Previous Chapter -- Next Chapter
7.5. கிறிஸ்து திரளான ஜனங்களுக்கு உணவளித்தார்
பரிச்சயமானதாகத் தெரிகிறதா? யோவான் 6-ஆம் அதிகாரத்தில் இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த விவரத்தை நீங்கள் அனைவரும் படித்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் குர்ஆன் இந்தக் கதையை அல்ல, வேறு ஒரு கதையைச் சொல்கிறது.
அப்போஸ்தலர் 10-ல் பேதுருவின் தரிசனம் என்ற மற்றொரு விவிலிய விவரங்களுடன் நீங்கள் ஒற்றுமையைக் காணலாம் என்று நான் நம்புகிறேன். முகமது தனது குழந்தைப் பருவத்தில் தன்னைச் சுற்றியுள்ள கிறிஸ்தவர்களிடமிருந்து கேட்ட இரண்டு கதைகளையும் குழப்பியிருக்க முடியும். இந்தக் கதை எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தது அல்லது இதன் பொருள் என்ன என்பது குர்ஆனிலேயே தெளிவாக இல்லை, எனவே முஸ்லீம்கள் இதைப் பற்றி என்ன நம்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள நாம் விளக்கவுரைகளுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. தேவனிடமிருந்து இயேசு பந்திக்கு போஜனம் கேட்பது பற்றிய பல கதைகளை அவர்கள் கூறுகிறார்கள்; அவற்றில் பெரும்பாலானவை அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும், சாதாரண முஸ்லீம்களிடையே பிரபலமானவை. ஒரு விளக்கவுரையாளர் இயேசு எவ்வாறு இஸ்ரவேலர்களை முப்பது நாட்கள் உபவாசிக்கச் சொன்னார் என்று கூறுகிறார்; அவர்கள் அப்படிச் செய்தபின்பு, அவரிடத்தில் திரும்பிவந்து, தங்களுக்குப் பசிக்கிறது என்றார்கள்; பரலோகத்திலிருந்து தங்களுக்கு ஒரு விருந்தை அனுப்பும்படி அல்லாவிடம் கேட்கும்படி அவர்கள் இயேசுவிடம் கேட்டார்கள். ஆகவே இயேசு கந்தைத் துணிகளைத் தரித்துக்கொண்டு சாம்பலின்மேல் உட்கார்ந்து ஜெபம் செய்தார். தேவதூதர்கள் ஒரு மேஜையோடே வந்தார்கள், அதன்மேல் ஏழு அப்பங்களும் ஏழு மீன்களும் இருந்தன, அவர்கள் ஜனங்களுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள், அவர்கள் எல்லாரும் வயிறு நிரம்பச் சாப்பிட்டார்கள். (இப்னு கதீர், குர்ஆன் விளக்கவுரை 5:112-115).
ஒருவர் தீர்க்கதரிசி என்பதற்கு சான்றாக அற்புதங்கள் இஸ்லாத்தில் ஒரு வரையறுக்கும் பண்பாக இருக்கிறது. ஆனால், முஹம்மது நபி அவர்கள் இதற்கு விதிவிலக்காகக் கருதப்படுகிறார். ஏனென்றால், முந்தைய தலைமுறைகள் முந்தைய தூதர்களின் அற்புதங்களை நம்ப மறுத்ததால், நான் எந்த அற்புதங்களையும் செய்ய மாட்டேன் என்று அல்லா குர்ஆனில் கூறுகிறான் (குர்ஆன் ஒரு அற்புதம் என்று கருதப்படுகிறது என்றாலும், மேலே குறிப்பிடப்பட்டபடி குறைவான நம்பகத்தன்மை வாய்ந்த ஹதீஸ்களிலும் நாட்டுப்புறக் கதைகளிலும் முஹம்மது நபி பிற அற்புதங்கள் செய்ததாக கூறுகின்றன). இஸ்லாமிய தூதர்கள் யாரும் இயேசு செய்த அற்புதங்களைப் போன்று எந்த வகையிலும் நெருங்கி வருவதில்லை. எனவே, இது அவரை மற்ற தூதர்களுக்கு மேலாக நிலை நிறுத்துகிறது. இருப்பினும், அவர் செய்ததாகக் கூறப்படும் சில அற்புதங்கள் அவரை சிறந்த ஒளியில் சித்தரிக்கவில்லை. உதாரணமாக, அப்பாவி குழந்தைகளை பன்றிகளாக மாற்றும் கதை, தீர்க்கதரிசிகள் பாவமற்றவர்கள் என்ற இஸ்லாமியக் கோட்பாட்டிற்கு முரணாக உள்ளது.