களுடன் பழகி, வியாபாரம் செய்தாலும், தங்களின் பழக்கவழக்கங்களையும், அப்பகுதியின் மரபுவழக்கங்களையும் கடைபிடிக்கவுமில்லை, பெரும்பாலும் கலப்பு திருமணம் செய்துகொள்ளவுமில்லை. அவர்கள் அங்கேயே குடியேறி நல்ல மதிப்பை பெற்றிருந்தாலும், அரபு கலாச்சாரத்தோடு கலந்துவிடவில்லை.

ஆபிரகாமின் மகன்கள் ஈசாக்கு மற்றும் இஸ்மாயில் வழியாக யூதர்களுக்கும், அரேபிய மக்களுக்கும் பொதுவான மூதாதையர் இருப்பதாக அப்போது பெரும்பாலான மக்கள் நம்பினார்கள். இஸ்மாயிலின் சந்ததியினர் தான் அரேபியர்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், ஆதியாகமத்தில் இஸ்மாயில் தெற்கே பாரான் பாலைவனத்திற்கு (வடக்கு அரேபிய தீபகற்பத்திற்கு அருகில்) பயணம் சென்றதாகக் கூறப்படுவதால், அப்போதைய அரேபியர்கள் அவரது வழித்தோன்றல்கள் என்று கருதப்பட்டது. புதிதாக வந்த யூத மக்கள், தாங்கள் அரேபியர்களின் உறவினர்கள் என்று சொல்லிக்கொள்வதில் ஆர்வம் காட்டாவிட்டாலும், இந்த யோசனை அவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. ஏனென்றால், அப்போதைய அரேபிய கவுரவம் சார்ந்த பழக்கவழக்கங்களின்படி, இது அவர்களுக்கு பாதுகாப்பை அளித்திருக்கும். இதன் விளைவாக, முகம்மது நபி பிறக்கும் வரை, அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே பங்காளி உறவு இருப்பது என்பது அனைவராலும் நம்பப்பட்டது.

பல ஆண்டுகளாக தனித்தனி யூத சமூகங்கள் உருவானதன் விளைவாக, மிகவும் வேறுபட்ட நம்பிக்கைக் கூறுகள் உருவாகின. அவற்றில் பல, எபிரேய பைபிளில் காணப்படும் யூத மதத்தின் பாரம்பரிய நம்பிக்கைகளில் இருந்து கணிசமாக விலகி இருந்தன. பல ஆண்டுகளாக தனித்தனியே இருந்த பல யூத சமூகங்களின் இன்னொரு விளைவு என்னவென்றால், அப்போதைய அரேபியர்கள் பெரும்பாலும் இந்த யூத சமூகங்களுடன் பழக்கத்தில் இருந்திருப்பார்கள், மேலும் அவர்களின் பல்வேறு நம்பிக்கைகளைப் பற்றிய அடிப்படை அறிவு அவர்களுக்கு இருந்திருக்கும். அரேபியாவில் வாழ்ந்த யூத மக்கள், பழைய ஏற்பாட்டில் கடவுள் வாக்களித்த இராஜாவான மேசியாவின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அவர் அவர்களை அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுவித்து வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் செல்வார் என்று நம்பினார்கள். மேசியாவின் வருகை பற்றிய அவர்களின் கதைகள் இப்படி அரேபிய சமூகத்திடையே பரவி, அதைக் கேட்ட அரேபிய மக்களும் ஒரு மீட்பர் அல்லது தீர்க்கதரிசியின் வருகையை எதிர்பார்க்கத் தொடங்கினர். இதுவே முகம்மது நபியின் வருகையையும், அவரது ஒரே கடவுள் கொள்கையையும் ஏற்றுக்கொள்வதற்கான வழியை வகுத்திருக்கலாம்.

www.Grace-and-Truth.net

Page last modified on April 09, 2026, at 02:23 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)