Previous Chapter -- Next Chapter
1.3. கிறிஸ்தவர்கள்
கிறிஸ்தவ மதமும், சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்குப் பிறகு 2ஆம் அல்லது 3ஆம் நூற்றாண்டுகளில் ஏதோ ஒரு சமயம் அரேபிய தீபகற்பத்தை அடைந்திருந்தது. உண்மையில், பெந்தேகோஸ்தே நாளில் (அப்போஸ்தலர் 2:11) எருசலேமில் கூட அரேபியர்கள் இருந்தனர், அப்போதே அவர்கள் கிறிஸ்தவ நற்செய்தியை வடக்கு அரேபியாவிற்கு கொண்டு சென்றிருக்கலாம், இருப்பினும் கிறிஸ்தவம் அரேபிய தீபகற்பத்தின் தெற்கு பகுதிகளில் பரவ இன்னும் கொஞ்சம் காலம் ஆகியிருக்கும். நிச்சயமாக, முகம்மது பிறந்த சமயத்தில், தீபகற்பத்தில் பல்வேறு கிறிஸ்தவ சமூகங்கள் இருந்தன, அவை ஒவ்வொன்றும் இயேசு கிறிஸ்துவின் இயல்பு பற்றிய வேறுபட்ட நம்பிக்கைகளைக் கொண்டிருந்தன. முகம்மது பிறந்த மக்காவிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் இருந்த கிறிஸ்தவர்களில் சிலர் உயர் சமூகத்தைச் சேர்ந்த, பாரம்பரிய அரேபியர்கள் (தெற்கே நஜ்ரானில் உள்ள செல்வாக்குமிக்க வணிகர் குலத்தைப் போன்றவர்கள்). ஆனால், பலர் ரோமானியப் பேரரசின் மாகாணங்களில் இருந்து தப்பி ஓடி வந்த அடிமைகள் அல்லது வடக்கு பகுதிகளில் (பாரசீகர்கள், ஜோர்டானியர்கள், ரோமானியர்கள் மற்றும் கிரேக்கர்கள்) அரேபியர்களின் படையெடுப்புகளில் சிறைப்படுத்தப்பட்ட அடிமைகள் ஆவார்கள். இவர்களுடன் சில தனிப்பட்ட அரேபியர்களும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினர். இவ்வாறு கிறிஸ்தவக் குழுக்களும் தனிநபர்களும் இந்தப் பகுதி முழுவதும் சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் பரவலாக இருந்ததால்தான், முகம்மது உட்பட அனைவரும் கிறிஸ்தவர்களைச் சந்தித்து, அவர்களின் நம்பிக்கைகள் பற்றிய அடிப்படை அறிவைப் பெற்றிருந்திருப்பார்கள். அப்போது, யூத மக்கள் மீட்பரை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்ததைப் போலவே, இயேசு மீண்டும் வந்து தங்களை பரலோகத்திற்கு கொண்டுசெல்வார் என்று கிறிஸ்தவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பது பொதுவான அறிவாக இருந்திருக்கும். என்றாலும், கிறிஸ்தவ நம்பிக்கைகள் மிகவும் பரவலாக இருந்தன, சில கள்ள உபதேசக் கருத்துக்கள் இருந்தாலும், பல்வேறு விளக்கங்கள் இருந்தன. இந்த வேறுபட்ட நம்பிக்கைகளின் தாக்கம் முகம்மதுவின் போதனைகளில் எவ்வாறு இருந்தது என்பதை அடுத்த பாடத்தில் விவாதிப்போம். அரேபியாவிலிருந்த பல்வேறு கிறிஸ்தவ நம்பிக்கைகள், இஸ்லாமிற்கு முந்தைய சமூகத்தின் மத சிந்தனையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்வதற்கு இப்போதைக்கு இதுவே போதும்.